
இசையமைப்பாளர் இளையராஜா குட் பேட் அக்லி திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல் இளையராஜா விஷயத்தில் காப்புரிமையும் இழப்பீடும் மாறாமல் தொடர்ந்து வருகின்றன.
இந்தியாவே அதிசயிக்கும் இசையமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். பல்லாயிரம் பாடல்கள், அதைவிட அதிகமான பின்னணி இசைகள் என சர்வம் தாளமயமாக தமிழகத்தில் நிறைந்திருக்கிறார். ஆனால், இளையராஜாவின் ரசிகர்களே அவரிடம் காணும் அதிருப்திகளில் ஒன்று காப்புரிமை பிரச்னை.
ஒரு கலைஞர் அவர் படைக்கும் படைப்புகளுக்கு விலை வைப்பது நியாயமானது. ஆனால், அதை விற்ற பிறகும் வாங்கியவர்களுக்குத் தொல்லை தரும் விதமாக நடந்துகொள்வது எந்த விதத்தில் சரி என்பதே பலரின் கேள்விகளாகவும் இருக்கின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு இளையராஜா பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் உள்பட பல பாடகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், பொது நிகழ்ச்சிகளில் யாரும் தன்னிடம் உரிமம் பெறாமல் தன் பாடல்களைப் பாடக்கூடாது என்றும் மீறி பாடினால் வழக்கு தொடர்வேன் என எச்சரித்தார்.
இதனால், எஸ்.பி.பி. உள்பட ஒட்டுமொத்த திரைத்துறையும் அதிர்ச்சியடைந்தது. கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய நெருங்கிய நண்பரான எஸ்பிபியிடமே இளையராஜா இவ்வளவு கறாராக நடந்துகொள்கிறாரே என பலரும் ஆதங்கப்பட்டனர். இருவருக்கு இடையேயும் பல கசப்புகள் உருவாக இதுவே காரணமாகவும் அமைந்தது.
இனி இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என பொதுவெளியியில் பகிரங்கமாகவே எஸ்பிபி அறிவித்தார். பின், இருவருக்கும் இடையே மீண்டும் புரிதல் ஏற்பட மெல்ல அப்பிரச்னை விலகியது. ஆனால், காப்புரிமை குறித்து இளையராஜாவின் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஏன் காப்புரிமை பிரச்னை எழுந்தது?
பாடல்கள், பின்னணி இசை என ஒவ்வொன்றுக்கும் இன்று உரிமைகள் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் வந்துவிட்டன. முறையான ஒப்பந்தங்களின்றி எதுவும் நடக்காது. ஆனால், 1970 - 2000 வரையிலும் இசையமைப்பாளருக்கு படத்தில் இசையமைத்தற்கான சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது. அதைத் தாண்டி, அவர்கள் இசையமைத்த பாடல்கள் எத்தனை கேசட்டுகள் விற்றன, எவ்வளவு முறை இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டன என எந்த தகவலும் தொடர்புடைய இசையமைப்பாளரைச் சென்றடையாது. பாடல்களின் உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களாவே இருந்தனர்.
ஒரு சில படங்கள் என்றால் சரி? 1000 படங்களுக்கு மேல் இசையமைத்தால் எவ்வளவு பாடல்கள்? அதன் வணிகம் எவ்வளவு பெரியது? இப்படி காலமாற்றத்தால் என்றோ உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு பலரும் போட்டிபோட இளையராஜாவும் தன் பாடல்களைத் தன் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது என்கிற விஷயத்தைக் கறாராக கடைபிடிக்கத் துவங்கினார்.
அப்படி, எஸ்பிபியில் துவங்கிய இச்சர்ச்சைகள் இன்றுவரை தொடர்கிறது. ஆனால், இந்த விஷயம் சர்ச்சையாகக் காரணமே பல இசையமைப்பாளர்களின் பாடல்கள் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டாலும் யாரும் சட்ட ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜா ஏன் தொடர்ந்து செய்கிறார்?
உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். அப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளருக்கு, பாடியவருக்கு, எழுதியவருக்கு என தயாரிப்பு நிறுவனமே சம்பளம் கொடுக்கிறது. அதன்பின், அப்பாடல்களுக்கும் இசையமைப்பாளருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2000-களின் துவக்கம் வரையிலேயே இப்படித்தான் இருந்திருக்கிறது.
