சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?

3 பிஎச்கே திரைப்படத்தில் பேசப்பட்ட சொந்த வீடு குறித்து...
சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?
Published on
Updated on
6 min read

ஒரு திரைப்படத்தை மதிப்பீடு செய்வதற்கு சில அளவுகோள்கள் உள்ளன. முதலில், அப்படம் நம் சிந்தனையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அதன் கதைக்கு கலை ரீதியான பங்களிப்பு இருக்கிறதா? இறுதியாக, சினிமா என்கிற மாபெரும் தொடர்ச்சியில் இப்படம் மாறுப்பட்ட விஷயத்தையோ அல்லது தனித்துவமான பார்வையையோ முன்வைக்கிறதா? இவை மூன்றும் முக்கியமான விஷயங்கள். இன்றைய தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இவை இருப்பதில்லை. அரிதாக சில திரைப்படங்கள் இந்த அடிப்படைகளைத் தொட்டிருக்கின்றன. இன்று தொழில்நுட்ப வளர்ச்சி, பரந்துபட்ட வாழ்க்கை பார்வைகள் கொட்டிக்கிடந்தாலும் நம்மால் சுவாரஸ்யமான, நல்ல திரைப்படங்களை எடுக்க முடிகிறதே தவிர்த்து, அபாரமான படைப்புகளை உருவாக்க முடிவதில்லை. இந்த அளவுகோல்களைத் தாண்டி சராசரித் தன்மையுடன் ஒரு படம் உருவாகியிருந்தாலும் அது பேச முயன்ற கருத்து தவறாக இருக்கும் பொருட்டு ஈவுஇறக்கமின்றி அப்படைப்பை நிராகரிக்கவும் வேண்டும்.

இந்தாண்டில் இதுவரை தமிழ் சினிமாவுக்கு சில மாறுபட்ட கதைக்களங்களில் திரைப்படங்கள் அமைந்தாலும் காத்திரமானத் தாக்கத்தை எவற்றாலும் கொடுக்க இயலவில்லை. குறிப்பாக, அண்மையில் வெளியான திரைப்படங்களில் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் 3 பிஎச்கே. சென்னையில் ஒரு நடுத்தர குடும்பம் சொந்த வீடு வாங்குவதற்காக மிகப்பெரிய போராட்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கும் கதை. இப்படத்தின் கதை, எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய ‘3 பிஎச்கே’ என்கிற சிறுகதையை (தினமணி சிவசங்கரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை) தழுவி எடுக்கப்பட்டது.

சிறுகதையில் சொந்த வீட்டை வாங்குவதற்கான இடர்களைப் பேசினாலும் கதையின் இறுதியில் வாழ்க்கையின் எதார்த்தம் நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய 3 பிஎச்கே திரைப்படம் சிறுகதையிலிருந்து தலைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு எதார்த்ததிற்கு புறம்பான போலித்தனமான எழுத்தால் உருவாகியிருக்கிறது. உணர்வுகளுக்கும் வாழ்க்கையின் உண்மைக்கும் இடம் கொடுக்காமல் வணிக காரணங்களுக்காகத் திட்டமிட்டே திணிக்கப்பட்ட உணர்வுகளாக படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்திலிருந்து சினிமா என்பது நம்மூர் ஆள்களுக்கு இன்னும் பிடிபடாத மாயமானாகவே நீடிக்கிறது என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம். சரி, 3 பிஎச்கே மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? சில காட்சிகளைக் குறிப்பிட வேண்டியுள்ளதால் படத்தைப் பார்க்காதவர்கள் வாசிப்பதைத் தவிர்க்கலாம்.

