
பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.
வந்தா ராஜாவதான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குபட்டி ராமசாமி என பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ள மேகா ஆகாஷின் சமீபத்திய மழை பிடிக்காத மனிதன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது தெலுங்கில் பெயரிடப்படாத இரண்டு படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
சமீபத்தில் தனக்கு நடிகர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததாக புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இவர்கள் இருவரும் ‘பேசினால் போதும் அன்பே’ என்ற குறும்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றின் நேர்காணலின் போது மேகா ஆகாஷ் பேசியதாவது:
சாய் விஷ்ணு எனது நெருங்கிய தோழியின் சகோதரர். அவரை எனக்கு 9 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் 6 வருடங்களாகத்தான் காதலிக்கிறோம். நியூ யார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துள்ளார். பா. இரஞ்சித்தின் காலா, கபாலி படங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், அவருக்கு எப்போதும் சினிமா குறித்த சிந்தனைதான் இருக்கும்.
நான் எதையும் ரகசியமாக வைக்கவில்லை. எனது நண்பர்களுக்கு சாய் விஷ்ணுவை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். ஆனால், எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டிய அவசியமில்லை. நிச்சயமானபிறகு சொல்லாம் என்றிருந்தேன்.
நிச்சயதார்த்தம் பெரிய தலைவலியாக இருக்கவில்லை. எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டதுதான். நான் மிகவும் திட்டமிடலுடன் செயல்படக்கூடியவர். எனது கல்யாணத்துக்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள்கூட இப்போதே தேர்வு செய்து வைத்துள்ளேன்.
நடிகைக்கு திருமணம் ஆனால் சினிமா வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதெல்லாம் இப்போது இல்லை. நான் பார்த்தவரை இந்தக் காலத்தில் இதெல்லாம் சாதாரணம்தான். திருமணம் ஆகியும் நடிக்கும் பல நடிகைகள் இருக்கிறார்கள். திருமணம் ஆன பிறகும் நானாகவே தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் நடிப்பேன் என்றார்.
செப்டம்பர் மாதம் 14,15ஆம் தேதிகளில் திருமண நிகழ்வுகள் நடைபெறுமென நடிகையின் அம்மா பிந்து ஆகாஷ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.