பொங்கல் போட்டியில் வென்றாரா தனுஷ்? கேப்டன் மில்லர் - திரை விமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பொங்கல் போட்டியில் வென்றாரா தனுஷ்? கேப்டன் மில்லர் - திரை விமர்சனம்

நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ஆக்சன் பாணியில் உருவான கேப்டன் மில்லர் பொங்கல் வெளியீடாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கதை நிகழ்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனலீசன் (தனுஷ்) மற்றும் அவரது கிராமத்தினர் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு அடக்குமுறைக்கு எதிராக எப்படியெல்லாம் போராடினார்கள் என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர்.

தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கும் ஜமீனாலும் இந்த அதிகாரத் திமிரால் தனக்கு எந்தவித மரியாதையும் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்திலும் இருக்கிறார் அனலீசன். அப்படி ஒருமுறை கோவிலுக்குள் சென்று பிரச்னை ஒன்றில் சிக்கும் ஈசாவை அவரது அண்ணன் செங்கோலன் (சிவராஜ்குமார்) கண்டிக்கிறார். ஆத்திரமடையும் ஈசா, பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைவதாகக் கூறி ஊரை விட்டுச் செல்கிறார். காரணமாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தம்மை அடிமையாக வைத்திருந்தாலும் மரியாதையாக நடத்துவார்கள் எனக் கூறி, இராணுவத்தில் இணைகிறார். அப்போது, ஈசாவால் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு சொந்த மக்களின் மீதான வன்முறை ஏவல் நடக்கிறது. பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து யாரைக் கொல்ல துப்பாக்கியைத் தூக்கினோம் என உடையும் ஈசா எப்படி கேப்டன் மில்லர் ஆனார்? சொந்த கிராமத்தை விட்டுச் சென்றவர் எதற்காக மீண்டும் திரும்பி வந்தார்? என்கிற அடுத்தடுத்த கேள்விகளுக்கு அதிகாரம், வன்முறை ஆகியவற்றைக் கொண்டு பதிலளித்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அருண் மாதேஸ்வரனின் ராக்கி, சாணிக்காயிதம் படங்களில் வெளிப்பட்ட அப்பட்டமான வன்முறைக் காட்சிகள் கேப்டன் மில்லரில் இல்லை. ஆனால், மொத்த படமும் அதிரடியான சண்டைக் காட்சிகளை நம்பியே உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை ரீதியாகவும் ஒற்றைக் கருத்தை நம்பாமல் சாதிய அடக்குமுறை, அதிகார வர்க்கப் பிரச்னை, பெண்ணியம் என சில தளங்களைத் தொட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார். முக்கியமாக, படத்தில் பெண் கதாபாத்திரங்களைத் தைரியமானவர்களாகவே காட்சிப்படுத்தியதுடன் சில வசனங்கள் மூலம் கைதட்டல்களையும் பெறுகிறார். ஆலய நுழைவுப் போராட்டம் என்பது வெறும் உரிமைக்கானது மட்டுமல்ல, முன்னோர்கள் வகுத்த நம்பிக்கைகளுக்கும் கோவில் கருவறைக்குமான  தொடர்பை,  நாட்டார் வழிபாட்டுக் கதையுடன் இணைத்தது சிறப்பாகக் கைக்கொடுத்திருக்கிறது. 

துப்பாக்கியைத் தூக்கும்போதெல்லாம் தனுஷ் உண்மையிலேயே அசுரனாகிவிடுகிறார். சாதாரண இளைஞனிலிருந்து ஆக்ரோஷம் தெறிக்கும் மில்லராக மாறும் வரை அத்தியாத்திற்கு அத்தியாயம் தனியாகத் தெரியும்படி நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலிருந்து இறுதி வரை தனுஷின் கதாபாத்திர மாறுதல்கள் ரசிக்க வைப்பதுடன் கர்ணன் தனுஷையும் சில காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. ஜெயிலரில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சிவராஜ்குமாருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மிகை இல்லாத நடிப்பும் அக்கதாபாத்திரத்தின் நேர்மையும் குறையைத் தரவில்லை. சிவராஜ்குமார் நேரடியாக தமிழில் நாயகனாக நடித்தாலும் நம்மூர் ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்பதையே அவருடைய காட்சிகளில் உணர முடிந்தது.

பிரியங்கா மோகனுக்கு ஏற்ற கதாபாத்திரமாகத் தெரியவில்லை. சில காட்சிகளில் அவர் கோவப்பட்டாலும் போராளிக்கான சாயல்கள் இல்லாதது ஏமாற்றம்தான். அதிதி பாலன் மற்றும் நிவேதிதா சதீஷ் சரியான கதாபாத்திரத் தேர்வுகள்.

குமாஸ்தாவாக நடித்த காளி வெங்கட், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார். வெறுப்பும், கசப்புமான அக்காத்திரத்தைப் பார்க்கும்போதெல்லாம் ரசிகர்களுக்கு கோவம் வருவதை உணர முடிந்தது. அந்த அளவிற்கு அசத்தியிருக்கிறார் காளி வெங்கட்.

நடிகர்கள் சந்தீப் கிஷன், ஜான் கோக்கன், இளங்கோ குமரவேல், எட்வர்ட் சொனன்பிலிக் ஆகியோரின் நடிப்பு கதையின் ஓட்டத்திற்கு நெருக்கமாக இருந்தது. களை படத்தின் மூலம் மிரட்டிய நடிகர் சுமேஷ் மூரின் காட்சிகள் ஆச்சரியம்.

மில்லரிடமிருந்து கணக்கில்லாமல் புல்லட்கள் சிதறும்போது ஸ்டண்ட் மாஸ்டர்களின் உழைப்பு தெரிகிறது. குறிப்பாக, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் அதற்கான ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசையுமே கேப்டன் மில்லருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தினாலும் பின்னணி இசையின் பங்களிப்பு என்ன என்பதை ஜி.வியிடமிருந்து புதிய இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவும், த. ராமலிங்கத்தின் கலை வேலையும் படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு பெரிதும் உதவியிருக்கின்றன. ஆனால், சில இடங்களில் துப்பாக்கிகள் போலியானவை என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. கலை இயக்குநர் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். 

படத்தின் பலவீனம் என்ன? சந்தேகமே இல்லாமல் லாஜிக் ஓட்டைகளை நிரப்பாமல் விட்டதுதான். தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் நுழையவிடமால் தடுத்த ஜமீனால் (அரசன் எனக் குறிப்பிடுகிறார்கள்) அவர்கள் இடத்தைக் காலி செய்ய வைக்க முடியாதா? தனக்குக் கீழ் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பலர் இருந்தும் அந்த மக்களைக் கண்டு ஜமீன் ஏன் பயப்பட வேண்டும்? ஒரு கோவிலுக்காகவும் சில ஏக்கர் நிலத்திற்காகவும் பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த பல நூறு பேர், சிலரால் கொல்லப்படுவது சாத்தியமா என்ன? 

இப்படி பல இடங்களில் லாஜிக் சிக்கல்கள் உண்டு. இவற்றையும், பொறுமையான திரைக்கதையையும் பொறுத்துக்கொண்டால் நிகழ்காலத்திலும் தொடரும் சாதிய அடக்குமுறை, அதிகார மீறல் போன்ற  பிரச்னைகளின் தீவிரத்தை கேப்டன் மில்லரில் உணரமுடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com