ஆஸ்கருக்குத் தேர்வான படங்களை எங்கே காணலாம்?

இந்தாண்டு ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களின் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆஸ்கருக்குத் தேர்வான படங்களை எங்கே காணலாம்?

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவுக்கு உலகம் முழுவதுமிருந்து பல திரைப்படங்கள் விருதுக்காக போட்டியிடுகின்றன. இறுதிச்சுற்றில் 15  பிரிவுகளின் கீழ் சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முறை ஆஸ்கர் போட்டியில் எந்தப் பிரிவிலும் இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகவில்லை. சிறந்த அயல்நாட்டு திரைப்படம் பிரிவில் மலையாளப் படமான ’2018’ தேர்வானது. ஆனால், தகுதிச் சுற்றுடன் வெளியேறியது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தேர்வான ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’ திரைப்படமும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகவில்லை. 

ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையையும் அதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப்போராட்டத்தையும் மையமாக வைத்து உருவான ’டூ கில் ஏ டைகர் (to kill a tiger)’ என்கிற கனடா ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஓடிடிகளில் இன்னும் வெளியாகவில்லை.

இந்த ஆண்டில் நடைபெறவுள்ள 96-வது ஆஸ்கர் விருது விழா மார்ச் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் நிகழவுள்ளது. 

இறுதிச்சுற்றுக்குத் தேர்வான படங்கள்...

 _  ஓப்பன்ஹெய்மர் (oppenheimer) - இந்தமுறை ஆஸ்கர் போட்டியில் 13 பிரிவுக்கு தேர்வாகியுள்ள திரைப்படம் இதுதான். கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி நடிப்பில் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம் அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி ஓப்பன்ஹெய்மரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த தழுவல் கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை உள்பட 13 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் தேர்வாகியுள்ளது. பீக்காக் ஓடிடி தளத்தில் இப்படத்தைக் காணலாம்.

_ புவர் திங்ஸ் (poor things) - டார்க் காமெடி வகையில் உருவான இப்படம் உலகளவில் பலரைக் கவர்ந்தது. 11 பிரிவுகளின் கீழ் இப்படம் விருதுகளை அல்ல காத்திருக்கிறது. யார்கோஸ் லாந்திமோஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நாயகி எம்மா ஸ்டோனின் நடிப்பு பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றது. இப்படம் எந்த ஓடிடிகளிலும் வெளியாகவில்லை. ஆனால், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்மூரில் இல்லை!

_ கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் (killers of flower moon) -  ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் டிகாப்ரியோ, ராபர்ட் டி நிரோ நடிப்பில் வெளியாகியுள்ளது ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ திரைப்படம். 2024 ஆஸ்கரில் 10 பிரிவுகளுக்குத் தேர்வாகியுள்ளது. இப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை, ஆப்பிள் டிவி தளத்தில் பார்க்கலாம். 

_ பார்பி (barbie) - 2023-ல் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. ஃபேண்டசசி படமாக உருவான இது ரூ.8,000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இயக்கம் - கிரிட்டா கெர்விக். ஆஸ்கரில் 8 பிரிவுகளில் தேர்வாகியுள்ள  பார்பியை மேக்ஸ் தளத்தில் காணலாம்.

_ மேஸ்ட்ரோ (maestro) - பிராட்லி கூப்பர் இயக்கத்தில் உருவான இப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்து திரைக்கு வந்தது. பிரபல இசைக் கலைஞர் லியானர்ட் ஃபெர்ன்ஸ்டைனின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கரில் பங்கு பெறுகிறது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.


 
_ அமெரிக்கன் பிக்சன் (american fiction) - அறிமுக இயக்குநர் கோர்ட் ஜெஃபர்சனின் முதல் படமான அமெரிக்கன் பிக்சன் ஒரு நாவலாசிரியரின் வாழ்க்கையையும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் பேசுகிறது. 5 விருதுகளுக்காக இந்த முறை ஆஸ்கரில் களமிறங்கும் அமெரிக்கன் பிக்சன் படத்தை  திரையரங்குகளில் மட்டுமே இப்போதைக்குக் காண முடியும். எந்த ஓடிடியிலும் வெளியாகவில்லை,

_ அனாடமி ஆஃப் ஏ ஃபால் (Anatomy of a fall) - 76-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பால்ம் டி ஓர் விருதை வென்று அசத்தியது. கணவனின் மரணத்தால் விசாரணைக்கு உட்படும் எழுத்தாளரான மனைவியின், நீதிமன்ற காட்சிகளால் நிறைந்த இப்படம் ஆஸ்கர் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 5 பிரிவுகளுக்குத் தேர்வான இப்படத்தை அமேசான் பிரைம், யூடியூப் தளங்களில் கட்டணம் செலுத்திப் பார்க்கலாம்.
 
மேலும், தி ஹோல்டோவர்ஸ் (The holdovers), தி சோன் ஆஃப் ஏ இண்ட்ரெஸ்ட் (The zone of interest) படங்களும் 5 பிரிவுகளில் போட்டியிடுகின்றன. இதில் ஹோல்டோவர்ஸ் படத்தை பிரைம், யூடியூப் தளத்திலும் சோன் ஆஃப் இண்ட்ரெஸ்ட் படத்தைத் திரையரங்குகளில் காணலாம்.

இவை போக கொரியன் திரைப்படமான பாஸ்ட் லிவ்ஸ் (past lives) பாராமவுண்ட் தளத்திலும், நியாட் (nyad), சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ (society of the snow),ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் (spider men across the spider verse), மே டிசம்பர் (may december), ரஸ்ட் இன் (rust in) ஆகிய ஓரிரு பிரிவுகளில் தேர்வான இப்படங்களை நெட்பிளிக்ஸிலும்  தி கலர் பர்ப்புள் (the color purple) 20 டெஸ் இன் மரியுபோல் (20 days in mariupol), தி பாய் அண்ட் ஹெரோன் (the boy and heron) யூடியூப்பில் கட்டணம் செலுத்திக் காணலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com