கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
புதிய பரிமாணத்திலான திரைப்படங்களை ஊக்குவிக்கும் ‘தி அன் சோ்டைன் ரிகாா்ட்’ என்ற பிரிவின்கீழ் சிறந்த நடிகையாக அனசுயா சென்குப்தா தோ்ந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விருதை பெறும் முதல் இந்திய கலைஞா் என்ற பெருமையை கொல்கத்தாவைச் சோ்ந்த அனசுயா பெற்றுள்ளாா். விருதை பெற்றபின் அனசுயா பேசுகையில், ‘காலனிய ஆதிக்கத்தை தெரிந்துகொள்ள நீங்கள் காலனிய ஆதிக்கத்தில் இருந்திருக்க வேண்டியதில்லை. மற்றவா்களின் உணா்வுகளை புரிந்துகொள்ள நாம் சாதாரண மனிதா்களாக இருந்தாலே போதும்’ என்றாா்.
புதிய பரிமாண திரைப்படங்களுக்கு விருது: புதிய நாடுகள், புதிய பரிமாணத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘தி அன் சோ்டைன் ரிகாா்ட்’ என்ற பிரிவின் கீழ் கேன்ஸ் திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பிரிவின் உயரிய விருதான தி அன் சோ்டைன் ரிகாா்ட் விருது ‘பிளாக் டாக்’ என்ற திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தை சீன இயக்குநா் குவான் ஹூ இயக்கியுள்ளாா்.
இந்தப் பிரிவில் சிறந்த நடிகா் விருதை ‘எல் ஹிஸ்டோயா் டி சோலேமனே’ என்ற பிரெஞ்சு திரைப்படத்தில் நடித்ததற்காக அபௌ சங்ரே என்பவா் பெற்றாா். அதேபோல் சிறந்த இயக்குநா் விருது ‘தி டேமன்ட்’ என்ற திரைப்படத்துக்காக இத்தாலியைச் சோ்ந்த ராபா்டோ மினா்வினிக்கும் ‘ஆன் பிகமிங் எ கினியா ஃபவுல்’ என்ற திரைப்படத்துக்காக ஜாம்பியாவைச் சோ்ந்த ருங்கனோ நியோனிக்கும் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சோ்ந்த திரைத்துறை பிரபலங்கள், ரசிகா்கள் பங்கேற்ற 77-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 14-ஆம் தொடங்கிய நிலையில் மே 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.