நடிகர் சித்திக் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க, கடந்த 2016 ஆம் ஆண்டு மஸ்கட் விடுதியில் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ரேவதி சம்பத் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மலையாள திரைத்துறையின் மூத்த நடிகரான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிணையில் வர முடியாத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரள காவல்துறை தலைவரை நேரில் சந்தித்த சித்திக், தன் மீது ரேவதி சம்பத் பொய் குற்றச்சாட்டு வைத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக, இருதரப்பினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்த ஜனவரி 28, 2016 அன்று மஸ்கட் விடுதியில் சித்திக்கும் நடிகை ரேவதி சம்பத்தும் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் சித்திக் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளார்.