

நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் ’சூப்பர் ஹீரோ’ கதையில் உருவாகியுள்ள திரைப்படம் வெப்பன். நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த படத்தின்மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. கமலா தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த போஸ்ட்டர் பலருக்கு சத்யராஜை சூப்பர் ஹீரோவாகப் பார்க்க எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும்! ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா வெப்பன்?
தமிழில் ’சூப்பர் ஹுயூமன்’ (அ) ’சூப்பர் ஹீரோ’ கான்சப்ட்டில் வெளியான படங்கள் மிகக் குறைவுதான். முகமூடி, வேலாயுதம், ஜித்தன், ஹீரோ என வெளியான திரைப்படங்களும் வெகுநாட்கள் மனதில் நின்றதில்லை எனலாம். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன்போல உலகமெங்கும் பிரபலமாகும் அளவில் படங்கள் இல்லை என்றாலும் தமிழ் திரையுலக வரலாற்றில்கூட எந்த சூப்பர் ஹீரோவாலும் அழுத்தமான தடத்தை பதிக்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படமும் ஒருவகை சூப்பர் ஹீரோதான். அதுவும் படம் வெளியான புதிதில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டிருந்தாலும், கடற்கரை மணலில் வைத்த கால்தடம்போல சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகின்றன. எந்த படமும் ஒரு சூப்பர் ஹீரோ வைக்க வேண்டிய அழுத்தமான தடத்தை பதிக்கவில்லை என்பது சோகம்தான். அந்த வரிசையில் வெப்பன் திரைப்படம் போட்டிக்கே வராமல் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறது!
ஒரு ’சூப்பர் ஹீரோ’ கான்செப்ட்டை எடுக்க முடிவு செய்தபின்னர் கவனித்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்பதைத் தாண்டி, ஒரு படம் எடுக்க முக்கியமான விஷியங்களைக்கூட செய்யத் தவறியிருக்கிறார் இயக்குநர் குகன். சூப்பர் ஹியூமன் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது சரிதான், ஆனால் அத்தியாவசிய லாஜிக் கூட இல்லாமல் படம் திணறுகிறது.
கதைச் சுருக்கம் என்னவென்றால், தேனியில் ஏற்படும் விபத்து ஒன்றில் அதிசயமான வகையில் ஒரு சிறுவன் தப்பிக்கும் சிசிடிவி காட்சி வைரலாகிறது. உலகில் அசாதாரண சக்திகளைப் பெற்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என நம்பும் ஹீரோ வசந்த் ரவி அந்த விடியோவைப் பார்க்கிறார். யூடியூப் சேனல் நடத்திவரும் அவர், இந்த கன்டென்ட்டைத் தேடி தேனிக்கு தன் குழுவுடன் செல்கிறார். இதற்கிடையில் இந்திய பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் ரகசிய குழுவான பிளாக் சொசைட்டியை நடத்தி வரும் வில்லனின் ஆட்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அவர்களைக் கொல்வது ஒரு சூப்பர் ஹியூமன் என வில்லன் கண்டுபிடிக்கிறார். அவரும் அந்த ஆளைத் தேடுகிறார். இப்படி இந்த இருவரின் தேடல் என்ன ஆனது, காட்டுக்குள் அமைதியான வாழ்க்கை வாழும் சூப்பர் ஹுயூமன் சத்தியராஜ் என்ன ஆனார்? என்பதுபோன்ற கேள்விகளே படத்தை நகர்த்த பாடுபடுகின்றன.
சூப்பர் ஹுயூமன் படத்தில் செய்திருக்க வேண்டிய எந்த மெனக்கெடுதலும் இந்த படத்திற்கு தரப்படவில்லை என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சண்டைக் காட்சிகளும் சரி, கிராபிக்ஸ் கொட்டிக்கிடக்க வேண்டிய காட்சிகளும் சரி, மோசம்! ஆரம்பத்தில் இந்திய சுதந்திரத்தில் ஆரம்பிக்கும் காட்சிகள் ஏற்படுத்திய சுவாரசியம், மீத படத்தில் எங்கும் தென்படவில்லை. எந்த கதாப்பாத்திரத்தையும் ஒழுங்காக வடிவமைக்காமல், நடிகர்களிடம் தேவையான நடிப்பைப் பெறாமல் படத்தை அரையும் குறையுமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். சொல்லவரும் கதையைத் தெளிவாகச் சொல்லவும் இல்லை.
