
நாதஸ்வரம் தொடரில் கின்னஸ் சாதனை படைத்த காட்சியில் (எபிஸோட்) முழுக்க முழுக்க இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியா தெரிவித்துள்ளார்.
கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற 22 நிமிடக் காட்சியும் எந்தவித காட்சி இணைப்புகளும் (ரீ டேக்) இல்லாமல், ஒரே காட்சியில் எடுக்கப்பட்டதாகவும், அதில் நடித்தது மறக்க முடியாத தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் 2010 முதல் 2015 வரை நாதஸ்வரம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரை எம்டன் மகன் இயக்குநர் திருமுருகன் இயக்கியிருந்தார். இத்தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பானதோடு மட்டுமின்றி இடையிடையே பல்வேறு சாதனை முயற்சிகளையும் செய்துள்ளது.
பொதுவாகவே ஒரு தொடருக்கு ஒரு முகப்பு பாடல் மட்டுமே இருக்கும். ஆனால், நாதஸ்வரம் தொடரில் சூழலுக்கு ஏற்ப புதுப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும். சின்ன திரையில் முதல்முறையாக நாதஸ்வரம் தொடரில் மட்டுமே இடையிடையே பாடல்கள் ஒளிபரப்பானது. சஞ்சீவ் ரத்தன் இதற்கு இசையமைத்திருந்தார். (தற்போது, சினிமா பாடல்கள் மட்டுமே தொடர்களின் இடையே ஒளிபரப்பப்படுகின்றன)
இதேபோன்று பின்னணி இசையே இல்லாமல் 22 நிமிட எபிஸோட், வசனங்களே இல்லாமல் ஒரு எபிஸோட் என பல்வேறு சாதனைகளை நாதஸ்வரம் செய்துள்ளது. இந்த வரிசையில், ஒரே காட்சியில் அதுவும் நேரலையில் ஒரு எபிஸோட் ஒளிபரப்பப்பட்டு, அது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது.
அக்காட்சி குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, ''நாதஸ்வரம் தொடரில் வேறு எந்தத் தொடரிலும் இல்லாத வகையில் நேரலைக் காட்சி இடம் பெற்றது. மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருக்க நடிகர்கள் அனைவரும் மேடையில் நடிப்பதைப்போன்று நடிக்க வேண்டும்.
கேமரா, பின்னணி இசை, என பல்வேறு துறையினரும் நேரலையில் பணியாற்றினோம். அது ஒரு மறக்க முடியாத தருணம். எந்தத் துறையைச் சேர்ந்தவர் தவறிழைத்தாலும் மொத்தக் காட்சியும் வீண்; மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது மனதில் இருக்க வேண்டும்.
இதற்காக வெறும் 3 நாள்கள் மட்டுமே பயிற்சி செய்தோம். ஏனெனில், ஆயிரமாவது எபிஸோட் லைவ் செல்ல வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.
அதிருஷ்டவசமாக ஆயிரமாவது நாளில் கதைப்படி என்னுடைய காட்சிகள் இடம்பெற்றன. 22 நிமிடங்களும் நேரலையாக நடித்திருந்தோம். வெறும் நடிப்பு மட்டுமின்றி, விரும்பத்தகாத ஆனால் கடத்தப்படுதல், தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தல் எனப் பல்வேறு உணர்வுகள் அதில் வெளிப்படும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
லண்டனில் இருந்து கின்னஸ் சாதனை நடுவர்கள் வந்திருந்தனர். 22 நிமிடக் காட்சிகளை அவர்கள் நேரலையில் கண்டனர். தற்போது கின்னஸ் சாதனையில் அது இடம்பெற்றுள்ளது. நாதஸ்வரம் பெருமை மிகுந்த தொடராக என்றுமே நிலைத்திருக்கும்'' எனப் பேசினார்.
ஸ்ருதி சண்முகப் பிரியாவின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு, அந்தக் காட்சிகளை நேரலையில் கண்ட அனுபவத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க |மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.