

நடிகர் மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஷ்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரா. நீண்ட இடைவேளிக்குப் பின் மௌனராகம் மோகன் நாயகனாக நடித்து உருவான இந்த திரைப்படம் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தின் டிரெய்லர் வெளியான பின்னர் அந்த எதிர்பார்ப்பு மெதுவாக மறைந்தது. ஆனால் திரைப்படம் எப்படி இருக்கிறது?
முதலில் கதை என ஒன்று கையில் பட்டால் அதை பொறுமையாக உட்கார்ந்து எழுதி முழுமையாக்கி, பின்னர் அதை திரைக்கதையாக்கி, நேர்த்தியாக, குறைகள், லாஜிக்குகள் இடிக்காமல் சுவாரசியாமத் தர வேண்டியது ஒரு இயக்குநரின் முழு கடமை. ஆனால் இயக்குனர் மொத்தமாக வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டார் போலத் தோன்றுகிறது.
கதையிலும் சரி, திரைக்கதையிலும் சரி, காட்சி அமைப்புகள், வசனங்கள் என அனைத்திலும் இயக்குனர் சிறப்பாக கோட்டைவிட்டுள்ளார். கதைச் சுருக்கம் எனப் பார்த்தால், ராம் எனும் கதாப்பாத்திரமாக நடித்துள்ள மோகன் ஒரு ஜாலியான அப்பாவாக தன் மகளை வளர்க்கிறார். அந்த மகள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மோகன், தனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக்கொண்டு தன் மகள் இறப்புக்குக் காரணமானவர்களைத் தேடுகிறார். மகளைக் கொன்றவர்கள் கிடைத்தார்களா? ஏன் இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டார்? அவரை ஏன் ஒரு காவல் அதிகாரி திடீரென துரத்துகிறார்? என்பதுபோன்ற ஓக்கேவான, கேட்டு அழுத்த கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த ஹரா!
படத்தின் லாஜிக்கைப் பற்றி முதலில் பேச வேண்டுமென்றால், இந்த ஒரு விஷயம்போதும்: தான் இறந்துவிட்டதாக உலகை நம்பவைத்துவிட்டு வேறு பெயரில் சுற்றிக்கொண்டிருக்கிறார் மோகன். அவரது மகளின் ஆசிரியர் வீட்டிற்கு வரும்போது, உடனே அவரது புகைப்படத்திற்கு பூ வைப்பது, தாலியைக் கழற்றி ஒளித்துவைப்பது என தீவிரமாக வேலை செய்கிறார் மோகனின் மனைவி. ஆனால் மோகனோ, உடையிலிருந்து, கண்ணாடியிலிருந்து, தாடிவரை எதையும் மாற்றிக்கொள்ளாமலேயே ஊருக்குள் வலம் வருகிறார். அதற்கு ஒரு தீம் மியூசிக் வேறு போடுகிறார்கள். படம் முழுக்க இதுபோன்ற லாஜிக்குகள்தான் கொட்டிக்கிடக்கின்றன.
இஸ்லாமிய பெயருடன் கள்ளத்துப்பாக்கி வாங்கி தன் மகளின் சாவுக்கு காரணமானவர்களைத் தேடும் பாதையில் நம்மை சோதிக்கிறார் ராம் எனும் மோகன். நேராகத் தொடவேண்டிய மூக்கை தலையைச் சுற்றி தொட்டு நம்மை பெருமூச்சு விடவைக்கிறார். எந்த ஒரு மாஸ் பின்புலமும் இல்லாமல் சாதாரணமாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஆள் ஒரு மிகப்பெரிய ரவுடி நெட்வொர்க்கை பிடிக்கும் காட்சிகளுக்கு பார்வையாளர்கள் கைதட்ட மற(று)க்கிறார்கள். யோகி பாபுவை வைத்து முயன்ற காமெடிக் காட்சிகளில் படம் பார்க்கவே மறுத்து பலர் போன் நோண்டத் துவங்குகிறார்கள்.
