அதீத வன்முறை - கலைச் சுதந்திரமா? அபாய போக்கா?

வன்முறை திரைப்படங்கள் குறித்து...
actors nani, rajinikanth, ranveer singh
நடிகர்கள் நானி, ரஜினிகாந்த், ரன்வீர் சிங்
Updated on
4 min read

2025-ல் பெரும்பாலான திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகளை மையமிட்டே உருவாக்கப்பட்டிருந்தன.

”இன்றைய திரைப்படங்களில் வன்முறைகள் திரில்-காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வன்முறை ஆடம்பரமான அலங்கார பொருள் கிடையாது. அது உண்மையைக் காட்டுவதாக இருக்க வேண்டும். மகிழ்ச்சிக்கான விஷயமாக இருக்கக்கூடாது” சொன்னவர் உலகம் வியக்கும் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸசி.

இன்னொருவர் இருக்கிறார். அவர் சொல்கிறார், “என்னைப் பொருத்தவரை சினிமா என்பது இயக்குநரின் கற்பனை. அதில் வன்முறை நல்ல பொழுதுபோக்கு. அந்த வன்முறையை நீக்கச் சொல்வதென்பது ஓவியனிடம் அவன் வரைந்த ஓவியத்திலிருந்து நிறங்களை நீக்கச் சொல்வதுபோல”. வேறு யார்? இயக்குநர் குயிண்டன் டாரண்டினோதான்.

நம்மூரில் ஆக்சன் திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர்களுக்கு மேலே சொன்ன இரு இயக்குநர்கள்தான் சீன் ஃபாதர் மாதிரி. ஆனால், இவர்களிடமிருந்து உத்வேகம் அடைந்த நம்முடைய சினிமாக்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை நோக்க வேண்டும். டாரண்டினோவையும், மார்டின் ஸ்கார்ஸசியையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு திரைக்குக் கதை சொல்ல வந்தவர்கள் எத்தனை பேர் அந்த இடத்தை அடைந்தார்கள்? டாரண்டினோவை தமிழகத்தில் அழுத்தமாக அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் ஓரளவேனும் வெற்றி கண்டவராக கார்த்திக் சுப்புராஜைத்தான் சொல்ல வேண்டும். அவரே ரெட்ரோவில் சினிமாவை கலையாகச் சொல்வதா இல்லை ஸ்டைலாக சொல்வதா என்கிற குழப்பத்தில் பழைய கா.சு.வைத் தொலைத்து தடுமாறினார்.

இன்று டாரண்டினோவும் மார்டின் ஸ்கார்சியும் நம்மூர் திரைப்படங்களைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? நிச்சயமாக ஆஹோ ஓஹோ என்பது சாத்தியமில்லை. காரணம், இந்திய சினிமாவில் ஆண்டிற்கு ஆண்டு வன்முறைக் காட்சிகள் உச்சங்களை நோக்கி நகர்ந்தாலும் அதன்பின்பான உணர்வுகளோ லாஜிக்குகளோ நியாயமாகப் பதிவு செய்யப்படுவதில்லை. சில திரைப்படங்கள் விதிவிலக்காக அமைந்தாலும் பெரும்பான்மை படங்களில் ரத்த ஆறு ஏன் ஓடுகிறது; எதற்கு ஓடுகிறது என்பதே தெரிவதில்லை.

திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்காக பாருங்கள் என்கிற விமர்சனங்களைப் பார்க்கிறோம். பொழுதுபோக்கிற்காக இங்கு யாரும் இன்னொருவரை விதவிதமாக கொலை செய்வதில்லை; கூரான ஆயுதத்தைப் பார்த்தாலே நமக்கு மரண பயம் வந்துவிடுவதை நீங்கள் கவனிக்கலாம். பார்ப்பதற்கு விசித்திரமாகவும் குரூரமாகவும் இருப்பவை எல்லாம் நம் உயிரை எடுக்க வந்தவையோ என்கிற எண்ணங்களையே கடந்த சில ஆண்டுகளாக பான் இந்திய திரைப்படங்கள் முன்வைத்தும் வருகின்றன.

