நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன்1) மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
அதில், மொத்தம் 6 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவே பாடல்கள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது இன்று மதியம் 3 மணிக்கே பாடல்கள் அனைத்தும் வெளியாகுமென லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.