காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது, மணிகண்டன் 'லவ்வர்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்க படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காமெடி, ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகிறது.
படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்ற 18 கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. இப்படம் வருகிற பிப்.9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் நடிகர் மணிகண்டன், “ஒரு ஆணின் பொசசிவ்னஸ் (உடைமைத்தனம்), தாழ்வு மனப்பான்மை குறித்து பேசும் படம் இது. இந்தப் படம் அர்ஜுன் ரெட்டியுடன் ஒப்பிடுவது ஆதாரமற்றது. படம் வெளியானதும் இந்தப் பெயர் மாறிவிடும். இதில் வரும் அருண் (நாயகன்) கதாபாத்திரம் வித்தியாசமானது. யார் ஒருவர் மீது மட்டும் நியாயம் சொல்லமால் எடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக சரி தவறு என யாரையும் குறிப்பிட முடியாது. படத்தில் சில பகுதிகளில் நாயகனை பிடிக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் அனைவரும் புரிந்துக் கொள்வீர்கள்” எனக் கூறியுள்ளார்.