
நடிகர் யோகி பாபு - சினிமா விமர்சகர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், காக்கா முட்டை படத்திற்குப் பின் தமிழின் முக்கிய நகைச்சுவை நடிகரானார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து இன்று வணிக ரீதியாகவும் அதிக சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் யோகி பாபு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், மறைமுகமாக சினிமா விமர்சகரான பிஸ்மி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து நடத்திவரும் யூடியூப் சேனல் குறித்து பேசினார்.
முக்கியமாக, ’அவர்கள் என்னைப் பற்றி எதிர்மறையான செய்திகளை வெளியிட்டு வந்தனர். நான் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், எங்களையும் கவனியுங்கள், நாங்களும் சம்பாதிக்க வேண்டாமா? என பணம் கேட்டனர்’ என்றார். இந்த நேர்காணலைக் கண்ட பலரும் பிஸ்மியைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
தொடர்ந்து, பிஸ்மி தரப்பிலிருந்து விடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், “நாங்கள் யோகி பாபுவிடம் பணம் கேட்கவில்லை. எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறோம். அவரும் (யோகி) உடன் வந்து சத்தியம் செய்ய வேண்டும். மேலும், யோகி பாபு நடிகர் அஜித்குமாரை ஒருமுறை சந்தித்தபோது கைகொடுக்கச் சென்றாராம். அப்போது, அஜித் ‘என்னை தொடாதீர்கள்’ என்றதை எங்களிடம் சொன்னார். அதை, இப்போது மறுப்பாரா?” என கேள்வியெழுப்பினர்.
இதனால், நடிகர் அஜித்குமாரை பலரும் கிண்டலடித்து விமர்சித்தனர். பின், அன்றிரவே நடிகர் யோகி பாபு தன் எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித்குமார் தன்னை புகைப்படம் எடுக்கும் படத்தைப் பகிர்ந்து, ‘என் விருப்பமான புகைப்படம்’ என்றதுடன் ’என் அன்பான தல’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இப்பிரச்னை அமைதியாக முடியுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிஸ்மி தரப்பினர் மீண்டும் விடியோ வெளியிட்டு இப்பிரச்னையைப் பெரிதாக்குவார்கள் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.