
கடந்த 2025 ஆம் ஆண்டில் ஏராளமான தொடர்கள் தொடங்கப்பட்டிருந்தாலும் சில தொடர்கள் மட்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புடன், டிஆர்பி புள்ளிகளை அதிகம் பெற்றுள்ளது.
அந்த வகையில், ரசிகர்களிடையே கவனம் பெற்ற சிறந்த 10 தொலைக்காட்சித் தொடர்கள் எவை என்பதைக் காண்போம். இது பொதுவான பட்டியல்தான், இதில் ஒரு சில தொலைக்காட்சி ரசிகர்களின் கருத்து சற்று வேறுபடலாம்.
கிராமத்தில் பிறந்த விவசாயி மகள், ஆட்சியராக வேண்டும் என்ற லட்சியத்துடன் நகரத்திற்கு வந்து அவர் சந்திக்கும் சூழலை பிரதானபடுத்தி சிங்கப் பெண்ணே தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ், அமல்ஜித் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் தனுஷ், சிங்கப் பெண்ணே தொடரை இயக்குகிறார். சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிங்கப் பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கிராமத்தில் தந்தையுடன் வளர்ந்த நாயகி, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அதன், பின்னர் அப்பெண், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்களே மூன்று முடிச்சு தொடரின் மையக்கரு.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
மருமகள் தொடரில் கேப்ரியல்லா - ராகுல் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கட்டாயத் திருமணம் செய்துகொள்ளும் நாயகன் மற்றும் நாயகி இடையேயான உறவு எவ்வாறு காதலாக மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
4 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தந்தையை இழந்த கயல் என்ற பெண்ணை மையப்படுத்தி இத்தொடரின் கதை எடுக்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். விகடன் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார்.
கூட்டுக் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பாணியில் சுவாரசியத்துடன் இந்தத் தொடரில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்படும் பெண், தன்னுடைய உழைப்பினால் எப்படி சுயமாக முன்னேறுகிறாள் என்பதை வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டிருந்தது.
பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியில் 2020ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. பாக்கியலட்சுமி தொடர் நிறைவடைந்து இருந்தாலும், இந்தாண்டின் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடராக இன்றளவும் பேசப்படுகிறது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகிவந்த ராமாயணம் தொடருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருந்த ராமாயணம் தொடர் அண்மையில் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து அனுமன் தொடர் ஒளிரப்பாகி வருகிறது. ராமாயணம் தொடரும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத தொடராகவுள்ளது.
திருமுருகன் இயக்கும் எதிர்நீச்சல் - 2 பார்வதி, ஹரிபிரியா, பிரியதர்ஷினி பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பெண் சுதந்திரத்தை பிரதானப்படுத்தியே எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. வாரத்தின் ஏழு நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டுக் குடும்பத்தில் அவரின் ஈடுபாட்டால் குடும்பம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதை மையப்படுத்தி அய்யனார் துணை தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ரோசரி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு, தீப்தி, அச்சயா ராய், முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மாமன் மகனான கார்த்திக்கை (பரத் குமார்) விரும்பும், அத்தை மகள் அன்னம் (அபி நட்சத்திரா), ஆனால் ரம்யாவை (பிரியங்கா ஷிவன்னா) கார்த்திக் காதலித்தார். பெற்றோர் நிர்பந்தத்தால் அன்னத்தை கார்த்திக் திருமணம் செய்துகொள்கிறார். இதனால் கார்த்திக்கை பழிவாங்க நினைக்கிறார் ரம்யா. ரம்யாவிடம் இருந்து கார்த்திக்கை எவ்வாறு காப்பாற்றுகிறார் அன்னம். இதுவே அன்னம் தொடரின் மையக்கரு.
இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அன்னம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்தத்தொடர்களைத் தவிர்த்து கார்த்திகை தீபம், பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அனுமன் உள்ளிட்ட தொடர்களும் 2025 ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: 2025: பஹல்காம் தாக்குதல் முதல் டிரம்ப் அறிவிப்புகள் வரை..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.