கதை 2006-லிருந்து 2027 வரை பதிவாகிறது. இந்த 20 ஆண்டுகளில் சரத் குமாரின் குடும்பம் துயரத்தை மட்டுமே சந்தித்து சென்னையில் ஒரு வீட்டை வாங்குகின்றனர். வாடகை வீட்டில் எந்த சந்தோஷங்களும் இருப்பதில்லை. ஏனென்றால், வாடகை வீட்டில் இருப்பவர்கள் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்பதுபோல் ஒவ்வொரு காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரர்கள் குழம்பு கொடுக்கவோ வாங்கவோ செய்வதில்லை, அண்டை வீட்டினரின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதில்லை, சரத் குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருக்கும்போது யாரும் ஆறுதலுக்காக வரவில்லை. சித்தார்த்தின் குடும்பம் மட்டுமே கண்ணீர் சிந்துகிறது. ஏனென்றால், சென்னையில் வாழும் மனிதர்களுக்கு கருணையில்லை. அப்படித்தான் இப்படம் ஒவ்வொரு காட்சியிலும் சொந்த வீடு என்கிற பலரின் ஆசையை முன்வைத்து உணர்ச்சிகளைத் தூண்டும் ‘உப்மா’ எழுத்தால் தடுமாறுகிறது.

முதலில் ஏன் இப்படி திராபையான கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன? உணர்ச்சிகளைப் பெருக்க வேண்டுமென்றால் போலியான கட்டமைப்புகளை எழுத்தில் கொண்டுவருவார்கள். காட்சிகள் சுவாரஸ்யமாகச் செல்லும்போது பலரும் அதன் அபத்தங்களைக் கண்டுகொள்வதில்லை. எதற்காக எதார்த்ததிற்கு புறம்பான காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் உற்று நோக்குவதில்லை. விளைவு? 3 பிஎச்கே போன்ற செயற்கையான படங்கள் நல்ல படங்கள் என்கிற பாராட்டுகளைப் பெற்று விடுகின்றன.

சரத் குமார் (வாசுதேவன்) குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்பத் தலைவரான சரத் குமாருக்கு ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதே வாழ்நாள் இலக்கு, கனவு, எல்லாம். வாழ்க்கையில் பல கஷ்டங்களைச் சந்தித்து வந்த ஒரு மனிதன் சொந்த வீட்டை வாங்க வேண்டும் என ஏங்குவதில் தவறில்லை. ஆனால், அந்த வீட்டை அடைய குடும்பத்தினரிடையே எமோஷனலாக தன்னைக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு முறையும் வீடு வாங்க முடியாதா என அறைக்குள் தனியாகச் சென்று கண்ணீர் வடிக்கிறார். ஒரு குடும்பத் தலைவர் சொந்த மகனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குகிறார். மொத்த குடும்பமும் சரத் குமாரின் கனவுக்காக தங்களின் கனவுகளைச் சிதைத்துக் கொள்கின்றனர். அவர் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவுகளுக்குப் பின்பும் சொந்த வீடு என்கிற உணர்ச்சியைப் பகடையாக்கி போலித்தனங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

சித்தார்த் எதிலும் ஆர்வமில்லாதவர். தன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்கூட தெரியாமல் வீட்டில் படுத்துக்கொண்டிருப்பவரை எழுப்பி உனக்கு இன்னைக்கு ரிசல்ட் எனச் சொல்கிறார்கள். மக்காக இருந்தாலும் இவ்வளவு மக்காகவா? இயந்திரவியல் படிக்க ஆசைப்படுபவரை நல்ல சம்பளம் கிடைக்கும் என சரத் குமார் தான் சேமித்து வைத்திருந்த பெருந்தொகையை கல்லூரியில் செலுத்தி ஐடியில் சேர்த்துவிடுகிறார். அங்கு மனப்பாடம் செய்து பிழைத்தோம் தப்பித்தோம் என டிகிரியை முடித்து ஒருவழியாகச் சித்தார்த் வேலைக்குச் சேர்கிறார்.

ஐடியில் பணியைத் தொடர்பவர் தன் 30-வது வயதுக்கு மேல் அந்த வேலையை விட்டுவிட்டு மீண்டும் படித்து இயந்திரவியல் துறைக்கு மாறுகிறார். படம் சொந்த வீட்டைப் பற்றி பேசுகிறது. இதில், அப்பாவின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட தன் கனவை மீண்டும் பல ஆண்டுகள் கழித்து சித்தார்த் தொடர்கிறார். இதனால் இயக்குநர் என்ன சொல்ல வருகிறார்? நடுத்தர வர்க்க ஆண் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து சொந்த வீட்டை வாங்கவும் வேண்டும்; உங்களுக்குப் பிடிக்காத பணியில் தொடரவும் வேண்டாம் என்பதையா? இவ்வளவு கடினமான கதாபாத்திரம் ஒருபோதும் முன்மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை.

