சோ. தர்மனின் 'வாழையடி...' சிறுகதையை வாசித்தேன்: மாரி செல்வராஜ்

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய 'வாழையடி...' சிறுகதை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியது...
Cho Dharman | Mari selvaraj
சோ. தர்மன் | மாரி செல்வராஜ்
Published on
Updated on
1 min read

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய 'வாழையடி...' சிறுகதையை தற்போதுதான் வாசித்தேன் என்றும் அனைவரும் இந்த சிறுகதையை வாசிக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள 'வாழை' திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலா, மிஷ்கின், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதை சாகித்ய அகாதெமி எழுத்தாளர் சோ.தர்மன் எழுதியுள்ள 'வாழையடி...' சிறுகதையை ஒத்து காணப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து சோ. தர்மன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

'ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன்.

என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.

நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய "வாழையடி......" என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.

இச்சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி" என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்."

என்னை வாழை வாழ வைக்கவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில்,

'வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் 'வாழையடி' என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள். எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி' என்று பதிவிட்டு 'வாழையடி...' சிறுகதையின் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com