
வாழை திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பா. இரஞ்சித் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ஆக.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (ஆக.19) நடைபெற்றது. அதில், இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.இரஞ்சித், மிஷ்கின் மற்றும் நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், “மாரி செல்வராஜ் நல்ல கதை சொல்லி. தன் கதை எப்படி சொன்னால் புரியும் என்பதை நிதானமான மொழியில் சொல்லக்கூடியவர். அப்படித்தான் அவரது திரைப்படங்களைப் பார்க்கிறேன். இன்னும் வெளிப்படையாக வாழை படத்தில் தன் வாழ்க்கையைப் பேசியிருக்கிறார்.
மாரிமேல் இன்னொரு விமர்சனமும் இருக்கிறது. தன் வலியை அமைதியாக பரியேறும் பெருமாள் படத்தில் பதிவு செய்ததால் அவரை ஏற்றுக்கொள்பவர்கள் கர்ணன், மாமன்னன் படங்களில் எதிர்த்து சண்டையிட்டால் ஏற்றுக்கொள்வதில்லை. வன்முறையைத் தூண்டுகிறார் என்கின்றனர். இது மோசமாக இல்லையா? படைப்பாளி எதை எடுக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொண்டே இருப்பீர்களா? உங்களைத் தொந்தரவு செய்யாமல், எனக்கு வலித்தது என்பதை மென்மையாக சொல்லும்போது ஏற்க முடிகிற உங்களால், வலியை இன்னும் அழுத்தமாக சொல்ல முற்படும்போது ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
பரியேறும் பெருமாள் நல்ல படமென்றால் கர்ணம், மாமன்னன் மொக்கை படங்களா? இப்படங்களில் திருப்பி அடிக்கின்றனர். திருப்பி அடித்தால் உங்களுக்குப் பிடிக்காதா? அங்கு என்ன பிரச்னை நடக்கிறது? ஏன் அவன் தன் குரலை உயர்த்துகிறான்? ஏன் இதற்கான சூழலை சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது? இதுகுறித்தெல்லாம் நீங்கள் உங்களிடமே கேள்விகேட்கவே மாட்டீர்களா?” என தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.