தங்கையாக நடித்த மீதா ரகுநாத் கதாபாத்திரம்தான் இருப்பதிலேயே லாஜிக்கே இல்லாத கதாபாத்திரம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தன் அண்ணனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவிற்கு நன்றாக படிக்கக் கூடியவர். அந்த வயதிலேயே தன் தந்தையிடம், ‘அப்பா இனி கணினி யுகம்தான். அதை கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 465 மணிப்பெண் வாங்குகிறார் (2008-ல் அது எவ்வளவு பெரிய மார்க்!) இப்படியான புத்திசாலி பெண் என்ன படித்திருக்க வேண்டும்? இவரல்லவா ஐடியில் அல்லது பெரிய படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்? ஆனால், பள்ளிப்படிப்பு முடிந்ததும் இயக்குநர் பி.காம் படிக்க வைக்கிறார்.

ஏன் பிகாம்-ல் சேர வேண்டும்? இந்தப் பெண்ணால் அரசுக் கல்லூரியிலேயே சேர முடியுமே? எனக் கேள்விகள் எழுகிறதா? அப்படியெல்லாம் காட்சிகளை உருவாக்கினால் பின் யாரை வைத்து சோக கீதம் இயற்றுவது? மிடில் கிளாஸ் குடும்பங்களில் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கெல்லாம் எதற்கு அனுப்பிக்கொண்டு? கட்டிக்கொடுத்தால் கடமை முடிந்தது இல்லையா? வீட்டை வாங்க ஒரு குடும்பம் படும் பாடுகளைப் பாருங்கள் ஐயா என்கிற கதையில் இந்தக் காலாவதியான சிந்தனையை இயக்குநர் கொண்டுவந்திருக்கிறார்.

மீதாவுக்கு அந்த மிடில் கிளாஸ் குடும்பம் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். சித்தார்த் செய்யும் கல்யாணச் செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 25 லட்சம்! நீங்கள்தான் மிடில் கிளாஸா வாசுதேவன்? இந்தப் பணம் இருந்தால் சொந்தமாக வீட்டை வாங்கலாமே? வாங்கலாம்தான். ஆனால், மகளுக்கு இந்த மாதிரி நல்ல இடம் அமையாதே? சரி, இரண்டாம்பாதியில் மகள் வாழாவெட்டியாக அப்பா வீட்டிற்குத் திரும்புகிறார். வாழச்சென்ற இடத்தில் வீடுதான் பெரிதாக இருக்கிறது. மனிதர்களின் மனம் குறுகியிருக்கிறது. இதோடு படத்தை முடித்திருந்தாலும் போகட்டும் என விட்டிருக்கிலாம்.

மீண்டும் கைக்குழந்தையுடன் வீடு திரும்பும் மீதாவும் திருமணமான சித்தார்த்தும் இரவு பகலாகப் படித்து சில ஆண்டுகள் கழித்து சொந்த வீட்டை வீட்டுக்கடன் உதவியுடன் வாங்குகிறார்கள்! ஸப்ப்பா…. கவனியுங்கள், ஒரு சொந்த வீட்டை வாங்கத்தான் ஒரு குடும்பம் இந்த 20 ஆண்டுகளில் சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வாழ்வின் பல அழகான தருணங்களையும் இழந்திருக்கிறது.

சரத் குமாரின் முதலாளி, தம்பி, சித்தார்த்தின் உயரதிகாரி, சித்தார்த் திருமணம் செய்ய வேண்டிய பெண், மீதா ரகுநாத்தின் கணவர் குடும்பம், இவர்கள் குடியிருக்கும் வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் என வாசுதேவன் குடும்பத்தினரைத் தவிர்த்து பிறர் அனைவரும் பணத்திமிர் பிடித்தவர்கள், கேவலமான மனிதர்கள். என்ன இது?

படம் முழுவதும் ஒரு குடும்பம் வீட்டை வாங்குவதற்காக அவர்களைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் அந்தக் குடும்பத்திற்கு எதிரானவர்கள்போல் சித்திரித்து, வெற்று பாவனைகளைத் திட்டமிட்டு உருவாக்கி சொந்த வீட்டை அடைவது எவ்வளவு பெரிய ‘கனவு’ என்பதை இயக்குநர் பதிவு செய்கிறார்.

