

இந்தியா - பாகிஸ்தான் மோதல் : 2025-ல் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று - பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும்!
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகளவில் ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ், கம்போடியா - தாய்லாந்து, ஈரான் - கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், 2025 மத்தியில் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை தாக்கி இந்திய பாதுகாப்புப் படை அழித்தது.
இதனைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் மோதல், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஹல்காம் தாக்குதல்
ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே உலுக்கியது.
2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் 47 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழு பொறுப்பேற்பதாக அறிவித்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த குழுவின் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்தது.
தூதரக உறவுகள் துண்டிப்பு
பஹல்காம் தாக்குதலின் போது, செளதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு தில்லி திரும்பினார்.
ஏப்ரல் 23 ஆம் தேதி, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தானுடனான அனைத்து தூதரக ரீதியிலான உறவுகளையும் துண்டிக்க தீர்மானிக்கப்பட்டது.
அவற்றில் முக்கியமானவை, 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, சார்க் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற்றம். மேலும், அட்டாரி - வாகா உள்பட பாகிஸ்தானுடன் தொடர்புடைய அனைத்து சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் மறைமுகப் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
ஏப்ரல் 24 ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுக்கு முழு ஆதரவு வழங்கப்பட்டது.
அசீம் முனீரின் சர்ச்சை பேச்சு
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி (தற்போது முப்படை தலைமைத் தளபதி) அசீம் முனீர், பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, மே 16 ஆம் தேதி, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பேசுகையில், காஷ்மீர் என்பது பாகிஸ்தானின் உயிர்நாடி ரத்தநாளம் போன்றது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும் என்றும், காஷ்மீரி சகோதரர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றும் அவர் ஆவேசமாக பேசிய விடியோக்கள் வைரலாகப் பரவின.
இவரின் சர்ச்சைக் கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சரியாக ஒரு வாரத்தில் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர்
மே 7 நள்ளிரவில், இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து நடத்திய அதிதுல்லிய தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன.
மறுநாள் காலை செய்தியாளர்களை சந்தித்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
“நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை 25 நிமிஷங்களில் இந்தத் தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தான் மக்கள் அல்லது ராணுவ முகாம்களை குறிவைக்கவில்லை. மக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தான் குடியிருப்பு பகுதிகளையும், மத வழிபாட்டு தலங்களையும் குறிவைத்து இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதாகவும், மக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், இந்த தாக்குதலை போராக கருதுவதாக அறிவித்தது.
மே - 7
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த 72 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்களும் பதில் தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது, இந்தியாவின் 3 ரஃபேல், ஒரு மிக்-29, ஒரு எஸ்யூ-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, பூஞ்ச், ரஜோரி, குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் உள்ளிட்ட எல்லையோர இந்திய கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடத்தினர். இதில், 11 இந்திய மக்கள் கொல்லப்பட்டனர், பல வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்தன. இதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.
மே - 8
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோவில் உள்ளிட்ட இந்திய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. இந்த தாக்குதல்களை ஆதம்பூர் விமானப் படைத் தளத்தில் உள்ள எஸ் - 400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பின் மூலம் இந்தியா முறியடித்தது.
இதனிடையே, லாகூர், கராச்சி, பஞ்சாப் பகுதிகளை தாக்க முயற்சித்த இந்திய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. இருப்பினும், இரு நாடுகளும் ட்ரோன் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தன.
தெற்காசியாவில் அணு ஆயுதங்கள் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முதல் ட்ரோன் மோதல் இதுவாகும்.
மே - 9
மே 9 ஆம் தேதி அதிகாலை இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி அமைதி காத்தது. சுமார் 13 மணிநேர அமைதிக்குப் பிறகு இரவு மீண்டும் எல்லையோர பகுதிகளில் இருநாட்டு ராணுவமும் துப்பாச்கிச் சூடுகள் நடத்தின. பாரமுல்லா முதல் புஜ் வரை 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
அன்றிரவே, இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட போர்க் கப்பல்கள் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டன.
