
நடிகர் சல்மான் கானுக்கு சில நாள்களுக்கு முன்பு கொலை மிரட்டல் விடுத்த நபர் பற்றி காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மீண்டும் கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இரு நாள்களுக்கு முன் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த முறை மகாராஷ்டிரத்தின் வோர்லி பகுதி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்ததாகத் தகவல் வெளியானது.
அந்தச் செய்தியில், சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்துக் கொன்று, அவருடைய வாகனத்திற்கு வெடிகுண்டு வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக வோர்லி பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் செய்தியை அனுப்பிய நபர் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி யார்?
சல்மான் கானைக் கொலை செய்யப்போவதாக செய்தி அனுப்பிய நபர் குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்ட வகோதியா கிராமத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்ய காவல்துறையினர் வகோதியா கிராமத்திற்குச் சென்றனர்.
இந்த நிலையில், அந்தச் செய்தியை அனுப்பிய 26 வயது நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.
பின்னர், அவரை நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கிய மும்பை காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பினர்.
கொலை மிரட்டலுக்கான காரணம் என்ன?
ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்ற சல்மான் கான், பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாகக் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சல்மான் கான் ஜாமீன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மான்களை வேட்டையாடியதற்கு சல்மான் கான் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லையென்றால் அவரைக் கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
தொடரும் கொலை மிரட்டல்கள்
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல, பலமுறை வெளிப்படையாக கொலை மிரட்டல்களும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டில் மர்மநபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சல்மான் கானை கொலை செய்ய பிஷ்னோய் கும்பல் திட்டம் தீட்டியதைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனால், சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.