‘4 பாடங்களில் அரியர்...’ சூர்யாவை கிண்டலடித்த சிவகுமார்!
கங்குவா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமாரின் பேச்சு ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்.26) சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், பாபி தியால், திஷா பதானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், “ சூர்யா நடிப்பிலேயே கங்குவாதான் பெரிய உயரம். இதை தாண்டுவதுதான் அவருடைய சவாலாக இருக்கும். பள்ளிப் படிப்பு முடிந்ததும் சூர்யாவை பி.காம். பட்டப் படிப்பில் சேர்க்க லயோலா கல்லூரிக்குச் சென்றேன். ஆனால், கல்லூரியின் ஃபாதர் இடம் கொடுக்க மறுத்துவிட்டார். ஏனென்று கேட்டால், ‘சிவாஜி கணேசனின் மகனும் டிகிரி வாங்கவில்லை, பாலாஜியின் மகனும் வாங்கவில்லை, உங்கள் மகனும் வாங்க மாட்டார்’ என்றார்.
என் மகன் கண்டிப்பாக வாங்குவான் என கெஞ்சி இடம் பெற்றேன். அதேபோல், சூர்யா இறுதியாண்டில் 4 பாடங்களில் அரியர் வைத்தார். என் மானம் போய்விடும் ராஜா என சூர்யாவிடம் கூறினேன். பின், மறுதேர்வெழுதி பி.காம். டிகிரி வாங்கிவிட்டார். தொடர்ந்து, பின்னலாடை நிறுவனத்தில் இரவு பகலாக வேலை செய்தார். இரண்டாண்டு கடினமாக உழைப்பு; வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் கழித்தே அவர் என் மகன் என முதலாளிக்குத் தெரிய வந்திருக்கிறது. ஒருநாள் முழுக்க காலையிலிருந்து இரவு வரை 4 வார்த்தைகள் கூட பேசாதவர் கங்குவாவில் நடித்திருக்கிறார். என்ன சொல்வது? இப்படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.