

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நடிகை தன் வழக்கின் தீர்ப்பு குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017, பிப்ரவரி 17-ஆம் தேதி பிரபல மலையாள நடிகை பயணித்த காரில் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை செல்போனில் படம்பிடித்தது. கேரளத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பிரதான குற்றவாளியான என்.எஸ்.சுனில் சிறையில் இருந்தபடி நடிகர் திலீப்புக்கு கடிதம் அனுப்பினார். இதன் அடிப்படையில், 2017 ஜூலையில் திலீப் கைது செய்யப்பட்டார். பின்னர், அக்டோபரில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதலில் 2017, ஏப்ரலில் 7 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிவில், நடிகர் திலீப் மற்றும் சார்லி தாமஸ், சனில் குமார், சரத் ஆகிய 3 பேர் இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர். என்.எஸ்.சுனில், மார்ட்டின் ஆன்டனி, பி.மணிகண்டன், வி.பி.விஜேஷ், எச். சலீம், பிரதீப் ஆகிய 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீர்ப்பு குறித்து பதிவொன்றை அந்த நடிகை வெளியிட்டுள்ளார்.
அதில், “8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாள்கள் கழித்து இந்த நீண்ட வலிமிகுந்த பயணத்தில் நான் இறுதியாக சிறிய வெளிச்சத்தைக் காண்கிறேன். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில் நன்றி கொண்டிருக்கிறேன்.
என்னுடைய வேதனையைப் பொய்யென்றும் இந்த வழக்கைக் கற்பனைக் கதையென்றும் சொன்னவர்களுக்கு இந்த தருணத்தைச் சமர்பிக்கிறேன். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
மேலும், குற்றவாளி எண் 1 என் தனிப்பட்ட ஓட்டுநர் என சிலர் கூறிக்கொண்டே இருக்கின்றனர். இது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநரும் அல்ல, என் ஊழியரும் அல்ல, எனக்கு அறிமுகமானவரும் அல்ல. 2016-ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்திற்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முன்பின் அறியாத நபர் அவர். அப்போது ஓரிரு முறை மட்டுமே அவரைப் பார்த்தேன். அதன் பின், அந்தக் குற்றம் நடந்த நாள்வரை மீண்டும் அவரை சந்தித்ததே இல்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்!
இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், எனக்கு இல்லை. 2020-லிருந்தே ஏதோ சரியில்லை என்ற உணர்வு எனக்குள் உருவாகத் தொடங்கியது. குறிப்பாக, ஒரு குற்றவாளியைப் பொருத்தவரை, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பினரும் கவனித்தனர்.
இடைப்பட்ட இந்தக் காலங்களில், நான் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் நாடி இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்பதைக் கூறினேன். இந்த வழக்கை அதே நீதிபதியிடமிருந்து மாற்ற வேண்டும் என்கிற ஒவ்வொரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
பல ஆண்டுகளின் வலி, கண்ணீர், உணர்வுப் போராட்டத்தைக் கண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். “இந்த நாட்டில் சட்டத்திற்கு முன் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை”.
இந்தப் பயணத்தில் என்னுடன் துணை நின்றவர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு, என்மேல் அவதூறுகளைப் பொழிந்து, கதைகட்டியவர்கள் மேலும் பணத்தை வாங்கிக்கொண்டு அதை தொடர்ந்து செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.