இந்தக் கதாபாத்திரங்களை குறிப்பிடுவதற்குக் காரணம், சிறுகதையில் வாடகை வீட்டின் அசௌகரியங்கள் பேசப்பட்டிருந்தாலும் மறுபக்கம் அண்டை வீட்டினர் மற்றும் வீட்டு உரிமையாளருடன் ஆத்மார்த்தமான உறவு என அங்கும் வாழ்க்கை நன்றாக இருந்தது என்பதை எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இக்கதை திரைப்படமாக மாறும்போது பல குறைகளைச் செயற்கையாக எழுதி, ‘சொந்த வீடு வாங்க இந்தக் குடும்பம் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறது பாருங்கள்’ என்பதைக் காட்சிக்கு காட்சி சோகத்தைப் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த சிறுகதைக்கும் திரைப்படத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

சித்தார்த்தின் படிப்பு, மீதாவின் திருமணம், சரத் குமாரின் மருத்துவச் செலவு என அவர்கள் சேமிக்கும் பணம் அனைத்தும் செலவாகிக்கொண்டே இருக்க, சொந்த வீட்டை வாங்கவே முடியாதா என அவர்கள் வேதனைப்படும்போது, ‘கஷ்டமே கஷ்டப்படும் அளவிற்கு கஷ்டப்பட்டு எதுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும்?’ என்கிற எண்ணத்திற்கே செல்ல வேண்டியுள்ளது.

படத்தைப் பார்ப்பவர்கள் பலருக்கும் நம்மைப்போலவே ஒரு குடும்பம் சொந்த வீட்டை அடைய எவ்வளவு சிரமங்களையும் ஏமாற்றங்களையும் அடைகிறது என்கிற பரிதவிப்பை ஏற்படுத்தக்கூடிய காட்சிகளை வைத்து இறுதியாக வீட்டை, ‘கனவாகவும், மரியாதைவாகவும், வெற்றியாகவும்’ பார்ப்பதுடன் படம் நிறைவடைகிறது.

யோசித்துப் பாருங்கள், நினைத்தாலும் சொந்து வீட்டை வாங்க முடியாத பொருளாதார நிலையில் இருப்பவர்கள், சொந்த வீடு இல்லாததால் திருமணமாகாதவர்கள் இப்படத்தைப் பார்த்தால் நாமும் வென்று காட்டுவோம் என உத்வேகமா அடைய முடியும்? மாறாக ஒரு அடிப்படையான விஷயத்தைக்கூட நம்மால் அடைய முடியவில்லையே என்கிற மோசமான குற்றவுணர்ச்சிக்கல்லவா அழைத்துச் செல்லும்.

நம்முடைய மயக்கங்களில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது சொந்தவீடு. அதை நம்முடைய தேவைகளில் ஒன்றாகப் பார்க்காமல் கனவுகளில் ஒன்றாகப் பார்க்கும்போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. அந்த தேவையைக் கனவாக மாற்றிக்கொண்டு வாழ்க்கை முழுவதையும் அதற்காக தியாகம் செய்யவும் தயாராகவும் இருக்கிறோம். நம்முடைய சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை, சந்தோஷமாக இருக்கக் கூடிய வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு, சென்னை போன்ற நகரத்தில் பல ஆண்டுகள் செலுத்த வேண்டிய வீட்டுக் கடனை வாங்கி மிகப்பெரிய அடுக்ககத்தின் பத்தாவது மாடியில் சுற்றிலும் மனிதர்கள் இருப்பை உணரமுடியாத அமைப்பிற்குள் அங்கு பால்கனியில் நின்று பெருமூச்சு விடுவதைத்தான் கனவாகவும் வெற்றியாகவும் நினைக்கிறோமா?

வீட்டைத்தாண்டி வாழ்க்கை என்பது மிகப்பெரியது. ஆனால், ஒரு வீட்டைக் கட்ட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அடமானம் வைக்கும் ‘முதலைக் கண்ணீர்’ கதையாகவே இப்படம் உருவாகியிருப்பதுடன் வீடு இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு மரியாதையே இல்லை என்கிற பல எதிர்மறையான எண்ணங்களையும் விதைக்கிறது.

