
கயல் தொடரில் மூர்த்தி பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஐயப்பன், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். கயல் தொடரை பி. செல்வம் இயக்கி வருகிறார். 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 1100 எபிசோடுகளை கடந்துள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கயல் தொடரில் நடிகை சைத்ரா ரெட்டியின் சகோதரராக மூர்த்தி பாத்திரத்தில் நடிகர் ஐயப்பன் நடித்து வந்தார். இந்தத் தொடரில் நடிகர் ஐயப்பன், நகைச்சுவைக் கலந்த குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதனிடையே, நடிகர் ஐயப்பனின் மனைவி, கயல் தொடரின் படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து, ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை துன்புறுத்துவதாக புகார் அளித்தார். தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலானது.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் ஐயப்பனின் காட்சிகள் கயல் தொடரில் ஒளிபரப்பு செய்யப்படாமல் இருந்தது. இவர் கயல் தொடரில் இருந்து இருக்கிறாரா? இல்லையா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், கயல் தொடரில் இருந்து ஐயப்பன் விலகியுள்ளதாகவும், இனி, மூர்த்தி பாத்திரத்தில் பாடகர் ஷ்யாம் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் தெரியவந்துள்ளது.
யார் இந்த ஷ்யாம்?
பாடகர், நடிகர் என பன்முகத் திறமைக் கொண்டவர் ஷ்யாம். இவர் திரைப்பட பாடகர் மட்டுமல்லாமல் இசை நிகழ்ச்சிகளில் கனா பாடல்களைப் பாடி வருகிறார்.
இவர் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், முத்தழகு, கண்ணா கண்ணே, சக்திவேல் உள்ளிட்ட பல வெற்றித் தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.