இசை செயலியில் கேட்கப்பட்டாலோ அல்லது வேறு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டாலோ அப்பாடல் இடம்பெற்ற தயாரிப்பு நிறுவனமே அதற்கு பொறுப்பென இருந்தது.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, ரசனைகளில் ஏற்பட்ட மாற்றம் என இசைத்துறையின் வளர்ச்சி பெரிதாகிவிட்டது. இப்போது, பல இசையமைப்பாளர்கள் தங்களின் படங்களுக்கு இசையமைக்க ‘சம்பளம்’ என ஒன்றைப் பெறாமல் நேரடியாகவே தாங்கள் உருவாக்கும் பாடல்களை, பின்னணி இசைகளை இசை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உரிமம் செய்துகொள்கின்றனர்.
இதனால், அப்பாடல் எத்தனை முறை கேட்கப்பட்டாலும் அத்தனை முறைக்குமான நிமிடங்களைக் கணக்கிட்டு ‘ராயல்டி’யை பெற்று வருகின்றனர். தயாரிப்பு நிறுவனம் எந்த சம்பளமும் கொடுக்காது. (இசையமைப்பாளர்கள் இசை நிறுவனங்களிடமிருந்து முறையாக ராயல்டி வந்து சேர்வதில்லை எனக் கூறுவதும் கவனிக்கப்பட வேண்டியது)
ஆனால், இளையராஜா விஷயத்தில் அவர் உருவாக்கிய ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் இந்தக் காப்புரிமை பிரச்னை வருவதற்கு முன்பாகவே நேரடியாகத் தயாரிப்பாளர்களிடமே இருந்தன. ஆனால், இசை என்பது கற்பனைத் திறன் சார்ந்தது என்பதால் காப்புரிமை சட்டத்திற்குள் அடங்காது என்றும் அவை இசையமைப்பாளர்களிடமே இருக்க வேண்டுமென இன்றுவரை இளையராஜா தரப்பினர் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகின்றனர்.
இதனால், இளையராஜாவின் பல பாடல்கள் இளையராஜாவுக்கும் அப்பாடல்கள் இடம்பெற்ற படங்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்குமே சொந்தமாக உள்ளன. நியாயமாகப் பார்த்தால், சட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய தயாரிப்பு நிறுவனங்களே பாடல்களுக்கு உரிமை கோர முடியும். ஆனால், இளையராஜா விட்டுகொடுக்கவில்லை. சட்டரீதியாகத் தொடர்ந்து காப்புரிமை மற்றும் இழப்பீடுகளுக்கான வழக்கை மேற்கொண்டு வருகிறார்.
எஸ்பிபியில் ஆரம்பித்த இப்பிரச்னை 96 உள்பட பல திரைப்படங்களைத் தாண்டி தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி வரை நீடிக்கிறது.
இப்போது, குட் பேட் அக்லியில் இடம்பெற்ற ஒத்த ரூவாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்களைத் தன் கவனத்திற்குக் கொண்டு வரமால் பயன்படுத்தியதால் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது அஜித் ரசிகர்களிடம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்று தணிக்கை வாரிய விதிகளின்படி ஒரு படத்தில் வேறு இசையமைப்பாளரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டால் அதற்கான உரிமத்தை சமர்பித்தால் மட்டுமே படம் சென்சார் செய்யப்படும். அப்படி பார்த்தால், குட் பேட் அக்லியில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு உரிமத்தை வைத்திருக்கிற இசை நிறுவனங்களுக்கு தொகை செலுத்தியே மைத்ரி மூவிஸ் தங்களுக்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இளையராஜா அது தனக்கு மட்டுமே சொந்தமானது என சட்ட ரீதியாக குட் பேட் அக்லி மீது பாய்ந்திருக்கிறார். இதற்கான, விளக்கத்தை தயாரிப்பு நிறுவனமோ அல்லது பாடல்களின் உரிமத்தை வைத்திருக்கும் நிறுவனங்களோ அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை காலம் முடிந்த பின்பும் தன் இசைகளை சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர்தான் உரிமையாளர் என்றால் அப்பாடலை எழுதியவர், பாடியவர் என ஒவ்வொருவராக உரிமை கோரினால் என்னவாகும்? எனக் கேள்வி கேட்டனர். இன்றுவரை அக்கேள்விக்கு பதிலும் இல்லை; இளையராஜா இசையமைத்த 4500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் மட்டுமே உரிமையாளர் என ‘சட்ட ரீதியாக’ எந்தத் தீர்ப்பும் இல்லை.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!