

பிரபாஸ், கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி என இந்திய திரை பட்டாளமே இறங்கி ஆடிய களம் கல்கி 2898 AD. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், நீண்டகால படப்பிடிப்பிக்குப் பின் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.
மகாபாரதக் கதையின் அடுத்த பாகமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகவும் ’பேசிக்’கான கதைக்களத்தைதான் கொண்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு யுகத்திலும் தீமை திழைத்தோங்கும்போது, கடவுள் பிறப்பார், அவர் உலகைக் காப்பாற்றுவார்! அதேபோல் கலியுகத்தில் தீமை ஓங்கியுள்ள நேரத்தில், தீபிகா படுகோன் வயிற்றில் கடவுள் சிசுவாகிறார். அந்தக் கடவுள் குழந்தையை தீபிகா பெற்றெடுக்காமல் தடுக்க நினைக்கும் தீமை ஒரு பக்கம், தீபிகாவை காப்பாற்ற நினைக்கும் நன்மை ஒரு பக்கம். இந்த இருபக்கத்தில் ஹீரோ பிரபாஸ் எந்த பக்கத்தை தேர்வு செய்தார்? யார் வெல்லப்போவது? என்பதே கதைக்களம்.
இந்திய திரை வரிசையில் நிறைய திரைப்படங்கள், உருவாக்கத்தில் ”ஹாலிவுட் தரம்” எனும் இலக்கைத் தொட முயன்று ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ”க்” இருக்கத்தான் செய்யும். அந்த வரிசையை முந்தி முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது இந்த கல்கி திரைப்படம்.
மகாபாரத நிகழ்வுகளில் தொடங்கும் திரைப்படம், அஷ்வத்தாமாவாக அமிதாப் பச்சனை அறிமுகம் செய்யும்போது ’இது நம்ம ஊர் படம்தானா?’ என வியக்க வைக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அவ்வளது நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. படம் துவங்கி ’கல்கி’ என பெயர் வரும் வரை அந்த வியப்பு அடங்காமலிருக்கிறது. எழுத்தும், இசையும், கிராபிக்ஸும் அந்த முதல்காட்சியில் கச்சிமாக உள்ளன.
எதிர்கால உலகம் எப்படியிருக்கும் என மிக நேர்த்தியான காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின். உலகின் கடைசி நகரமான காசியில் தண்ணீருக்கும் உணவுக்கும்கூட போராட வேண்டிய நிலையில் ஒரு தட்டு மக்களும், காம்ப்ளக்ஸ் எனும் பகுதியில் சகல வசதிகளுடன் தனியாக உயரத்தில் ஒரு தட்டு மக்களும், இந்த ஏற்ற இறக்கங்களை எதிர்க்கும் போராட்ட உணர்வுடன் ஒரு கூட்டம் என சமூக கட்டமைப்புகளையும் தெளிவாக விளக்கும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
காம்ப்ளக்ஸில் பெண்களை நடத்தும் விதம், அவர்களின் ரகசிய ஆய்வுகள் எல்லாம் தரமாக உள்ளன. படம் முழுக்க போடப்பட்ட செட்டுகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் மிகக் கச்சிதமாக இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத காட்சிகளை நமக்குக் காட்டுகின்றன.
ஆனால்.. உருவாக்கத்தில் உச்சத்தைத் தொட்டு சிரிக்கும் கல்கியால், திரைக்கதையில் திடமாக நிற்க முடியவில்லை. முதல் காட்சியைத் தவிர படத்தில் முக்கால்வாசிக் காட்சிகளில் எழுத்துக்கு வேலை கொடுத்ததாகவே தெரியவில்லை. வசனங்களும், காட்சிகளும் உணர்வுகளைக் கடத்தத் தவறிவிடுவது மிகப்பெரிய ஏமாற்றம். ஒருசில காட்சிகள் நன்றாக இருந்தாலும், பல காட்சிகள் அயர்ச்சியை மட்டுமே அளிக்கின்றன.
முதல் பாகம் முழுதும் கேமியோக்களால் நிறைந்துள்ளது. பெரும்பாலும் கதைக்குத் தேவையற்ற விஷியங்களை விவரிக்க முயன்று போரடிக்கச் செய்கிறார் இயக்குனர். காம்ப்ளக்ஸைக் காட்டிய அளவுக்கு காசியை சரியாகக் காட்டாதது, சண்டைக் காட்சிகளை ஒழுங்காக உருவாக்காதது, ஆங்காங்கே முயன்று தோன்ற காமெடிக் காட்சிகள், நீளமான ஹைப் ஏற்றாத ஹீரோ பில்டம் காட்சிகள் எல்லாம் கல்கியின் பலவீனம். டிரைலரில் கண்டுபிடிக்கப்பட்டு, மீமாக பரவிய விஷியத்தை டிவிஸ்ட்டாக காட்டி ஏமார்ந்திருப்பது சோகம்.
படத்தின் மிக அருமையான காட்சிகள் என்றால், அது உலகநாயகன் கமலஹாசனின் காட்சிகள்தான். காட்சியமைப்பும் சரி, கிராபிக்ஸும் சரி கமலை அனைவரையும் மிஞ்சி நிற்க வைக்கிறது. அவர் பேசும் வசனங்களும், அவரது தோற்றமும் அவர் கதாப்பாத்திரம் மீதான ஆவலை கூட்டுகின்றன. கிளைமேக்ஸில் அவரின் அசைவுகள் எல்லாம் சிலிர்க்க வைக்கின்றன. தீபிகா படுகோன் சரியான தேர்வாக தெரிகிறார். அமிதாப் பச்சனும் தன் கதாப்பாத்திரத்தில் மின்னுகிறார்.
மொத்தத்தில் பொறுமையுடன் கண்டுகளிக்க வேண்டிய, தரத்தில் குறையில்லாத படமாக அவதரித்திருக்கிறது கல்கி 2898 AD.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.