
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநராகும் கனவுடன் போதைப் பழக்கங்களின் பிடியிலிருக்கும் நாயகனான வெற்றி (அதர்வா) தன்னுடைய முதல் திரைப்படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டு ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக ஏறிக்கொண்டிருக்கிறார். அங்கெல்லாம் இவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேநேரம், பள்ளி ஆசிரியரான வசந்த்தின் (ரஹ்மான்) மகள் காணாமல் போகிறார். காவல்துறையைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரமான செல்வம் (சரத்குமார்) கதையை இன்னொரு பக்கம் இழுத்துச் செல்கிறார். முக்கோண விதிபோல் மூன்று கதைகள் ஒரே புள்ளியை நோக்கி வருவதே நிறங்கள் மூன்று.
மனிதர்களின் அகத்திற்கும் முகத்திற்கும் வெவ்வேறு நிறங்கள் உண்டு என்கிற கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சுவாரஸ்ய முடிச்சுகளைத் தயார் செய்து ரசிகர்களைச் சுற்றவிடும் படமாகவே நிறங்கள் மூன்று உருவாகியிருக்கிறது.
போதைப் பழக்கம், கதைத் திருட்டு என்கிற இருபுள்ளிகளைத் தொட்டுச் செல்லும் கதையில் மனித மனங்களின் இருண்ட பக்கங்களைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். சரத்குமார் மற்றும் ரஹ்மான் கதாபாத்திரங்களின் குணங்கள் சரியாக எழுதப்பட்டுள்ளன. இவ்விரு கதாபாத்திரங்கள் வழியே சில அழுத்தமான முரண்பாடுகள் சொல்லப்படுகின்றன.
திரைக்கதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டாலும் அதை தாங்குவதற்காகக் கதையை பலமாக்க வேண்டும் என்பதில் கார்த்திக் நரேன் கவனம் செலுத்தவில்லை. நன்மை, தீமை; இரண்டையும் செய்பவர்கள் கதையில் அதிக கதாபாத்திரங்களால் உணர்ச்சிகளின் தாக்கம் குறைகிறது . கதையின் துவக்கக் காட்சிகள் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதி முழுக்க திடீர் மனமாற்றங்களால் அதீத செயற்கையாகப்படுகிறது.
பெற்றோர்களின் வளர்ப்பைச் சுட்டுவதும், போதைப் பழக்கம் தவறானது என்கிற கருத்தையும் படம் பேசுகிறது. ஆனால், குடிப்பழக்கமுள்ள ஒரு கதாபாத்திரம் சொந்த மகளிடமே தவறாக நடந்துகொள்வதைக் காட்சிப்படுத்திய இயக்குநர், கஞ்சா, கொக்கைன், ஸ்டாம்ஃப், போதை மாத்திரை என என்னென்ன உயிர்கொல்லி போதைகள் இருக்கின்றனவோ அவ்வளவையும் எடுக்கும் கதாநாயகனை ‘நம்மள மாதிரி பசங்க சினிமாவுக்கு ஆசையே படக்கூடாது’ என மிடில் கிளாஸ் வசனங்களைப் பேச வைத்திருக்கிறார்.
இயக்குநராக ஆசைப்படுபவர்கள் போதைப் பழக்கங்களுடன் வெறியேறி அலைய வேண்டும் என்கிற காலாவதியான காட்சிகளை இயக்குநர்கள் எப்போது நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை. அப்படி, இவ்வளவு போதைப் பழக்கத்துடன் நிதானம் இல்லாதவர்கள் யாரின் கதையை, எந்த உணர்வுகளைப் பேசுவார்கள் என்கிற லாஜிக்கை கூட யோசிக்க மாட்டார்கள்போல.
ஆசிரியரான ரஹ்மான் தன் வகுப்பு மாணவனின் குடும்பப் பிரச்னையைத் தானாகக் கேட்டறிந்து சரி செய்கிறார். ஆனால், அவர் குடும்பத்தைக் கண்டுகொள்ளாத முரணை சரியாக எழுதவில்லை.
அதர்வா கொஞ்சம் அதீதமாக நடித்திருப்பதாகத் தோன்றுகிறது. நண்பர்களுடன் மற்றும் பள்ளி மாணவர்களுடன் (பார்த்தால் அப்படித் தெரியாது) பேசும் காட்சிகளிலெல்லாம் பாவனைகளில் ஓவர் டோஸ் கொடுக்கிறார். அதர்வா போதைப் பொருளை பயன்படுத்தும்போது அதனால் உருவாகும் கற்பனைத் தோற்றங்கள், மாயைகள், மனப்பதற்றங்கள் ஆகியவற்றை நீண்ட காட்சிகளாக காட்டியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை. அதன் எடிட்டிங்கும் நன்றாக இருந்தன.
நிதானமான ரஹ்மான், ஆர்ப்பாட்டமான சரத்குமார் என இருவரும் நன்றாக நடித்திருக்கின்றனர். காவல் ஆணையராக வரும் சரத்குமார் நக்கல் வசனங்களில் சிரிக்க வைக்கிறார். அம்மு அபிராமி தனியாகத் தெரியவில்லை.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஆனால், கங்குவாவைப்போல் இசை சப்தமும் இருப்பதால் படத்தை வெளியிடும் திரையரங்குகள் ஒலியைக் குறைத்து வைக்கவும். கதையில் இருந்த திருப்பங்கள் எடிட்டிங்கில் வேகமாகக் கூடி வரவில்லை. தேவையற்ற இடங்களில் பரபரப்பை குறைப்பதும் பலவீனங்களில் ஒன்று. சஸ்பென்ஸ் திரில்லர் பாணி என வந்த பிறகு கதை வேகமாக நகர வேண்டாமா? சில ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்த படம் என்பதால் கதைக்கருவும் பலவீனமாக மாறியுள்ளது தெரிகிறது.
துருவங்கள் பதினாறு (2016) படத்தின் மூலம் இளவயதிலேயே கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அப்படம் வெளியான காலத்தில் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றவர். தொடர்ந்து, இயக்குநர் கௌதம் மேனனுடன் இணைந்து நரகாசூரன் என்கிற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால், கௌதம் மேனன் தரப்பில் ஏற்பட்ட நிதி பிரச்னை காரணமாக அப்படம் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது.
முதல் படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், நகராசூரனால் இன்றுவரை அவரால் மேலெழ முடியவில்லை. அருண் விஜய்யை வைத்து மாஃபியா, தனுஷுடன் மாறன் என அவர் படங்கள் வெளியானாலும் எதுவும் சொல்லிக்கொள்ளும் வெற்றியைப் பெறவில்லை.
கார்த்திக் நரேன் திறமையான திரைக்கதை அறிவுகொண்டவராகத் தெரிகிறார். அதனால், அவசரப்படமால் முதிர்ச்சியான கதைகளை எழுதியபின் படப்பிடிப்புக்குச் செல்வது நல்லது.
தன் 22 வயதில் துருவங்கள் பதினாறு போன்ற எமோஷனல் கதையைச் சரியாகக் கையாளத்தெரிந்த இயக்குநர், நிறங்கள் மூன்றில் முதிர்ச்சியற்ற காட்சிகளை வைத்திருப்பது முன்னேற்றம் அடைந்ததற்கான அறிகுறி அல்ல. கொஞ்சம் இடைவேளை எடுத்து நல்ல படங்களை எடுக்கலாம். நிறங்கள் மூன்றில் எந்த வண்ணமும் பொலிவாக இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.