மே - 10
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் உள்ளிட்ட விமானப் படைத் தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது. சிர்சா விமானப் படைத் தளத்தை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணையை ஃபதா - 2 பாதுகாப்பு அமைப்பு வழிமறித்து தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் நூர் கான் விமானப் படைத் தளத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றது. மேலும், ரஃப்கி, முரித், சக்லாலா உள்பட பல விமானப் படைத் தளங்கள், ரேடார் நிலையங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனிடையே, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் முக்கிய விமானப் படைத் தளங்கள், பியாஸ் மற்றும் நக்ரோட்டாவில் உள்ள பிரம்மோஸ் சேமிப்பு மையங்கள், எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு ஆகியவை அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 4 விமானப் படைத் தளங்களில் சிறிய சேதங்கள் மட்டுமே ஏற்பட்டதாக இந்தியா தெரிவித்தது. பிரம்மோஸ் சேமிப்பு மையங்கள் மற்றும் எஸ் 400 அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
சைபர் தாக்குதல்
இந்திய ராணுவ செயற்கைக்கோள்கள், அரசு இணையதளங்கள் மற்றும் முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. ஒரே நாளில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஊடுருவல் முயற்சிகள் பதிவானதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் பாஜக, குற்றவியல் ஆராய்ச்சி புலனாய்வு நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, ஆதார் உள்ளிட்ட வலைதளங்கள், இந்திய விமானப் படையின் தரவுகள் ஆகியவை சமரசமானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் பன்யான் மார்சூஸ் எனப் பெயர் வைக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நிறுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது, இரு நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிக்கெட் தொடர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் தர்மசாலா திடலில் நடந்துகொண்டிருந்த போது, ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக விளக்குகள் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கிரிக்கெட் வீரர்களும், பார்வையாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அனைத்துப் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதேபோல், ராவல்பிண்டி திடலில் நடைபெற்று வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் போர்ப் பதற்றம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டது இதுவே முதல்முறை.
போர் நிறுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் எந்நேரமும் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை மே 10, சனிக்கிழமை அன்று அமெரிக்கா தொடங்கியது.
பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் நீண்ட ஆலோசனைகள் நடத்தினர்.
பின்னர், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேசிக்கொண்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக மே 10, மாலை 5 மணியளவில் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார்.
தொடர்ந்து, இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் போர் நிறுத்தத்தை உறுதி செய்தனர். பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், இந்திய தரப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்தியா - பாகிஸ்தான் மோதல் நீடித்தால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்து, போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ், “இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா? பாகிஸ்தானுடன் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதா?” உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதால் மட்டுமே நிறுத்தியதாக விளக்கம் அளித்தது. டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிட்டு, அவரின் கருத்தை மறுப்பதாக தெரிவிக்கவில்லை.
டிரம்ப்பின் அறிவிப்பும், அரசியலும்...
பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டதால் மட்டுமே போரை நிறுத்தியதாக இந்தியா அறிவித்த பிறகும், தொடர்ந்து 60 முறைக்கு மேல் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான், வர்த்தகத்தை முன்வைத்துதான் போர் நிறுத்தப்பட்டதாக தீர்க்கமான கருத்தை பல்வேறு தருணங்களில், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும்போதும் டிரம்ப் தெரிவித்து வருகின்றார். 6 மாதங்களாகியும் தற்போது வரை தனது கருத்தில் இருந்து டிரம்ப் பின்வாங்கவில்லை.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் முப்படைத் தளபதி அசீம் முனீருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் டிரம்ப். இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு இரண்டு முறை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்து அசீம் முனீர் பேசியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் டிரம்ப் தலையீட்டால்தான் நிறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பும், பாகிஸ்தான் பிரதமர் சிறந்த தலைவர் என்று டிரம்ப்பும் பரஸ்பர பாராட்டுகளை பகிர்ந்துகொண்டனர். மேலும், ‘ஏணி சின்னத்தில் ஒரு குத்து, தென்னை மர சின்னத்தில் ஒரு குத்து’ என்பதைப் போல, பிரதமர் மோடியும் சிறந்த தலைவர், எனது நண்பர் என்று பாராட்டினார் டிரம்ப்.
அதேசமயம், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவை மிரட்டும் வகையில் 50% வரி விதித்துள்ள டிரம்ப், பாகிஸ்தானில் அந்நாட்டு அரசுடன் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கை மேம்படுத்தப் போவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
மேலும், ‘யாருக்குத் தெரியும், ஒருநாள் இந்தியாவுக்குகூட அவர்கள் எண்ணெய் விற்பனை செய்யக்கூடும்’ என டிரம்ப் குறிப்பிட்டார்.
தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார். எந்த நாட்டின் விமானங்கள் எனக் குறிப்பிடாத டிரம்ப், எண்ணிக்கையை மட்டும் நாளுக்குநாள் 7, 8 என மாறிமாறி கூறிவருகிறார்.
முப்படை தலைமைத் தளபதி ஒப்புதல்
சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் மே 31 ஆம் தேதி பேசிய இந்திய முப்படை தலைமைத் தளபதி அனில் செளகான், இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை முதல்முறையாக ஒப்புக்கொண்டார்.
