

ஏஐ தொழில்நுட்பம் மூலம் தொடர்ச்சியாக நடிகைகளைக் கவர்ச்சியாக சித்திரித்து வருகின்றனர்.
இன்று சமூக வலைதளப் பயனராக ஒருவர் இல்லையென்றால் அவருக்கும் உலகிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதுபோல் ஆகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு நொடிகளையும் தீர்மானிக்க வல்லவையாக இணையப் பயன்பாடு பெருகிவிட்ட நேரத்தில் அதனால் பல சாதகங்கள் இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் மோசமான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தற்போது, அதில் முன்னணி வகிப்பது ஏஐ தொழில்நுட்பம்தான். இறந்தவரை உயிருடன் இருப்பதுபோல் மாற்றுவது, பழைய புகைப்படங்களுடன் இன்றைய தோற்றத்தைப் பொறுத்துவது, டீ ஏஜிங் செய்து நம் பழைய காலத்தைத் திரும்பிப் பார்ப்பது என மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் பல கட்டளைக் கருவிகள் இருந்தும் சிலர் நடிகைகளின் புகைப்படங்களை உண்மைக்கு நெருக்கமாக மிக கவர்ச்சியாக மாற்றி சமூக வலைதளங்களில் அதனை பகிரும் போக்கு அதிகரித்து வருகிறது.
போட்டோஷாஃப் காலத்தில் தலையை மட்டும் ஒட்டி வைக்கும் ஜால வேலைகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ஏஐ 99% துல்லியமாக இருப்பதால் எது உண்மை, எது போலி என்பதை நீண்ட யோசனைக்குப் பின்பே அடையாளம் காண முடிகிறது.
சமூக வலைதளப் பயனர்களுக்கு இதனால் பெரிய ஆபத்துக்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. நடிகைகளை மிக கவர்ச்சியாக மாற்றினால் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இப்படியான புகைப்படம் இருக்கிறதா என பார்த்து முடிவுக்கு வரலாம்.
ஆனால், குடும்பப் பெண்கள், இளம் யுவதிகள் பலரும் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும்போது இந்த ஏஐ ஆசாமிகளால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அது, சமூகத்திலும் பல குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
ஏற்கனவே, சில நடிகைகள் தங்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் தவறாக சித்திரிப்பவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க கோரி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதில் நடிகை ரஷ்மிகாவின் புகைப்படங்களை மோசமாக சித்திரித்தவர் கைதும் செய்யப்பட்டார். அதேபோல், ஏஐ-யால் மன வேதனை ஏற்படுவதாக பல நடிகைகளும் குற்றம்சாட்டி இதற்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டுமென பேசியும் வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலாவின் புகைப்படங்களும் தவறாக சித்திரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இதனைக் கண்டித்து தற்போது ஸ்ரீலீலாவும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஏஐயை தடுக்க முடியாது என்றாலும் இப்படி மோசமான சித்திரிப்புகளை மேற்கொள்ளும் நபர்களைக் கண்டடைந்து கடுமையான தண்டனை கொடுக்கக் கூடவா முடியாது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். நடவடிக்கை எடுப்பார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.