சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்டாரா பிக்பாஸ் பாலாஜி?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலாஜி முருகதாஸ், அவர் நடித்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதிஷ் குமார் இதுவரை சம்பளம் தரவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மாடலிங் துறையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்குபெற்று ரன்னர்-அப் ஆன பாலாஜி முருகதாஸ், ஒடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று டைட்டில் வின்னராகி வெற்றி பெற்றார். பின்னர், திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’தங்க மீன்கள்’, ’தரமணி’ ஆகிய படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.சதீஷ்குமார் தயாரித்து, இயக்கிய ‘ஃபயர்’ என்ற படத்தில் நடித்திருந்தார் பாலாஜி. இந்தப் படத்தில் அவருடன் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி என பிக்பாஸ் பட்டாளமே நடித்திருந்தனர்.
கடந்த வருடம் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் சதீஷ்குமார் தற்போது வரை ஒரு ரூபாய் கூட தனக்கு சம்பளம் தரவில்லை என பாலாஜி முருகதாஸ் தனது எக்ஸ் தளப் பதிவில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேலும், இதனால் சினிமாவிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். அவருக்கு பல இணையவாசிகளும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இப்போதுவரை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.