திருமணத்துக்கு மோடியை வரவேற்ற வரலட்சுமி சரத்குமார்!

திருமணத்துக்காக நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், எல். முருகன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார் வரலட்சுமி சரத்குமார்.
பிரதமர் நரேந்திர மோடியை குடும்பத்துடன் வரவேற்ற வரலட்சுமி சரத்குமார்
பிரதமர் நரேந்திர மோடியை குடும்பத்துடன் வரவேற்ற வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியை தில்லி நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். நடிகர் சரத்குமார், ராதிகா, வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம்வரும் வரலட்சுமி சரத்குமார், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ்வை திருமணம் செய்யவுள்ளார்.

ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இதில், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார் சரத்குமார்.

இதனிடையே தில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். தனது வருங்கால கணவர் நிக்கோலாய், பெற்றோர் சரத்குமார் - ராதிகா ஆகியோருடன் சென்று மோடிக்கு அழைப்பிதழ் வழங்கினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே குடும்பத்துடன்...
நாடாளுமன்றத்துக்கு வெளியே குடும்பத்துடன்...

அதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்தும் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார். இது தொடர்பான விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தில்லியில் ஒரு நாள். மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது பெருமை மிகுந்த தருணம். மிகவும் பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் எங்களுடன் நேரத்தை செலவிட்டார். எங்கள் திருமணத்துக்கு அவரை அழைப்பதன் மூலம் பெருமை அடைகிறோம். நீங்கள் அளித்த வரவேற்புக்கும் அன்புக்கும் மிகவும் நன்றி சார். இந்த தருணம் நிகழ காரணமாக இருந்த எனது தந்தை சரத்குமாருக்கு நன்றி.

நிர்மலா சீதாராமனுக்கு திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி
நிர்மலா சீதாராமனுக்கு திருமண அழைப்பு விடுத்த வரலட்சுமி

நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து திருமணத்துக்கு அழைத்தோம். கலை உள்பட பல்வேறு விஷயங்களை பற்றி பேசியது அற்புதமானது. எங்களுடன் நேரம் செலவிட்டதற்கு நன்றி. நமது தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எல். முருகனை சந்தித்ததும் மகிழ்ச்சி. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உங்களை எதிர்நோக்கியுள்ளேன். மொத்தத்தில் தில்லியில் அற்புதமான நாள் என வரலட்சுமி பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com