சென்னையையே எடுத்துக்கொள்வோம். இங்கிருக்கும் பல ஆயிர சொந்த வீடுகளுக்கு உரிமையாளர்கள் யார்? இந்தியாவின் முன்னணி வங்கிகள்தான். வீட்டுக்கடன் வாங்கியர்களின் எல்லா பத்திரங்களும் அங்குதானே இருக்கிறது? அவற்றை மீட்ட வேண்டும் என்றால் 20 ஆண்டுகளாவது அசலையும் வட்டியையும் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுவரை நமக்கு வேலையும் வருமானமும் இருக்க வேண்டும். மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள், இதர செலவுகள் ஏற்படமால் இருக்க வேண்டும். மகளுக்கு ரூ. 25 லட்சம் செலவில் திருமணம் நடத்தும் நடுத்தர(?) குடும்பம் இதை தாக்குப்படிக்கும். ஆனால், 50 ஆயிரம் சம்பளத்தில் குடும்பம் நடத்தும் உண்மையான நடுத்தர வர்க்கத்தினருக்கு இது நடக்கிற காரியமா?

இந்தச் சுரண்டலிலிருந்து தப்பிக்கத்தான் பல நிதி ஆலோசகர்கள் முறையான சேமிப்பு இல்லாமல் சொந்த வீட்டை வாங்கவே வேண்டாம் எனக் கூறுகின்றனர். ஆனால், 3 பிஎச்கே வாசுதேவன் குடும்பம் அந்தச் சுழலுக்குள் சிக்கி சீரிழிவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாம் இன்று நிதி மேலாண்மை, முதலீடு என கடன் சுமைகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்னென்ன என்கிற யோசனைகளுக்கு வந்துவிட்டோம். ஒருவருக்கு சொந்த வீடு, குடும்பம், நல்ல தொழில் எது இல்லையென்றாலும் அவரால் இங்கு நம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதைப் பேசுவதற்கும், வீடு கட்ட மொத்த வாழ்க்கையையும் அடமானம் வைக்கும் ஒரு திரைப்படத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன?

மினிமலிசத்தை பழகிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில், சொந்த வீடு இல்லையென்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள் என்கிற கதையைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன? பறவைகள்கூட நிம்மதியாகக் கூடுகட்டி வாழ்கின்றன. ஆனால், பெரும்பாலான நடுத்தர வர்க்க மனிதர்கள் கூட்டைப்போன்ற வீட்டைக் கட்டினாலும் கடன்மேல் கடன் என 4 சுவர்களுக்கு உள்ளும் புறமும் நிம்மதியற்று அலைவதைத்தான் காண முடிகிறது.

இந்த விமர்சனத்தின் நோக்கம், ஒருவர் சொந்தவீட்டை வாங்கக்கூடாது என்பதில்லை. அதை வாங்குவதற்கான சேமிப்பும், உயர் வருமானமும் உள்ளவர்கள் தராளமாக நல்ல வீட்டை வாங்கலாம். ஆனால், இப்படம் நடுத்தர வர்க்கம் என்கிற சேமிப்பை நோக்கி நகர முடியாத பல குடும்பங்களிடம் சொல்லமுடியாத குற்றவுணர்ச்சியை உருவாக்குவதால் அக்குடும்பங்கள் அவ்வளவு சிரமப்பட்டு, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கடனுக்காக நேர்ந்துவிடக்கூடாது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

நடுத்தர வர்கத்தின் வலிகளைப் பேசுவதாக படத்தின் இறுதியில் பிரபல கட்டுமான நிறுவனம் சித்தார்த் குடும்பத்திற்கு சொந்த வீட்டிற்கானச் சாவியை ஒப்படைக்கின்றனர். இருப்பதிலேயே பெரிய வேடிக்கை இதுதான். இப்படத்தை ஒரே வரியில் சுருக்க வேண்டுமென்றால், ‘ 3 பிஎச்கே பிரபல கட்டுமான நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட ஆடம்பர விளம்பரம்’ எனலாம்.

Summary

a detailed view of 3 bhk movie starring siddarth, sarath kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com