தங்கமகள் தொடரை அடுத்து புதிய தொடரில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான முன்னோட்டமாக சில புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் யுவன் மயில்சாமி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற காமெடி நடிகரான மயில்சாமி கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். இவரின் மகன் யுவன் மயில்சாமி நடிப்புத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
அவரின் நடிப்புத் திறமையை அங்கீகரிக்கும் விதமாக, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தங்கமகள் தொடர் இளம் தலைமுறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தொடரில், யுவன் மயில்சாமி ஹீரோவாக நடிக்க, அஷ்வினி அனந்திட்டா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தத் தொடரில் அதிரடியாக நடித்துவரும் யுவன் மயில்சாமி, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளிக் கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் ஆஹா கல்யாணம் தொடரில் யுவன் மயில்சாமி நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
கிரிஷ் என்கிற பத்திரத்தில் யுவன் மயில்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கெளரவத் தோற்றத்தில் நடிக்கிறாரா? அல்லது முதன்மை பாத்திரங்களில் நடிக்க உள்ளாரா? என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.