

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மலையாள நடிகை தன் மீது சுமத்தப்படும் வக்கிரமான வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய பதிவினைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் மிகுந்த வருத்தத்துடன் தான் காவல்துறையிடம் புகார் தெரிவிக்காமல் தற்கொலை செய்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவறு செய்துவிட்டேன், தற்கொலை செய்திருக்க வேண்டும்...
எனக்கு எதிராக குற்றம் நடைபெற்ற பிறகு நான் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவித்து, சட்ட நடவடிக்கை எடுக்க முனைந்தது மிகப்பெரிய தவறென நினைக்கிறேன்!!
நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும். யாரிடமும் எதுவும் சொல்லியிருக்கக் கூடாது. அன்று நடந்ததெல்லாம் விதி என்று அமைதியாக இருந்திருக்க வேண்டும்.
பிறகு விடியோ வெளியாகியதும், காவல்துறையில் புகார் அளிக்காத என்னிடம் கேள்வி கேட்பவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
என்னை வாழ விடுங்கள்...
விடியோ எடுத்த, குற்றம்சாட்டப்பட்ட இரண்டாவது நபர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு செல்வதைப் பார்த்தேன். அவர் சிறைக்குச் செல்லும்முன்பு அவரிடம் சென்று, நான்தான் உங்களை நிர்வாணமாக விடியோ எடுத்தென் எனக் கூறியிருக்க வேண்டும்!!
இதுமாதிரியான வக்கிரங்கள் நிரம்பிய தகவல்களைப் பேசுபவர்கள், அதைப் பரப்புகிற உங்களுக்கும் உங்கள் வீட்டார்களுக்கும் இதுபோல நடக்கக் கூடாது!!
பாதிக்கப்பட்ட பெண்ணாக அல்ல, ஒரு சாதாரண மனிதியாக சொல்கிறேன்!!
என்னை வாழ விடுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகைக்கு, கடந்த 2017-இல் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர் பல்சர் சுனில் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் வருத்தம் கொண்ட நடிகையின் பதிவுக்கு பல நடிகைகள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.