சிரிக்க வைத்தாரா சந்தானம்? வடக்குப்பட்டி ராமசாமி - திரை விமர்சனம்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.
சிரிக்க வைத்தாரா சந்தானம்? வடக்குப்பட்டி ராமசாமி - திரை விமர்சனம்

1970-ல் வடக்குப்பட்டி என்கிற ஊரில் கதை நிகழ்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ள ஊர்க்காரர்களின் தெய்வமாக இருக்கிறது கண்ணாத்தா. இந்தக் கண்ணாத்தா கோவில் அமைந்திருக்கும் இடம் ராமசாமிக்கு (சந்தானம்) சொந்தமானது. கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி, சாமி பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அப்படி, தனக்கு போட்டியே இல்லாத ஒரு தொழிலைச் சிறப்பாக செய்து வந்த ராமசாமியிடம் வட்டாட்சியர் தமிழ் ஒரு திட்டத்தைக் கூறுகிறார். 

கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தை குத்தகைக்கு விட்டு இன்னும் சம்பாதிக்கலாம் என்கிற அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் ராமசாமி, வட்டாட்சியருக்குக் குறைவான பங்குத் தொகையையே தர முடியும் என அவரைப் பகைத்துக் கொள்கிறான். இதனால், சதியில் ஈடுபடும் வட்டாட்சியர் ராமசாமியின் இடத்திலிருக்கும் கண்ணாத்தா கோவிலை சீல் வைக்கிறார். இந்தக் குழப்பத்தில் சிக்கும் ராமசாமி எப்படி இப்பிரச்னையைக் கையாள்கிறார்? கண்ணாத்தா கோவில் மீண்டும் திறக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை. 

’டிக்கிலோனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் யோகி, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் முழு நீள நகைச்சுவை பாணியையே பயன்படுத்தியிருக்கிறார். எந்த இடத்திலும் உணர்ச்சிகர விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் நகைச்சுவையை நம்பியே படத்தை இயக்கியிருக்கிறார். ‘ஊருக்குள்ள சாமியே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த ராமசாமிதான நீ’ என்கிற வசனத்தை மையமாகக்கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

பெரிய நாயகனாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் கதைக்கு முக்கியத்துவம் தருவதுபோல் பலருக்கும் இடமளித்து நடித்திருக்கிறார் சந்தானம். உண்மையில், சந்தானம் வந்த காட்சிகளில் இருந்த நகைச்சுவைகளைவிட மற்ற கதாபாத்திரங்களின் காட்சிகள் சிரிப்பை வரவழைத்தன. 

வழக்கம்போல் இப்படத்திலும் சந்தானத்தின் டைமிங் காமெடிகள் கைகொடுத்துள்ளன. குறிப்பாக,  லொள்ளு சபா அணியினரான நடிகர்கள் சேஷு, மாறனுடன் இணைந்து வரும் காட்சிகளில் இயல்பாக சிரிப்பு வருகிறது. கோவில் பூசாரியான சேஷு மதுபாட்டிலுக்காக அலைவது, ’மெட்ராஸ் ஐ’ தொற்றில் சிக்குவது, பரதநாட்டியக் காட்சி என திரையரங்கத்தையே கண்ணீர் வர சிரிக்க வைத்துவிட்டார். ’ஏ ஒன்’ படத்தில் ‘அத்திம்பேர் சாகல.. தூங்கிட்டு இருக்கார்’ போன்ற பலமான காட்சிகள் இப்படத்திலும் இருப்பதால் சேஷு வருகிற காட்சிகளில் சிரிப்பு சப்தம் மட்டும்தான் கேட்கிறது. 

துணை கதாபாத்திரங்களில் நடித்த நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா, பிரசாந்த், கூல் சுரேஷ் காட்சிகளின்போது சில இடங்களில் நகைச்சுவைகள் அதகளமாக இருக்கின்றன.  நாயகி மேகா ஆகாஷ் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஆனால், அவரின் அழகான தோற்றம் கதைக்கு ஏற்ப நம்பும்படியாக வந்திருப்பது சிறப்பு. 

‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பை கதையுடன் இணைத்து அதனால் பாதிக்கப்படும் மக்கள் என சுவாரஸ்யமான கதைப் பின்னணியில்  வென்றிருக்கிறார் இயக்குநர். 

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என படத்தின் கதைக்கு ஏற்ப ரசிக்கும்படியாக வேலை செய்திருக்கிறார்கள்.

படத்தில் நல்ல நகைச்சுவைக் காட்சிகள் வருவதற்கு முன்பு சில சொதப்பல் வசனங்களும் காட்சிகளும் இடம்பெறுவது பலவீனம். முதல்பாதி முழுக்க அட்டகாசம் செய்யும் சேஷு இடைவேளைக்குப் பின் அதிகம் இடம்பெறாமல் இருந்தது, எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரத்தில் இருந்த வலுவற்ற தன்மை, கடவுள் நம்பிக்கையைக் கொண்டு வர பல படங்களில் பயன்படுத்தப்பட்ட அதே லாஜிக் இல்லாத கிளைமேக்ஸ் என குறைகளும் உண்டு.

இவற்றைப் பொறுத்துக் கொண்டால், ஒரு நல்ல நகைச்சுவைப் படத்தைப் பார்த்த நிறைவுக்கு வடக்குப்பட்டி ராமசாமி கியாரண்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com