கண்டதெல்லாம் பொய்... காணப் போவது? மலைக்கோட்டை வாலிபன் - திரை விமர்சனம்

லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான, ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரை விமர்சனம்...
கண்டதெல்லாம் பொய்... காணப் போவது? மலைக்கோட்டை வாலிபன் - திரை விமர்சனம்

யாராலும் அசைக்க முடியாத பலசாலியாக இருக்கும் மலைக்கோட்டை வாலிபன் (மோகன்லால்) மல்யுத்த வீரர்களை அடித்து தன் பலத்தை நிறுவிக்கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் மாங்காடு மன்னன், வாலிபனால் அவமரியாதை செய்யப்படுகிறார். ஆத்திரம் அடைகிற அம்மன்னன், தன் பகுதிக்கு வந்து மல்யுத்தம் செய்து உன் பலத்தைக் காட்டு என மோகன்லாலுக்கு சவால் விடுகிறார்.

அங்கு செல்பவர் தோல்வியைச் சந்திக்காத மல்லனை அடித்து வீழ்த்தி, மாங்காட்டு மன்னனை கழுதையில் ஏற்றி ஊரைச் சுற்ற விடுகிறார். அவமானத்தால் காயப்பபட்ட அம்மன்னன் மலைக்கோட்டை வாலிபனை பழி வாங்க திட்டங்களைத் தீட்டுகிறார். அதே நேரம், மாங்காட்டில் இருந்து கிளம்பும் வாலிபன், அம்பத்தூர் மலைக்கோட்டைக்குச் சென்று அங்கு போர்த்துகீசியர்கள் ஆட்சியில் அடிமையாக இருக்கும் மக்களைக் காப்பாற்ற அரசன் மெக்காலேவை சண்டைக்கு அழைப்பதுடன் பந்தய விருப்பமாக, தான் வென்றால், அடிமையாக இருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார். அங்கு மலைக்கோட்டை வாலிபன் அடிமை மக்களைக் காப்பாற்றினாரா? வன்மம் கொண்டு பின் தொடர்ந்த மாங்காடு மன்னன் என்ன ஆனான்? யார் இந்த மலைக்கோட்டை வாலிபன்? என்பதே மீதிக்கதை. 


வழக்கம்போல் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இதுதான் கதை என ஊகிக்க முடியாத உத்தியைப் இப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். யதார்த்தமாக நகரும் கதை, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இன்னொரு தளத்திற்குச் செல்கிறது. காலம், நிலம் எதுவும் இதுதான் எனக் கூறப்படாமல் வெட்டவெளி நிலத்தை கச்சிதமாக மலைக்கோட்டை வாலிபனுக்கான நிலமாக லிஜோ பயன்படுத்தியிருக்கிறார். உள்ளூர் சண்டை, போர்த்துகீசியர்கள் உடனான மோதல் என படத்தின் ஒட்டுமொத்த பலமும் ஒளிப்பதிவை நம்பியே இருக்கிறது. சாதாரண ஒரு காமிக் கதையை  எப்படியெல்லாம் நம்ப வைத்து சினிமாவாக மாற்றலாம் என்கிற திட்டத்தில் லிஜோ வென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சினிமா அனுபவத்துக்கு இன்றியமையாதது ஒளிப்பதிவு பங்களிப்புதான் என்பதை லிஜோ ஜோஸ் முழுமையாக நம்பிக்கொண்டிருப்பதால் அவரின் மற்ற படங்களின் ஒளிப்பதிவை விட மலைக்கோட்டை வாலிபன் ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் மது நிலகண்டணின் அகலக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. படத்திற்கான லைட்டிங், கலரிங் ஆகியவை மலைக்கோட்டை வாலிபனை சர்வதேச தரத்தில் கொண்டு செல்லும். காட்சி அமைப்புகளும் கலை இயக்குநரின் பணியும் பண்டைய இந்திய மக்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்கிற ஒரு சித்திரத்தையே அளிக்கிறது. குறிப்பாக, அம்பத்தூர் மலைக்கோட்டை. படத்தில் வாலிபனின் பலம் அதீதமாக இருக்கிறது என்கிற தோற்றத்தை எந்தக் காட்சியிலும் காண முடியாதது ஆச்சரியம். 

'கண்டது எல்லாம் பொய், காணப் போவது நிஜம்' என்கிற வசனமே மொத்த படத்தின் நாடி. அதற்கு ஏற்ப காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகக் கைகொடுத்திருக்கிறது.

கதை வேகத்தை இழக்கும் போதெல்லாம் அதை மோகன்லால்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. அவரைத் தவிர வேறொரு நடிகரை இக்கதாபாத்திரத்தில் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முதல் பாதியில் இடம்பெற்ற மாங்காடு சண்டையில் மோகன்லாலின் வசனங்களும், உடல்மொழியும் விசில் சத்தங்களை அதிகரிக்கிறது. மாங்காடு மன்னனாக நடித்த தனிஷ் சைட் தன் இயலாமையை சிரிப்பால் வெளிப்படுத்தும் காட்சிகள் அபாரம். அரை மொட்டைத் தலையுடன் அட்டகாச நடிப்பை வழங்கியிருக்கிறார்.  நடிகை கதா நந்தி உண்மையிலேயே கண்களால் பேசியிருக்கிறார். அவருக்கும் மனோஜ் மோசஸுக்கான காதல் காட்சிகளில் நந்தி பேரழகியாக மிளிர்கிறார்.

இடைவேளை வரை இருந்த அடுத்தது என்ன என்கிற பரபரப்பு இரண்டாம் பாகத்தில் மெல்ல மெல்லக் குறைவது பலவீனம். முக்கியமாக, சில காட்சிகளின் தொடர்ச்சியை ஊகிக்க முடிகிறது. இதுதான் நடக்கும் என்கிற கதையில் எதிர்பாராத திருப்பத்துடன் நிறைவு பெறுவதால், என்ன சொல்ல வருகிறார்கள் எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இப்படம் முழுக்க சினிமா அனுபவத்துக்காகவே உருவாக்கபட்டிருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலி அமைப்பு, கலைத் துறை ஆகியவை 4 தேசிய விருதுகளை இப்படத்திற்குப் பெற்றுத் தந்தாலும் ஆச்சரியம் இல்லை. சர்வதேச அளவில் இந்திய சினிமாவின் ஒளிப்பதிவு எனப் பெருமையாக மலைக்கோட்டை வாலிபனை முன்வைக்கலாம். பிரஷாந்த் பிள்ளையின் பின்னணி இசை, ஒலி அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் திரைக்கதை தடுமாற்றத்தை பெருமளவு காப்பாற்றி இருக்கின்றன.

படம் தேறுமா தேறாதா என்பதைத் தாண்டி தொழில்நுட்ப ரீதியாக நம்மூர் சினிமாக்கள் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கின்றன  என்பதுக்கு மலைக்கோட்டை வாலிபன் ஒரு உதாரணம். கண்கள் விரிய, வண்ணங்களில் திளைக்க, ஏமாற்றாத படமாக இது உருவாகியிருக்கிறது. மொத்தத்தில், திரையரங்க அனுபவத்துக்கு ஏற்ற ஆளாக வந்திருக்கிறார் இந்த மலைக்கோட்டை வாலிபன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com