“பாகிஸ்தானுடனான சண்டை யில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது முக்கியமல்ல. ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கண்டறிவதுதான் முக்கியமானது.
இந்த இழப்பு மூலம், எங்களின் போர்த் தந்திரத்தில் ஏற்பட்ட தவறை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தத் தவறை உடனடியாக சரிசெய்து, 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் வெற்றிகரமாக இயக்கினோம்.” என்றார்.
நாடாளுமன்றத்தில் விவாதம்
நாடாளுமன்றத்தில் ஜூலை மாதம் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.
அப்போது, “உரி, பாலக்கோட்டை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்பதற்கு பதிலளிக்க வேண்டும்” என காங்கிரஸ் தெரிவித்தது.
இந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நமது போர் விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்பது எதிர்க்கட்சிகளின் தொடர் கேள்வியாக உள்ளது. ஆனால், பாகிஸ்தான் விமானங் கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்று அவர்கள் ஒருமுறைகூட கேட்கவில்லை. நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றால், நமது வீரர்கள் யாரும் காயமடைந்தார்களா? என்று கேள்வி எழுப்புங்கள். அதற்கு இல்லை என்பதே பதில்.
தேர்வு எழுதும் போது அதில் முடிவுதான் முக்கியம். பென்சில் உடைந்துவிட்டது. பேனா தொலைந்துவிட்டது என்பதெல்லாம் முக்கியமல்ல. இந்திய விமானப் படை தளங்கள் உள்பட எந்த முக்கியமான சொத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.” என்றார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.
மோடி பேச்சு
நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, “பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து இந்தியாவை எந்த நாடும் தடுக்கவில்லை. ஐ.நா.உறுப்பு நாடுகளில் (193) வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன.
இந்தியாவின் தாக்குதலை இனியும் தாங்க முடியாது; இனியும் பாதிப்பை எதிர்கொள்ள முடியாது என்று கெஞ்சும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது” எனத் தெரிவித்தார்.
ஆனால், பிரதமரின் உரையில் அமெரிக்கா, டிரம்ப் என்ற இரு வார்த்தை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் கேள்வி
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி கூறுவாரா என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகளைத் தாக்கக் கூடாது என இந்திய ராணுவத்துக்கு கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு செய்த மிகப்பெரும் தவறு எனவும் அவர் கூறினார்.
பயங்கரவாதிகள் கொலை
பஹல்காமில் தாக்குதல் நடத்திய மூன்று பயங்கரவாதிகள், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
அவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முதல் நிலை கமாண்டர் சுலைமான் என்ற ஃபைசல், அதே பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆப்கானி, பயங்கரவாத நடவடிக் கைகளில் ஈடுபட்டதால் தேடப்பட்ட ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டது.
பஹல்காம் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதிகள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவதற்கு முன்னதாக கொல்லப்பட்டனர்.
எம்.பி.க்கள் குழு
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் அடங்கிய குழு ஜூன் மாதத் தொடக்கத்தில் பயணம் மேற்கொண்டது.
இந்த குழுக்களுக்கு காங்கிரஸின் சசி தரூர், திமுகவின் கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் தலைமைத் தாங்கினர்.
டிரம்ப் - மோடி நட்பில் விரிசலா?
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், டிரம்ப் மற்றும் மோடி இடையிலான நட்பில் கடும் விரிசல் ஏற்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்தது.
அதற்கேற்ப, டிரம்ப்பும் மோடியும் நேரில் சந்திப்பதற்கான பல தருணங்கள் ஏற்பட்ட போதிலும், அதனை மோடி தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.
ஜூன் மாதம், கனடாவில் நடைபெற்ற ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற டிரம்பை மோடி சந்திக்கவில்லை. அவர் கனடாவில் இருந்து புறப்பட்ட பிறகே சென்றார்.
அக்டோபர் மாதம், இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக எகிப்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டுக்கு டிரம்ப் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்துகொள்ளவில்லை.
நவம்பர் மாதம், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று டிரம்ப் அறிவித்த நிலையில் மோடி பங்கேற்றார்.
2025 நிறைவடையும் நிலையில், இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானால் வீழ்த்தப்பட்டனவா? இல்லையா? ஆம், என்றால் எத்தனை? வர்த்தகத்தை முன்வைத்து இந்த மோதலைத் தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது பொய் என்று மோடி வெளிப்படையாக அறிவிப்பாரா? உண்மையில் நடந்தது என்ன?எந்தக் கேள்விகளுக்கும் பதில் இல்லை. 2026 பதிலளிக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.