தனுஷ் படத்தில் நடிக்கவில்லை என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.
இந்த நிலையில், தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். படத்திற்கு ’இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாகத் தகவல்.
மேலும், இதில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் செல்வன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், அப்படத்தில் நடிக்கவில்லை என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தனுஷ் சாரின் தீவிர ரசிகனாக அவரை மிகவும் நேசிக்கிறேன். எதிர்காலத்தில் அவருடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால், இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.