
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இணை தங்களின் விவாகரத்தை அறிவித்துள்ளனர். தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்தனர். ஜி.வி.யின் இசையும் சைந்தவியின் குரலும் ரசிகர்களின் மனதில் நிலைபெற்றவை.
இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. அந்த அறிவிப்பு அறிக்கையில், இந்த இக்கட்டான நிலையில் பத்திரிகையாளர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், ஜி.வி.பிரகாஷின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து ஜி.வி. அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன என்றும் தமிழர் மாண்பு குறைந்துவிட்டதா என்றும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இந்த நிலையில், இன்று சைந்தவி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், “எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மனஉளைச்சலைத் தருகிறது. எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை. ஒருவரின் மதிப்பை குலைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது.
பள்ளி காலத்திலிருந்தே நானும் ஜி.வி. பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இனியும் அந்த நட்பைத் தொடர்வோம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.