சாமியாரானார் நடிகை புவனேஸ்வரி!

நடிகை புவனேஸ்வரி துறவறம் பூண்டு சாமியாராகிவிட்டார்.
நடிகை புவனேஸ்வரி
நடிகை புவனேஸ்வரி
Published on
Updated on
2 min read

இனி என் வாழ்நாள் முழுவதையும் இறைப்பணிக்காகவே அர்ப்பணிக்கவிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சாமியாராக மாறியிருக்கும் நடிகை புவனேஸ்வரி.

ஆம்.. நீங்கள் படித்துக்கொண்டிருப்பது சரிதான். சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பல இளசுகளின் மனதைக் கொள்ளைகொண்டிருந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிதான் இவ்வாறு சொல்லியிருப்பது.

ஒரு படத்தில் புவனேஸ்வரி நடிக்கிறார் என்றால் நிச்சயம் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றே படம் பார்க்க வந்த இளசுகளின் பட்டாளம் அதிகம். அது மட்டுமா.. அவரது சாம்பல் நிறக் கண்ணும் அவரது அழகுக்கு அழகு சேர்த்தது.

பாய்ஸ் படத்தில், பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு அவருக்கு தலைநகரம் உள்ளிட்ட பல படங்கள் கைகொடுத்தன. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் புவனேஸ்வரி அதில் தனது தனி முத்திரையைப் பதித்துவிடுவார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படங்கள் ஏராளம். அது மட்டுமல்ல, சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்து அதிக பிரபலமானார்.

எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த போதுதான், அவர் நடித்த முதல் படத்தின் கதை போலவே அவரது வாழ்க்கையும் மாறியது. பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டது வேறு கதை.

வழக்கிலிருந்து விடுதலையான பிறகு ஒரு சில தெலுங்கு படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வந்தார். பிறகு அவர் மெல்ல கேமராவின் வெளிச்சத்திலிருந்து மறைந்துகொண்டே வந்தார்.

எத்தனையோ நடிகைகள் அப்படி மறைந்துபோய் காணாமலே போய்விடுவார்கள். ஒரு நாள் இவர் யார் எனத் தெரிகிறதா என்று கேட்கும்போது பலருக்கும் நினைவில் கூட வராமல் போய்விடும். ஆனால், புவனேஸ்வரியைப் பொருத்தவரை அவரை ரசிகர்கள் அடியோடு மறந்துவிடுவதற்குள் அடுத்த அவதாரம் எடுத்திருக்கிறார். அதுதான் துறவறம்..

அண்மைக் காலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில்களில் பெண் சாமியார் போல உடை மற்றும் ருத்ராட்சம் அணிந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது, பிறகு, கோயிலுக்கு வெளியே அன்னதானம் செய்வது என பிசியாக இருக்கிறாராம்.

நமக்குக் கிடைத்த தகவல் உண்மைதானா என்று ஆராய்ந்தபோதுதான், அவர் காவி உடை அணியாத சாமியாராக மாறிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இதுவே ஒரு ஆச்சரியமான தகவல் என்றால், எப்படி திடீர் என இப்படி ஒரு மாற்றம்? அன்னதானம் செய்யும் எண்ணம் பிறந்தது எப்படி? இதற்கெல்லாம் பணம் எப்படி கிடைக்கிறது? என்பது பற்றி அவர் சொல்லியிருக்கும் தகவல்கள்தான் அடுத்த சுவாரஸ்யமே.

அது பற்றி அவர் கூறியுள்ளதாவது, என் மனதில் திடீரென ஒரு நாள் மாற்றம் ஏற்பட்டது. அதுவே என்னை ஆன்மிக வழியில் அழைத்துச் சென்றது, அப்படியே நானும் பயணிக்கத் தொடங்கினேன். என் வாழ்நாளை இறைப்பணிக்காக அர்ப்பணிக்கவும் முடிவு செய்துவிட்டேன்.

என் வாழ்க்கையே ஒரு போராட்டம். எதிர்பாராமல் சிக்கிய வழக்கிலிருந்து போராடி வெளியே வந்தேன். ஆனாலும் என்னை இந்த சமூகம் இன்னமும் தவறாகத்தான் பார்க்கிறது. யார் எப்படி பார்த்தால் என்ன? நான் என் வழியில் நிம்மதியாக பயணிக்கிறேன் என்கிறார் சினிமா நடிகை சாரி சாமியாரான புவனேஸ்வரி.

மேலும், முழுமையான மனதுடன் துறவம் ஏற்றுக்கொண்டதோடு, காசிக்குச் சென்று சித்தி பெற்றுவிட்டேன். நாள்தோறும் கோயில்களுக்குச் செல்வது, அன்னதானம் வழங்குவது, பூஜை என என் நாள்கள் கழிகின்றன என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, என் வீட்டை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன். அதிலிருந்து வரும் பணத்தைக் கொண்டு என் தேவைகளுக்கும் அன்னதானத்துக்கும் பயன்படுத்துகிறேன். காவி உடை ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். நான் காவி உடை அணிந்தால், விளம்பரத்துக்காக அவ்வாறு செய்வதாக விமர்சிப்பார்கள். அதனால் மஞ்சள், அரக்கு, சிவப்பு நிற சேலைகளை மட்டும் அணிகிறேன். என்னை பெரிய அளவில் விளம்பரப்படுத்திக்கொள்ள நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார் புவனேஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com