ரவிக்கையின் சமூக மதிப்பென்ன? அங்கம்மாள் - திரை விமர்சனம்!
அங்கம்மாள் - திரை விமர்சனம்!(3 / 5)
நடிகை கீதா கைலாசம் நடிப்பில் உருவான அங்கம்மாள் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அங்கம்மாள். அறிமுக இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தென்தமிழக கிராமம் ஒன்றில் ஆண்களுக்கு இணையான தைரியத்துடனும் உடல்மொழியுடனும் இருக்கும் அங்கம்மாள் (கீதா கைலாசம்) சொன்னால் அதைப் பின்பற்ற வேண்டியதுதான் குடும்பத்தின் வேலை. தான் உண்டு, தன் வேலையுண்டு என இல்லாமல் தன் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்க வேண்டுமென நினைக்கும் அங்கம்மாள், ரவிக்கை அணியாமல் இருப்பது இளைய மகனுக்குப் பிடிக்கவில்லை. அம்மாவை நாகரீகமாக மாற்ற, ரவிக்கை அணியச் சொல்கிறான். மகனின் விருப்பத்தை அங்கம்மாள் நிறைவேற்றினாரா? அங்கம்மாள் மாதிரியாவர்களின் மனநிலை என்ன? என்கிற கேள்விகளுடன் காட்சிகள் நகர்கின்றன.
90-களின் துவக்கத்தில் கதை நடக்கிறது. அதனால், அழகான கிராமத்தில் வைத்தே முழுப்படத்தையும் இயக்கியிருக்கிறார் இயக்குர் விபின். அறிமுகக் காட்சியில் சொல்லப்படும் ஓர் பூவின் பெயர் இறுதியில் வருவதுவரை அங்கம்மாளின் கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. ஒரு கையில் சுருட்டைப் பிடித்துக்கொண்டே மருமகளிடம் சண்டை போடுவது, பேத்தியிடம் கொஞ்சுவது என குழந்தைத்தனமும் பெண் குணமும் கொண்ட அங்கம்மாளுக்கு யாரைப்பற்றியும் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.
ஒரு ரவிக்கை தானே அணிந்தால் என்ன? என்கிற எளிய கேள்விக்கு முன் சமூகக் கண்ணோட்டங்களும் தனிமனித கண்ணோட்டங்களும் ’தனக்கென்ன’ என இருப்பவரை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இயக்குநர் நன்றாகப் பதிவு செய்கிறார். முக்கியமாக, அங்கம்மாளின் மூத்த மகனான பரணியின் கதாபாத்திரம் நகைச்சுவையாகவும் கலையாகவும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
இளைய மகனாக நடித்த நடிகர் சரண் சக்திக்கு நல்ல கதாபாத்திரம் என்றாலும் நகர்புறத் தோற்றதிலிருக்கும் அவர் கிராமிய சூழலுக்குள் பொருந்தவில்லை. அங்கம்மாளின் மகனாக அவர் தெரியாதது பெரிய குறை. மருத்துவம் படித்திருந்தாலும் புகைப்பழக்கம், குடிப்பழக்கம் என அக்கதாபாத்திரத்தை முரண்பாடாகக் காட்டினாலும் பீரியட் கதையிலிருந்து அக்கதாபாத்திரம் விலகிச் செல்கிறது.
மருமகளாக நடித்த நடிகை தென்றல் ரகுநாதன் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குடும்பம் என்கிற அமைப்பிற்குள் சிக்கி, சகிப்புத்தன்மைகளுடன் வாழக்கற்றுக்கொண்ட பெண்ணின் சரியான பிரதிபலிப்பாக நல்ல நடிப்பு.
ரவிக்கை போடாததும் போடுவதும் அவரரர் உரிமை. இன்று இக்கதை எந்த தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்கிற கேள்விக்கு சரியான விடையும் இல்லை. கதாபாத்திரத்தை எழுதிய விதத்திலும் சிக்கல்கள் இருக்கின்றன.
மறைந்த பிரபல இயக்குநரான கே. பாலச்சந்தரின் மருமகளான நடிகை கீதா கைலாசம் இப்படத்தில் அங்கம்மாளாக நடித்திருக்கிறார். ரவிக்கை அணியாத காட்சிகளில் அங்கம்மாளாகவும் அதனை அணிந்தபின் அதனால் உருவாகும் போலித்தன்மைகளையும் தன் உடல்மொழியால் அட்டகாசமாக வெளிப்படுத்துகிறார்.
சுருட்டு பிடிப்பது, கெட்ட வார்த்தைகளைப் பேசுவது கிராமிய பின்னணியில் உலாவவிடுவது ஆகியவை எதார்த்தமான சினிமாவைக் கொடுக்கலாம் என இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால், கீதா கைலாசத்திற்கு சரியாக புகைக்க வராதது, அவர் பேசும் வசனங்களே அவர் கதாபாத்திர வலுவைக் குறைப்பது ஆகியவை எதிர்மறையாக ஆகிவிட்டன.
ஆனால், உருவாக்கமாக ரசிக்க வைக்கின்றனர். பால் ஊற்றப்போகும் இடத்தில் அங்கம்மாள் ரசிக்கும் ஆண்; இரவில் தோட்டத்திற்குள் மது அருந்தியபடி நாதஸ்வரத்தை வாசிக்கும் பரணி என சுவாரஸ்யமான ஒளிப்பதிவுடன் கூடிய காட்சிகள் ஈர்க்கின்றன.
நல்ல திரைப்படத்தைக் கொடுக்க வேண்டுமென இயக்குநர் முயன்றிருக்கிறார். ஆனால், இக்கதை சினிமாவாக மாறினாலும் எந்த இடத்தில் தனித்துவமாகத் தெரியும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. மேலும், கதைக்களம் தென் தமிழகத்தில் நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டாலும் சில வசனங்கள் கொங்கு வட்டாரத்தையே நினைவுபடுத்துகின்றன.
அங்கம்மாள் என்கிற தனிமனிதியின் கதையை சுவாரஸ்யமாகவும் அதேநேரம் ஒரு கிராமத்திற்கு நுழைந்து மீண்டதுபோல் திரைப்படம் இருந்தாலும் எங்கோ அங்கம்மாள் ’காணாமல்போனது’ போலவும் இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
