ரூ.10 கோடி கேட்டார்! தனுஷ் மீது நயன்தாரா பகிரங்க குற்றச்சாட்டு! என்ன பிரச்னை?

நடிகை நயன்தாரா, தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் கடிதம் வெளியிட்டுள்ளார்.
தனுஷ், நயன்தாரா
தனுஷ், நயன்தாரா
Published on
Updated on
2 min read

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் 3 பக்க கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன்  9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். 

இந்தத் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் விடியோக்கள் எதுவும் இன்றுவரை வெளியாகவில்லை.

விக்கி - நயன் திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட விடியோ, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாகியுள்ளது. அந்த விடியோவின் டிரைலர் அண்மையில் வெளியாகி நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தைப் பெற்றிருந்தது.

இந்தத் திருமண விடியோ நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்தது. பலரும் அந்த விடியோவைக் காண ஆவலோடு காத்திருக்கும் நிலையில், திடீரென நயன்தாராவின் புகார் கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த விடியோவுக்கும், நடிகை நயன்தாரா, தனுஷ் மீது அடுக்கடுக்காக வைத்திருக்கும் புகார்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பதே அடுத்த அதிர்ச்சி.

தனுஷ் இன்ஸ்டா பதிவில் நயன்தாரா கூறியதாவது:

டியர் தனுஷ் கே.ராஜா,

இந்தக் கடிதம் பல தவறான விஷயங்களை சரிசெய்வதற்காக...

உங்களது தந்தை, சகோதரர் உதவியின் மூலம் சினிமாவுக்கு வந்த நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். என்னைப் போன்று சினிமா பின்புலம் இல்லாமல், பெண்ணாக திரைத்துறைக்கு வந்து அதில் நிலைத்து நிற்பது சாதாரணமானது இல்லை. என்னைப் பற்றியும் எனது பணியின் நேர்மை பற்றியும் மக்களுக்குத் தெரியும்.

எங்களது திருமணத்தின் நெட்பிளிக்ஸ் விடியோவை உருவாக்க பலரும் உழைத்து வந்தார்கள். இந்தப் படத்தின் மீதும் என கணவர் மீதும் உங்களுக்கு இருக்கும் வன்மம்தான் இந்த விடியோவை இவ்வளவு நாள் வெளிவராமல் ஆக்கியது. எங்களது வாழ்க்கையில் நானும் ரௌடிதான் படம் முக்கியமானது. நீங்கள் தயாரிப்பாளராக இருப்பதால் அந்தப் படத்தில் எந்த ஒரு பாடலும், ஏன் புகைப்படங்களைக்கூட பயன்படுத்தக் கூடாதென்றீர்கள். இதுநாள்வரைக்கும் அதற்கான அனுமதியையும் வழங்கவில்லை.

நாங்கள் நானும் ரௌடிதான் படத்தின் பாடல்கள் இல்லாமல் புதியதாக எடிட் செய்யப்பட்ட படத்தின் டிரைலரை வெளியிட்டோம். அதில் நாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த 3 வினாடி விடியோ காட்சியினை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். இது உங்களது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நேரம். மேடையில் அப்பாவியான ரசிகர்கள் மத்தியில் பேசுவதெல்லாம் அதில் ஒரு பாதிதான் நீங்கள். நீங்கள் மேடையில் சொல்வதை நீங்களே பின்பற்றுவதில்லை.

வியாபார ரீதியானதாக இருந்தாலும் உங்களது முடிவு எங்கள் மீதிருக்கும் தனிப்பட்ட பகையினால் எடுத்ததாகவே வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு தயாரிப்பாளர் படப்பிடிப்பில் நடந்த எல்லாவற்றுக்கும் ராஜாவாக முடியுமா? படப்பிடிப்பில் அவர்களது வாழ்க்கை, சுதந்திரம், எல்லாமே உங்களது ராஜ்ஜியத்துக்கு கீழேதான் இருக்க வேண்டுமா? அதை மீறினால் சட்டநடவடிக்கை எடுப்பீர்களா?

உங்களது நோட்டீஸை பெற்றுக்கொண்டேன். அதற்கு சட்டரீதியான நடவடிகை எடுக்கப்படும். காப்புரிமை விவகாரத்தில் நீங்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம். ஆனால், நீதிமன்றத்தில் நியாயம் என்ற ஒன்றும் இருக்கிறது.

படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்னும் நீங்கள் முகமூடியை அணிந்துகொண்டு இருக்கிறீர்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், ரிலீஸ் நேரத்தில் நீங்கள் படத்தைப் பற்றி பேசியதை மறக்க முடியாது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் உங்களது ஈகோ பாதிக்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசியதை கேள்விப்பட்டேன். இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளாத உங்களது குணம் ஃபில்ம்பேர் விருது 2016 பேச்சிலேயே தெரிந்தது.

வியாபாரத்தை தாண்டி பொது வாழ்வில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நீங்கள் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்கக் கூடாது. இந்தச் செயல்களுக்கு நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஆதரிக்க மாட்டார்கள்.

இந்த கடிதத்தின் மூலம், சிலரின் கடந்த காலத்தை அறிந்த நீங்கள், அவர்களின் வெற்றியை ஏற்றுக்கொண்டு உங்கள் உள்மனம் சமாதானம் அடைய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

இந்த உலகம் பெரியது, இது அனைவருக்குமானது.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் மேலே வரலாம்.

சினிமா பின்னணி இல்லாத சாதாரண மனிதர்கள் பெரிய பிரபலங்கள் ஆகலாம்.

சிலர் தங்களுக்கான வாழ்க்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கலாம். அது உங்களிடமிருந்து எதையும் பறிக்காது.

இது அவர்களின் பணி, ஆசீர்வாதம், மக்களின் அன்புக்கான மரியாதை மட்டுமே.

நீங்கள் சில போலிக் கதைகளை உருவாக்கி, பன்ச் வசனங்களுடன் தயார் செய்து உங்களுடைய அடுத்த இசை வெளியீட்டிலும் பேசலாம். ஆனால் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

'schadenfreude' என்ற ஒரு ஜெர்மன் வார்த்தையை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். (மற்றொருவரின் துன்பத்தில் இருந்து ஒருவர் பெறும் மகிழ்ச்சி). அந்த உணர்வை இனி எங்களிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ பெற மாட்டீர்கள் என்று நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

மனிதர்களை இழிவாகப் பார்க்கும் இந்த உலகில், மற்றவர்களின் மகிழ்ச்சியிலும் நம்முடைய மகிழ்ச்சி இருக்கிறது. மற்றவர்களின் கதைகளின் மூலமாக இந்த நம்பிக்கை இருக்கிறது. அதுதான் எங்களுடைய நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தின் பின்னணியும். நீங்களும் கண்டிப்பாக அதைப் பார்க்க பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அது உங்கள் மனதை மாற்றலாம். அன்பைப் பரிமாறுவது முக்கியம். என்றாவது ஒருநாள் நீங்களும் அதை வெறுமனே சொல்லாமல் முழுமையாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன், அதற்காக கடவுளிடமும் வேண்டிக்கொள்கிறேன் என்று நயன்தாரா கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com