
பிரபல நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் இறுதி விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை, கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் இரவு நேரத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்டு ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை விடியோவாக எடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் திலீப்பை கேரள போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இதுவரை 261 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக மலையாள திரைத்துறையினர் பலரும் துணை நின்று வழக்கிற்கு ஒத்துழைப்பும் வழங்கி வந்தனர்.
சம்பவம் நடந்து 8 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற மே 21 ஆம் தேதி நடைபெறும் என எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதில், பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைக்கும் பட்சத்தில் விசாரணையின் தீர்ப்பு மற்றொரு தேதியில் வழங்கப்படும்.