மார்வெல் சினிமெட்டிக் யுனிவர்ஸின் படைப்பில் ராபர்ட் டௌனி ஜூனியர் மீண்டும் நடிக்கவுள்ளார்.
ஆங்கிலத் திரைப்பட நிறுவனமான மார்வெலின் மார்வெல் சினிமெட்டிக் யுனிவர்ஸில் அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் அவரும் பிரபலமானார்; மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு வெளியான அயர்ன் மேன் முதல் பாகத்தின் மூலம் மார்வெல் ஸ்டுடியோஸ் முதல்முறையாக அதிக லாபத்தை ஈட்டியது. தொடர்ந்து, மார்வெல் வெளியிட்ட அயர்ன் மேன் 2, அயர்ன் மேன் 3, அவென்ஜர்ஸ் 2012, அவென்ஜர்ஸ்: ஏஜ் ஆஃப் தி அல்ட்ரான், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங், அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் மற்றும் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படங்களில் நடித்தார்.
இவர் நடித்த அனைத்து மார்வெல் படங்களும் அதிகளவிலான வசூலைக் குவித்தது. இருப்பினும், 2019-இல் வெளியான அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டௌனி ஜூனியரின் அயர்ன் மேன் பாத்திரம் இறக்கும் வகையில் முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மார்வெல் வெளியிட்ட பெரும்பாலான படங்கள் சொல்லும் அளவிற்கு வசூலாகவில்லை. கடைசியாக 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் திரைப்படம் மட்டுமே வசூலானது.
இந்நிலையில் தற்போது, மார்வெலின் அடுத்த படைப்பான அவென்ஜர்ஸ்: டூம்ஸ் டேயில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கவிருப்பதாக, கடந்த ஜூலை 25ஆம் தேதியில் நடைபெற்ற சான் டைகோ காமிக் கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபெயிஜ் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, உலகளவில் உள்ள மார்வெல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தினையும் அவென்ஜர்ஸ் படத்தின் இயக்குநர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ ஆகிய இருவரும் இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவென்ஜர்ஸ்: டூம்ஸ் டேயில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் ராபர்ட் டௌனி ஜூனியர் நடிக்கவுள்ளார். டாக்டர் டூம்ஸ் டே காமிக்ஸ் கதையின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில், ராபர்ட் டௌனி ஜூனியர் வில்லனாக நடிக்கவுள்ளார். காமிக்ஸ் கதையில் ஃபென்ஸ்டாஸ்டிக் ஃபோர் 5 கதையின் வில்லனாக டாக்டர் டூம் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
2025ஆம் ஆண்டின் மத்தியில் படப்பிடிப்பு தொடங்கி, 2026ஆம் ஆண்டில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அவென்ஜர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் படத்திலும் டாக்டர் டூம் கதாபாத்திரம் இடம்பெறவுள்ளது. இந்தப் படமானது, 2027ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரு படங்களையும் இயக்குவதற்காக சுமார் ரூ. 669 கோடிக்கு மேல் செலவிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ஓபன்ஹெய்மர் படத்தில், ராபர்ட் டௌனி ஜூனியர் துணைநடிகராக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ராபர்ட் டௌனி ஜூனியர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த துணைநடிகருக்கான விருதினைப் பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.