ரூ. 4,000 கோடி முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்!

தென்னிந்திய திரைத்துறையில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் குறித்து...
ரூ. 4,000 கோடி முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்!
Updated on
2 min read

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திடப்பட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் கமல் ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டாண்மை தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

இந்த சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். “JioHotstar-உடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை 1,000 நேரடி வேலைகளும் 15,000 மறைமுக வேலைகளும் உருவாக்கும். சினிமாவுடன் இணைந்து வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் JioHotstar-ன் தென்னிந்திய பொழுதுபோக்கு பிரிவிற்கான 25 தொடர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். கேரளா கிரைம் ஃபைல்ஸ் சீசன் 3, சேவ் தி டைகர்ஸ் சீசன் 3, குட் வைஃப் சீசன் 2 போன்ற பிரபல தொடர்கள் 2026 JioHotStar-ல் வரவிருக்கின்றன.

கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ், லிங்கம், விக்ரம் ஆன் டியூட்டி, ரோஸ்லின் போன்ற புதிய அசல் படைப்புகளும் அறிவிக்கப்பட்டன. விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான், நிவின் பாலி நடிக்கும் பார்மா, இந்தி தொடரான ஆர்யாவின் தென்னிந்திய வடிவான ‘விஷாகா’ உள்ளிட்ட பல படைப்புகளும் அடுத்த ஆண்டு வரவிருக்கின்றன. மேலும் பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் நிலையில் ‘ரோடீஸ்’ தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகிறது.

“இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்த மொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும். காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என கமல்ஹாசன் உரையாற்றினார்.

“தெற்கு என்றுமே படைப்பாற்றல் மையம்,” என கிருஷ்ணன் குட்டியும் குறிப்பிட்டார். மோகன்லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டுவரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கை மறுவரையறை செய்யும் என JioHotstar நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரூ. 4,000 கோடி முதலீட்டுடன் தமிழ் மாநிலத்துடன் தொடங்கிய இந்த கூட்டாண்மை, தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளையும், உலகளாவிய விரிவாக்கத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது

Summary

jio hotstar ott site tie-up with tamilnadu government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com