
தெலுங்கு நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மோகன் பாபு அவரது மகன் மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
ரச்சகொண்டா காவல் ஆணையரிடம் மோகன் பாபு அளித்த புகாரை தொடர்ந்து, பஹாடி ஷரீஃப் காவல் நிலையத்தில் மோகன் பாபுவின் இரண்டாவது மகனும் நடிகருமான மஞ்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி மோனிகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரங்காரெட்டி மாவட்டத்தில் ஜல்பல்லியில் உள்ள ‘மஞ்சு டவுன்’ என்ற தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது மகன் சில சமூக விரோதிகளுடன் வந்து தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது மகன், மருமகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சில சமூக விரோதிகளிடம் இருந்து தங்களுக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், குற்றப் பிரிவுகளின் கீழ் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் மனோஜ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்னை 10-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் வைத்து தாக்கியதாக காவல் நிலையத்தில் மனோஜ் புகார் அளித்துள்ளார். இதில், அவரது தந்தை மோகன் பாபுவின் பெயரைக் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், மோகன் பாபுவின் வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து, சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு விஷ்ணு வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத்துக்கு விரைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.