அதிரடி ஆக்‌ஷனில் வென்றதா மிஷன்? திரைவிமர்சனம்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன். 
அதிரடி ஆக்‌ஷனில் வென்றதா மிஷன்? திரைவிமர்சனம்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன். ஆக்‌ஷன் படங்களில் அதிக கவனம் செலுத்தும் அருண் விஜய்க்கு மீண்டும் நம்பிக்கை கொடுக்கும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது மிஷன்.

உயிருக்கு ஆபத்தான தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்லும் குணசேகரன் (அருண் விஜய்) அங்கு ஒரு எதிர்பாராத சண்டையினால் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டை சீர்குலைப்பதற்காக சிறையில் இருக்கும் தீவிரவாதிகளைக் காப்பாற்ற முயல்கிறார் வில்லன். தொடக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும் வில்லனின் நோக்கம் அறிந்ததும் தீவிரவாதிகளைத் தப்பிக்க விடாமல் சிறை அதிகாரியான எமி ஜாக்சனுடன் சேர்ந்து போராடுகிறார் அருண்விஜய். தீவிரவாதிகள் தப்பித்தனரா? இல்லையா? வில்லனுக்கும், அருண் விஜய்க்கும் என்ன தொடர்பு? அருண் விஜய் மகளின் சிகிச்சை என்ன ஆனது? என்பதுதான் மிஷன் திரைப்படத்தின் கதை.

சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் அதில் சின்ன மாற்றத்துடன் அதற்கு நேர்மாறான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். தொடர்ச்சியாக ஆக்‌ஷன் திரைப்படங்களில் கவனம் செலுத்திவரும் அருண்விஜய் இதிலும் என்ன வித்தியாசமாக செய்திருப்பார் என நாம் நினைத்தால் அந்த அலட்சியமான எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளார். படத்திற்கு படம் அவரின் உழைப்பு மெருகேறி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் அவரின் நியாயமான முயற்சிகளே படத்தைத் தாங்கியிருக்கின்றன. சிறைக்குள் தான் ஒரு காவல்துறை அதிகாரி என அறியப்படும் இடங்களிலும், சிறைக்கைதிகளை பந்தாடும் காட்சிகளுக்கும் அவர் எடுத்துக் கொண்ட கடும் சிரத்தை காட்சிகளில் தெரிகிறது. படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை அவரின் ஆற்றல் குறையாத ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் பெரும் பலம்.

லண்டன் பெண்ணை நம் ஊரின் கிராமத்துப் பெண்ணாகக் காட்டி பொறுமையை சோதிக்காமல் எமி ஜாக்சனை ஆங்கிலேய சிறை அதிகாரியாகக் காட்டி ஆறுதல் தந்திருக்கிறார் இயக்குநர். எமி ஜாக்சனும் சிறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். மிடுக்கான பெண்ணாக அவர் நடந்து கொள்ளும் இடங்களில் அவரின் நடிப்பு காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது. துணை கதாபாத்திரங்களில் நிமிஷா சஜயன், அபிஹாசன், வில்லனாக பாரத் போபண்ணா என அனைவரும் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கின்றனர். பயன்படுத்தப்படாத வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தைத் தவிர்த்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

சிறைக்குள் நடக்கும் மோதல்கள் நம்ப முடியாதவையாக இருந்தாலும் சண்டைக் காட்சிகள் படத்தைத் தாங்கியிருக்கின்றன. விரைவாக கதைக்குள் பார்வையாளர்களைக் கொண்டு சென்றது, தேவையற்ற பாடல்களைத் தவிர்த்தது, விறுவிறுப்பான திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்டவற்றால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிறைக்குள் நடக்கும் காட்சிகள் கதையின் தீவிரத்தன்மையை கடத்துவதில் வென்றிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும், ஸ்டண்ட் சிவாவின் சண்டைக்காட்சிகளும் படத்தின் பலம். அச்சமே அச்சமே பாடல் அருண்விஜய்யின் ஆக்‌ஷன் முகத்திற்கு அடையாளம்.

கமர்ஷியல் படம் என்பதால் லாஜிக் மூட்டைகளை ஓரம் வைக்கலாம். அதேசமயம் சில நம்ப முடியாத காட்சிகளை திணிக்காமல் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக தண்ணிக்குள் இருந்து தீவிரவாதிகளைத் தூக்கி வெளியில் வீசுவது, 300க்கும் மேற்பட்டவர்களை எதிர்கொள்வது போன்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. தீவிரவாதி என்றால் அவன் உருது பேசுவான் என்பதும், அவன் இஸ்லாமியராக இருப்பான் எனும் பிம்பங்களையும் விட்டொழித்தால் சமூகத்திற்கு நல்லது. காட்சிக்கு காட்சி “அஸ்லாம் மலேகும்” என தீவிரவாதிகள் சொல்வதையெல்லாம் ஒரு சமூகத்தை மீண்டும் மீண்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது போன்றதாகும். ஜி20 மாநாட்டை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் திட்டம் தீட்டினாலும் சிறைக்குள் இருக்கும் தீவிரவாதிகள் ஏன் அவ்வளவு முக்கியம் எனும் பார்வையை ஒரு காட்சியிலாவது சொல்லியிருக்கலாம்.

விறுவிறுப்பான, அதிரடியான அருண்விஜய்யால் திரையரங்கை ஏமாற்றாமல் மிஷன் ‘சக்சஸ்’ ஆகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com