
நடிகர் ஜெயம் ரவி திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தற்போது, ஜெயம் ரவி பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு இடையே குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வார். இதன் புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்.
இதற்கிடையே சில மாதங்களாக, ஜெயம் ரவியும் - ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.
இந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.