மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ஜீவா ஆவேசமடைந்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர்.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாத் துறைகளிலும் இப்பிரச்னையைப் பேச வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஜீவா தேனியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் ஹேமா அறிக்கை குறித்து கேள்வியெழுப்பினர்.
அதற்கு ஜீவா, ‘இதைப் பற்றி நான் முன்பே கருத்து சொல்லிவிட்டேன். திரும்பத் திரும்ப பேச முடியாது. நல்ல நிகழ்வில் அபசகுணம் மாதிரி இருக்கிறது இந்தக் கேள்வி.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர் ஒருவரைப் பார்த்து, ‘அறிவு இருக்கா உனக்கு?’ எனக் கேட்டார். இதனால், செய்தியாளர்கள் ஆத்திரமடைந்ததுடன் ஜீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அக்கடையில் பரபரப்பு ஏற்பட்டது. பின், இரு தரப்பினரும் சமாதானம் அடைந்தனர்.