மதுரையிலிருந்து ரோட்டர்டம் வரை..!

நடிகர் சூரியின் விடுதலை, ஏழு கடல் ஏழு மலை திரைப்படங்கள் ரோட்டர்டம் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.
மதுரையிலிருந்து ரோட்டர்டம் வரை..!


நடிகர் சூரி 26 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறார் என்றால் நம்ப முடியாது. காரணம், சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் என்றில்லை கூட்டத்தில் நிற்கச் சொன்னாலும் மறுப்பே இல்லாமல் ஒப்புக்கொள்வராம். எப்படியாவது நல்ல நடிகராகி விட வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள்தான் 1998-ல் மறுமலர்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக அறிமுகமான சூரியைக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகக் காத்திருக்க வைத்திருக்கிறது.

சூரியின் சினிமா வாழ்வில் திருப்பத்தைக் கொடுத்தது 2009-ல் வெளியான ’வெண்ணிலா கபடிக்குழு’ படம்தான். அப்படத்திற்குப் பின் எந்த உணவகத்திற்குச் சென்று பரோட்டாவைப் பார்த்தாலும் சூரியின் நினைவுதான் முதலில் எழுந்திருக்கும். 50 பரோட்டாவைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டப்படி, ‘திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிங்க’ என்கிற சூரியின் வசனத்திற்குக் கிடைத்த வரவேற்பால், தன் திரையுலக வாழ்க்கையில் மீண்டும் முதல்ல இருந்து கஷ்படப்படு என்ற நிலைக்கு சூரிக்கு வரவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து,  ‘களவாணி’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘போராளி’,‘வேலாயுதம்’ படங்களில் சூரியின் நகைச்சுவைக்கென விசில்கள் பறக்கத் துவங்கின.  மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா படங்களின் தொடர் வெற்றியால் வடிவேலுக்கு மாற்றாக பல படங்களில் வேகமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சூரியை, உச்சத்துக்குக் கொண்டு சென்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’தான். அதன்பின், அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகரானவர் நட்சத்திர நடிகர்களின் அனைத்து படங்களிலும் தவறாமல் இடம் பெற்ற முகமாகவே மாறிப்போனார்.

நடிகர் சந்தானம் நாயகனாக அறிமுகமான பின், அவருக்குச் செல்ல இருந்த மொத்த படங்களும் சூரியின் கதவையே தட்டின. சில படங்களைத் தவிர்த்து கதாநாயகனுக்கு அடுத்த இடத்திலிருக்கும் கதாபாத்திரத்தை கவனமாக தேர்வு செய்து படம் முழுக்க வரும்படி பார்த்துக்கொண்டார். அந்த புத்திசாலித்தன முடிவால் சில படங்களில் நகைச்சுவையைத் தாண்டி சூரியால்  உணர்ச்சிகர கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

அந்த நம்பிக்கைக்கு விடுதலை உதாரணம். சூரியின் இரண்டாவது இன்னிங்க்ஸை இயக்குநர் வெற்றிமாறன் துவங்கி வைத்தார். அதுவரை, நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சூரி, விடுதலை படத்தில் தான் ஒரு நல்ல ‘நடிகன்’ என்பதை அழுத்தமாக பதிவுசெய்தார். கிளைமேக்ஸில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை விரட்டிப் பிடிக்கும் காட்சியில் விசில் ஒலிகள் அதிகரித்ததும் அவரை நாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை உணர முடிந்தது. அடுத்ததாக, விடுதலை - 2 திரைக்கு வருகிறது. தொடர்ந்து, கூழாங்கல் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் நாயகனாக நடித்த கொட்டுக்காளி படமும் வெளியாக உள்ளது. இனி, நகைச்சுவைக் கதாபாத்திரங்களுக்கு சூரி திரும்புவாரா என்பது தெரியாது.

ஆனால், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தோன்றுவார் என்பது உறுதி. காரணம், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள கருடன் படத்தின் நாயகனாக சூரிக்கு சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. கருடனின் அறிவிப்பு டீசர் இதுவரை 5 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுடன். ‘யாரெல்லாம் சூரியின் ஆக்சனுக்குக் காத்திருக்கிறீர்கள்’ என்கிற ரசிகர்கள் கேள்விக்குக் கிடைத்த வரவேற்பு சூரிக்கு புதிய நம்பிக்கையை அளித்திருக்கும்.

அனைத்தையும் விட சுவாரஸ்யம், முதன்மையான சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் ரோட்டர்டம் திரைப்பட விழாவில் விடுதலை, ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த இரண்டு படத்திலும் சூரியின் பங்களிப்பு இருக்கிறது! ஒரே நாயகனின் திரைப்படங்கள் ரோட்டர்டம்மில் அடுத்தடுத்து திரையிடப்படுவது சாதாரணமானதா என்ன?

அடுத்து, கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. நாயகனாக அறிமுகமான, முதல் இரண்டு படங்களிலேயே சர்வதேச அளவில் கவனம் பெற்ற சூரி தன் பொறுமை, திறமை, வாய்ப்பு என எல்லாவற்றையும் கவனமாகப் பயன்படுத்தி மதுரை மைந்தனிலிருந்து ரோட்டர்டம் கலைஞன் வரை பரிணாமம் அடைந்திருப்பது சாதனைதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com