’மன்னித்துவிடுங்கள் அப்பா..’ கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் ராஜ்கிரணின் மகள், கணவரைவிட்டு பிரிந்து வாழ்வதாகக் கூறியிருக்கிறார்.
’மன்னித்துவிடுங்கள் அப்பா..’ கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!
Published on
Updated on
2 min read

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியாவை நடிகர் சண்முகராஜாவின் தம்பியும் நடிகருமான முனீஸ்  ராஜா கடந்த 2022-ல்  திருமணம் செய்தார். இத்திருமணத்துக்கு ராஜ்கிரண் குடும்பத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் இருந்ததால் முனீஸ் ராஜாவும், பிரியாவும்  காவல்நிலையம் வரை செல்ல வேண்டியிருந்தது. திருமணத்துக்குப் பின் நிறைய நேர்காணல்களில் கலந்துகொண்டவர்கள், தங்கள் காதல் குறித்தும் உறுதியான முடிவைப் பற்றியும் பேசி வந்தனர். நாதஸ்வரம், முள்ளும் மலரும் தொடர்களில் நடித்த முனீஸ் ராஜா. தொடர்ந்து, சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரியா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் முனீஸ் ராஜாவும் 2022-ல் திருமணம் செய்துகொண்டது ஊடக வாயிலாக தெரிய வந்திருக்கும். இப்போது, சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இந்தத் திருமணத்துக்குப் பின் என்னை வளர்த்த தந்தையை அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு பிரச்னை என வந்தபோது என்னைக் கைவிடாமல் காப்பாற்றினார்கள். எத்தனை முறை என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டாலும் போதாது” எனக் கூறியுள்ளார். 

வளர்ப்பு மகளான பிரியாவின் திருமணம் நடந்தபோது நடிகர் ராஜ்கிரண் முகநூலில் விளக்கமளித்திருந்தார்.

அதில்,

என் மகளை ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைவருக்கும் உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத் தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை ''வளர்ப்பு மகள்'' என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முகநூல் மூலம் அவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்ட தொலைக்காட்சி நடிகர், என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி, கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்த விஷயம் என் காதுக்கு வந்ததும், அந்த நடிகரைப்பற்றி நான் விசாரிக்க ஆரம்பித்ததில், எனக்கு இருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி, திரைப்படத் துறையில் வாய்ப்புகளைப் பெறுவதும், என்னிடமிருந்து பணம் பறிப்பதும் மட்டுமே, அவரது குறிக்கோள். இதையெல்லாம் பலவிதமாக
விசாரித்து தெரிந்து கொண்ட நான், என் வளர்ப்புப் பெண்ணிடம் சொன்னேன். அவர் காதில், நான் சொன்னது எதுவும் ஏறவில்லை. அவரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும் அந்தப்பெண் சொல்லியிருந்தார். 

அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி, அந்தப் பெண்ணிடம் அழுது மன்றாடி, மடிப்பிச்சை கேட்டு, ஒரு வழியாக, ''சரி, இவர் வேண்டாம், உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள்'' என்று சொல்ல, நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம். 

இந்தச் சூழ்நிலையில்தான், என் மனைவியின் தோழியான லட்சுமி பார்வதியைப் பார்த்துவிட்டு வருவதாக எங்களிடம் சொல்லிவிட்டு, இந்தப் பெண் ஆந்திரா போய் நான்கு மாதங்களாகி விட்டன, இன்னும் எங்கள் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில்தான், இப்படி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. 

இந்த விஷயத்தில் நான் கோபப்பட்டபோது கூட, என்னைச் சமாதானப்படுத்தி, அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசி இன்று வரை அந்தப் பெண்ணுக்கு
உறுதுணையாக நிற்பது என் மனைவி மட்டும் தான். 

என் வளர்ப்புப் பெண், ஒரு தரமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாகக் கட்டிக்கொடுத்திருப்பேன். ஆனால், தன் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டாளே என்பது மட்டுமே என் வருத்தம். 

இதன் மூலம் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொள்வது, என்னவென்றால், என் பெயரைப் பயன்படுத்தி இவர்கள் உங்களை எந்த வகையிலாவது அணுகினால், அதனால் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் நான் பொறுப்பல்ல என்பது தான்.

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப் பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தத் தொலைக்காட்சி நடிகர், என் வளர்ப்புப் பெண்ணிற்குக் கணவனாகிக் கொள்ளக்கூடும். ஆனால், எந்தக் காலத்திலும் எனக்கு மருமகனாக முடியாது. 

இன்றிலிருந்து, இவர்கள் இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நேர்மையும், சத்தியமுமே என்றும் வெல்லும் எனப் பதிவிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com