நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், ”அட்டக்கத்தி” தினேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லப்பர் பந்து! டிரெய்லர் மூலம் கவனம் பெற்ற இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது?
யாராலும் எளிதில் தோற்கடிக்க முடியாத உள்ளூர் பேட்ஸ்மேனாக கெத்தாக வலம் வருகிறார் கெத்து எனும் பூமாலை (தினேஷ்). கல்யாண வயதில் பெண் இருந்தாலும், கண்டிப்பான மனைவியையும், வேலையையும் தாண்டி போட்டி நடக்கும் ஊர்களுக்கெல்லாம் சென்று கோப்பைகளை ரகசியமாக குவிக்கிறார் கெத்து. அப்படி புகழ் பெற்ற பேட்ஸ்மேன் கெத்துக்கு எமனாக வருகிறார் வளரும் பந்துவீச்சாளர் அன்பு (ஹரிஷ் கல்யாண்). இருவருக்குள்ளும் மைதானத்தில் ஈகோ பற்றி, பின் கொளுந்துவிட்டெறிகிறது. இந்த ஈகோ நெருப்புக்கு நடுவில் கெத்துவின் மகளுக்கும் அன்புவுக்கும் இடையேயான காதல் என்ன பாடுபடுகிறது என்பதை நகைச்சுவை கலந்து சூப்பரான கதைக்களமாக வழங்கியிருக்கிறார் இயக்குனர் தமிழரசன்.
பார்க்கிங் பட வெற்றியின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த ஹரிஷ் கல்யாண், கதை தேர்வில் தேர்ந்தவர் என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். ஈகோவில் சீறிப்பாய்வதிலும், நகைச்சுவைக் காட்சிகளில் நெலிவதிலும் ஹீரோவாக மிளிர்கிறார்.
இளமையான, வயதான தோற்றத்தில் வரும் தினேஷின் கிரிக்கெட் காட்சிகள் கைதட்டி ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு பயப்படுவதிலும், காதலோடு கொஞ்சுவதிலும், சோகத்தில் அழுவதிலும் தினேஷ் மனதில் நின்றுவிடுகிறார். படம் முழுக்க வரும் கேப்டன் விஜயகாந்த் நினைவூட்டல்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன.
தினேஷுக்கு நண்பராக வரும் கதாப்பாத்திரமும், ஹரிஷ் கல்யாணுக்கு நண்பனாக வரும் பால சரவணனும் மைதானத்துக்கு வெளியே வாய் தகறாரில் ஈடுபட்டுக்கொள்வதும், ஒவ்வொரு பந்துக்கும் ஒருவரையொருவர் சீண்டிப்பார்ப்பதும் அரங்கை குலுங்க வைக்கிறது.
கெத்துவின் கராரான மனைவியாக மிரட்டியிருக்கும் சுவஸ்திகா விஜய் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கிரிக்கெட் ஆடியதற்காக தினேஷை முறைக்கும் காட்சிகளில் நமக்கும் ’சாரி’ கேட்கத் தோன்றுகிறது. வெகுளியான மாமியாராக நடித்துள்ள கீதா கைலாசம், ஹீரோயின் சஞ்சனா உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். காளி வெங்கட் போன்ற நடிகர், முக்கிய கதாப்பாத்திரத்தில் மிக இயல்பாக, ஊர்காரராகவே மாறியிருப்பது ஆச்சரியப்பட வேண்டாத ஒன்று.
கிராமங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளையும் ஒவ்வொரு ஊருக்கும் இருக்கும் அணிகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்த லப்பர் பந்து. இடையிடையே சாதிய, பாலின பாகுபாடுகளையும் நேர்த்தியான முறையில் களைய முயன்றிருக்கிறார் இயக்குநர். எந்த விதத்திலும் போரடிக்கும் வசனங்களோ, கருத்து ஊசிகளோ இல்லாமல் அந்த விஷியங்களைக் கையாண்டுள்ளார்.
கிரிக்கெட் மீதுள்ள காதலால் இரண்டு கதாப்பாத்திரங்களும் வீட்டில் படும் பாடும், இவர்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள் படும் கஷ்ட்டத்தையும் அழகாய் காட்டியிருக்கிறார் இயக்குநர். சாதி மறுப்புத் திருமணத்தையும், அரசியலாகிப்போன மாட்டிறைச்சியையும் இயல்பாகக் கையாணடது இயக்குநரின் கெட்டிக்காரத்தனம். இந்த கிரிக்கெட் கலவரத்துக்கு நடுவே, காதலில் விழுந்திருக்கும் மகளை பொறுப்பாகவும், பாசத்துடனும் கையாளும் பெற்றோர் கதாப்பாத்திரங்களை உருவாக்கிய எழுத்தாளர் தமிழரசனுக்கு பாராட்டுகள்.
கிரிக்கெட்டில் திறமைக்கு முக்கியத்துவமளிக்காமல், சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அன்புவின் சொந்தஊர் அணியின் அரசியலை யாரையும் புண்படுத்தாமல் பக்குவமாக காட்சிப்படுத்தி அதற்கு விடையும் கண்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பாடல்கள் இளசுகளின் பிளே லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் தரத்தில் உள்ளன. அதிலும் தினேஷுக்கு போட்டிருக்கும் தீம் மியூசிக் அவரை இன்னும் கெத்தாக காண்பிக்கிறது.
மொத்தத்தில் குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று ரசிக்க வேண்டிய சூப்பரான படமாக இந்த லப்பர் பந்து களத்திற்கு வந்துள்ளது.
=========