என் மகளுக்கு முதல் மாதவிடாய் என்பதால், அவளை தேர்வு எழுத அனுப்ப விரும்பவில்லை, ஒரு வருடம் வீணானாலும் பரவாயில்லை, தேர்வுக்கு அனுப்ப மாட்டேன் என்கிறார், வீட்டிலிருந்தபடியே மகள் தேர்வு எழுத வழிவகை செய்ய முன்வரும் பள்ளி நிர்வாகத்தின் உதவியையும் மறுக்கும்போது மண்டை சூடாகி கண்கள் கலங்குகின்றன. அவர் சொல்லவரும் கருத்துக்களை நேக்காக புரியவைக்க முயலாமல், இந்த காலப் பார்வையாளர்கள் ’கிரிஞ்’ எனச் சொல்லும் காட்சிகளாக வடிவமைத்து பார்வையாளர்கள் மோகனை ரசிக்கவைக்கத் தவறுகிறார் இயக்குநர்.
ஒரு பெரிய சமூகப் பிரச்னையை படமாக எடுக்க முயலும்போது, முதலில் அந்த பிரச்னையின் ஆழம், அதனால் பாதிக்கப்படுபவர்களில் துன்பம் ஆகியவற்றை பார்வையாளர்கள் உணரும்படியான காட்சிகள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஹீரோ எதற்காக போராடுகிறார், எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார், என்பதுபோன்ற கனெக்ட்டுகள் உருவாகும். ஆனால் இங்கு மோகனை பெரிய ஹீரோவாக காட்டுவதே முக்கியமாக உள்ளது. அவர் வரும்போது போகும்போது எல்லாம் தீம் மியூசிக்கைப் போட்டு நம்மை கடுப்பேத்துகிறார்கள்.
யாராலும் முடியாத காரியங்களை அசால்ட்டாக செய்துமுடிக்கும்போது எந்த ஹைப்பும் ஆகாததற்குக் காரணம், ராம் எனும் கதாப்பாத்திரத்தை சரியாக வடிவமைக்காததுதான். அவருக்கு மகளுக்கு இருக்கும் நெருக்கத்தைக் காட்ட முயலும் காட்சிகள் மிக மிக செயற்கையாகத் தெரிவது படத்தின் பல குறைகளில் ஒன்று.
நடிகர்களுக்கான தேர்வு படத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது. மோகன் அவரது கெட்டப்பில் திரையில் கச்சிதமாக தோன்றுகிறார். ஆனால் மற்ற கதாப்பாத்திரங்களிடமிருந்து போதுமான நடிப்பைப் பெறத் தவறியிருக்கிறார் இயக்குனர். மகளின் தோழி, அவரின் காதலன் என பலர், எதார்த்த நடிப்பை வழங்க சிரமப்படுகிறார்கள் அல்லது அவர்களின் முழு நடிப்பை இயக்கநரால் பெற முடியவில்லை எனலாம்.
ஒழுங்காக காட்சியாக்கப்படாத காட்சிகள் படமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. சண்டைக்காட்சிகளாக இருக்கட்டும், மோட்டிவேசனல் ஸ்பீச்சாக இருக்கட்டும், க்ளைமேக்ஸாக இருக்கட்டும் எதிலுமே படம் தேறவில்லை. இறந்துபோன மகள் குறித்த கடைசி டுவிஸ்ட்டில் நிம்மதி கிடைக்கிறது, ஆனால் அதுவும், படம் முடிந்துவிட்டது எனும் நிம்மதி மட்டுமே. மோகனை தற்போதைய திரைவிரும்பிகளுக்கு ஏற்றதுபோல் காட்டி அவரை மீட்டெடுக்காமல், ’கிரிஞ்’ கதை, ’கிரிஞ்’ காட்சிகள், ’கிரிஞ்’ வசனங்களால் படத்தை நிரப்பியுள்ளனர்.
மொத்தத்தில் மோகனின் கம்பேக் திரைப்படத்தை, இரண்டரை மணிநேரம் எடுக்கப்பட்ட தேறாத குறும்படம்போல் எடுத்து நம்மை ஏமாற்றுகிறார் இயக்குனர் விஜய் ஷ்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.