‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலால் யாருக்கும் வருமானமில்லை.. அதிர்ச்சியளித்த சந்தோஷ் நாராயணன்!

'எஞ்சாய் என்சாமி’ பாடலால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலால் யாருக்கும் வருமானமில்லை.. அதிர்ச்சியளித்த சந்தோஷ் நாராயணன்!
DOTCOM

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டில் மாஜா என்கிற நிறுவனம் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலை வெளியிட்டனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர் அறிவு எழுதிய இப்பாடலை அவரும் பாடகி தீயும் இணைந்து பாடினர்.

இப்பாடல் வெளியானது முதல் இன்றுவரை ரசிகர்களின் விருப்பப் பாடல்களில் ஒன்றாக நீடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

உலகெங்கும் கேட்கப்பட்ட ‘எஞ்சாய் எஞ்சாமி’ யூடியூப்பில் மட்டும் இதுவரை 48 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்த நிலையில், இப்பாடல் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் விடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், “எஞ்சாய் எஞ்சாமி வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பாடலுக்கான ராயல்டி உரிமம் 100 சதவீதம் எங்களிடம்தான் இருக்கிறது. இதனால், இதுவரை எவ்வளவு சம்பாதித்தோம் தெரியுமா? பூஜ்யம். மாஜா நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டும் எங்களுக்கு முறையாக வந்து சேர வேண்டிய எந்தத் தொகையும் இப்போது வரை கிடைக்கவில்லை” எனக் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட ரசிகர்கள் மாஜா நிறுவனத்தின் தூதரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து வந்தனர். தற்போது, சந்தோஷ் நாராயணன் இதுகுறித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், ”எனது அன்புக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் சார், இந்த ஒட்டுமொத்த மாஜா பிரச்சினையிலும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். பல போலி வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களுக்கு அவரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். மிக்க நன்றி சார். அறிவு, தீ, எஸ்விடிபி மற்றும் நான் உள்பட பல சுயாதீன கலைஞர்களுக்கு எந்தவகையிலும் வருவாய் கிடைக்கவில்லை. மின்னஞ்சல்களால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம்.

சுயாதீன கலைஞர்களை இந்தத் தருணத்தில் ஆதரிக்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். விரைவில், என்னுடைய வழிகாட்டி பா.ரஞ்சித் மற்றும் ராப் பாடகர் அறிவு ஆகியோருடன் இணைந்து பணிபுரிவேன். அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். மேலும் அனைத்து சுயாதீன கலைஞர்களுக்கும் அவர்களின் கட்டண நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்னையில், வருவாய் தொடர்பான விஷயங்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com