சூப்பர் ஹீயூமன்ஸ் தொடர்பான யூட்டியூப் சேனல் நடத்தும் ஹீரோவின் குழு அந்த சிசிடிவி காட்சியைப் பார்த்துவிட்டு, ‘இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை’ எனச் சொல்வது அடிப்படை லாஜிக் குறைபாடு இல்லையா? காட்சிகள் அனைத்தும் அயர்ச்சியை மட்டுமே ஏற்படுத்துகின்றனவே தவிற, எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.
படத்தில் ஏஐ சத்யராஜ் வருகிறார் என விளம்பரப்படுத்தியபோது ஏற்பட்ட ஹைப், டெக்ஸ்ட் டூ விடியோ ஏஐ (Text To Video AI) பயன்படுத்தி ப்ளாஸ்பேக்கை நகர்த்தியிருப்பது மிகப்பெரும் ஏமாற்றமாக மாறுகிறது. கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகளில் முக்கால்வாசி நம்மை முனங்கத்தான் வைக்கிறது.
ஒழுங்கான திரைக்கதையை அமைக்காததும், ஒழுங்கான நடிகர்களைத் தேர்வு செய்யாததும் (அ) அவர்களிடம் தேவையான நடிப்பைப் பெறாததும், கிராபிக்ஸ் காட்சிகளை சரியாக உருவாக்க முடியாததும், சலிப்பை ஏற்படுத்தும் வசனங்களால் படம் நிரம்பியிருப்பதும் இந்த சூப்பர் ஹீரோவை மற்ற ஹீரோக்களிடமிருந்து தள்ளி நிற்கச் செய்துவிடுகின்றன.
படத்தில் சூப்பர் ஹியூமனாக தோன்றும் சத்யராஜ் கச்சிதமாகப் பொருந்துவது ஆறுதலளிக்கிறது. மற்ற அனைத்து நடிகர்களுக்கு மத்தியில் சத்யராஜ் வரும் காட்சிகளைப் பார்க்கும்போது அவரது தேர்ந்த நடிப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. கோவமாக தன் சக்திகளை வெளிப்படுத்தும்போதும், தன் மனைவியை நினைத்து ஏங்கும்போதும் கதாப்பாத்திரமாக மின்னுகிறார். வசந்த் ரவி படம் முழுதும் ஓவர் ஆக்டிங் மட்டுமே செய்கிறார். ஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே கதையோடு ஒப்பிடும்போது நன்றாகவே உள்ளன. ஆனாலும் இரண்டிலும் கவனம் தேவையென்பது வெளிப்படை. இசை படத்திற்கு பலம் சேர்க்க பாடுபட்டிருக்கிறது, பல இடங்களில் கைகொடுத்துள்ளது.
இரண்டு மணிநேரத்தைக் கொடுத்து, டிக்கெட்டும் எடுத்து, சீட்டில் அமரும் பார்வையாளர்களை ஏமாற்றாத படங்களைக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியம். இயக்குநர் குகன் சென்னியப்பன் எழுத்திலும், கிராபிக்ஸ் காட்சிகளின் உருவாக்குவத்திலும் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியதும் மிகவும் முக்கியம். வெப்பன் 2-வையாவது, தமிழ் ’சூப்பர் ஹீரோ’ ரசிகர்கள் ரசிக்கும் அளவில் எடுப்பார் என நம்புவோம்!
அது என்னவோ தெரியவில்லை தமிழில் சூப்பர் ஹீரோ படம் எடுத்து அதை சூப்பராக ஓட வைக்க யாராலும் முடியவில்லை! இனி ஒரு இயக்குநர் பிறந்துதான் வரவேண்டும் போல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.