
நடிகர் ரஞ்சித் காதல் திருமணங்கள் குறித்து காட்டமான கருத்துகளைக் கூறியுள்ளார்.
நடிகர் ரஞ்சித் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார்.
சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். தற்போது, கவுண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கவுண்டபாளையம் படத்தின் புரோமோஷனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரஞ்சித்திடம், ‘காதல் திருமணங்கள் சமூகநீதியை நிலைநாட்டுவதாகக் கருத்து உள்ளது. நீங்கள் அதை நாடகக் காதல் என்கிறீர்களே?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ரஞ்சித், “சமூகநீதியைப் பற்றி பேசினால் எனக்கு கடும் கோவம் வந்துவிடும். மகளைப் பெற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து கிளிபோல் ஆளாக்கியதும், கண்டவன் தூக்கிச் செல்வதுதான் சமூகநீதியா? உங்களைப் போன்ற நாலு பேர் கையெழுத்துப்போட்டால் திருமணம் ஆகிவிடுமா? அப்படியென்றால், பெற்றோர்களின் நிலை?
சமூகநீதியைப் பேசும் போராளிகள் முதலில் தன் மகளுக்கு சுயமரியாதைத் திருமணத்தைச் செய்துவிட்டு பின், அடுத்தவர்களின் மகளுக்கு திருமணம் செய்து வைக்கட்டும். சாதியப் பிரிவினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இத்திருமணங்கள் நடத்தப்படுகின்றன. பெற்றோர் கையொப்பம் இல்லாமல் காதல் திருமணங்கள் செல்லுபடியாகாது என பதிவாளர் அலுவலகத்தில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாடகக் காதல்கள் நிகழாது. நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.