

நடிகர் ஹிருத்திக் ரோஷன் துரந்தர் படத்தின் விமர்சனத்தினால் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் திரைப்படம் கடந்த டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை
வலதுசாரி சிந்தனைக் கொண்ட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவரும் துரந்தர் 3 நாளில் ரூ. 160 கோடியை தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் படம் இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டுவதாக இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாவில் ஒரு மாதிரியும் எக்ஸ் பக்கத்தில் ஒரு மாதிரியும் விமர்சனம் செய்துள்ளார்.
இன்ஸ்டா பதிவினால் ஏற்பட்ட விமர்சனங்களினால் எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டதாக சமூகவலைதளத்தில் அவரை, இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
நல்ல படம், ஆனால்...
இன்ஸ்டாவில் ஹிருதிக் ரோஷன் கூறியதாவது:
எனக்கு சினிமா பிடிக்கும். சுழல் காற்றுபோல் படத்தின் கதை வலுவாக இருந்து, சுழற்றுவது மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதை திரையில் வெளிக்கொணரும் மனிதர்களைப் பிடிக்கும். துரந்தர் அந்த மாதிரியான படம்.
படத்தின் கதை சொல்லும் பாணி மிகவும் பிடித்தது. அதில் வரும் அரசியல் வேண்டுமானால் எனக்குப் பிடிக்காமல் போகலாம். ஒரு இயக்குநராக சமூகத்தில் நமக்கென ஒரு பொறுப்பு இருப்பதில் விவாதம் இருக்கிறது.
மற்றபடி, இந்தப் படத்தைப் புறக்கணிக்கவே முடியாது. திரைப்படத்தின் மாணவனாக நான் எவ்வளவு நேசித்தேன், கற்றுக்கொண்டேன் என்பதை மறக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.
மனதைவிட்டு அகலாத துரந்தர்...
இது சர்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்னும் துரந்தர் படம் என் மனதை விட்டு அகலவில்லை. ஆதித்யா தார் நீங்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறந்த இயக்குநர்.
அமைதியில் இருந்து மூர்க்கமான பயணம். தொடர்ச்சியான உழைப்பு உன்னுடையது ரன்வீர் சிங். அக்ஷய் கண்ணா எப்போதுமே எனக்குப் பிடித்தவர். இதுதான் அதற்கு காரணம்.
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுகள். குறிப்பாக ஒப்பனை கலைஞர்களுக்கு வாழ்த்துகள். இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.