ஹிட் - 3, கூலி, காந்தாரா - 1, தூரந்தர், ஓஜி என அண்மைகால திரைப்படங்களும் அழுத்தமான வன்முறையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருந்தன. பிரம்மாண்ட பட்ஜெட் என்றாலே வன்முறை இருந்தால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு கதை மற்றும் உணர்வுகள் குறித்து எதுவும் தெரியாமல் இல்லை. அவர்களுக்கு திட்டமிட்ட வணிக நடைபெற வேண்டுமென்றால் அதற்கு மட்டும் உழைத்தால் போதும்.

அப்படி வந்த திரைப்படங்களே ஹிட் - 3, கூலி, ஓஜி ஆகியவை. இப்படங்களின் வன்முறைகள் இடம்பெற்றதற்கான தேவை என்னவென்றே தெரியவில்லை. ஹிட் - 3 திரைப்படத்தில் குரூரமான காவல்துறை அதிகாரியான நானி குற்றவாளிகளைச் சின்னா பின்னமாக கொத்துக்கறி போட மட்டுமே ஆசைப்படுகிறார்.

கூலியைக் குறித்து என்ன சொல்வது? திரும்பிய பக்கமெல்லாம் லோகேஷ் கனகராஜ் விமர்சிகப்பட்டு வருகிறார். ரசிகர்களின் ரூ. 150-க்கு இரண்டு ஆண்டுகளாக தூக்கமில்லாமல் உழைத்திருக்கிறேன் என படத்தின் மீது எதிர்பார்ப்பைப் புகட்டிவிட்டு படம் வெளியாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்தபின் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு என்னால் படம் இயக்க முடியாது என சொன்னால் எப்படியிருக்கிறது கதை? எந்த ஒரு எமோஷனல் பின்னணியும் இல்லாமல் வெறுமனே துப்பாக்கி, கத்தி, கொக்கிகளைக் கொண்டு திரைக்கதையை நழுவவிட்டு கதையைப் பற்றி எந்தக் கவலையும் படாத படமாகவே திரைக்கு வந்தது.

கூலி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததற்கான காரணம் படம் நன்றாக இல்லை என்பது மட்டுமல்ல. ரசிகர்களின் சிந்தனைத் திறனை மிகக் குறைவாக எடைபோட்டு பிணங்களை எரிக்க எந்திரம் கண்டுபிடித்து அவர்களின் ரசனையை மட்டமான வன்முறைக் காட்சிகளால் சிதறடிக்கலாம் என நினைத்ததுதான். இந்தியளவில் கவனிக்கப்படும் இயக்குநராகவுள்ள லோகேஷ் கனகராஜ், இவ்வளவு பட்ஜெட்களை கொட்டியும் தன் வன்முறைக் காட்சிகள் லாஜிக்குகளை மறைக்கும் என நம்புகிறார் என்றால் இது ஒரு அபாய போக்குதான்.

ரன்வீர் சிங், பவன் கல்யாண்
ரன்வீர் சிங், பவன் கல்யாண்

அண்மையில், ஆதித்ய தர் இயக்கத்தில் வெளியான ரன்வீர் சிங்கின் துரந்தரின் கதை சில உண்மைகளைப் பேசியிருப்பதால் ஒரு பக்க சார்புநிலை எடுத்த திரைப்படமாக ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், பாகிஸ்தானின் சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ரௌடிகள் எதிராளிகளை வீழ்த்திவிட்டு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தவதையும் உடல்களை நார்நாராக கிழிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைப்போன்ற பல தகவல்களைக் கொண்டு ஆதித்ய தர் நாயகன் ரன்வீர் சிங்குக்கான ஓர் காட்சியில் சில ரௌடிகள் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்வதும், அக்‌ஷய் கன்னா ஒருவரை எடைக்கல்லைக் கொண்டே மண்டையை உடைத்து மூளைச் சிதறவைக்கும் காட்சிகளையும் அமைத்திருந்தார். பாக். ரௌடிகளின் வழக்கங்கள், தாக்குதல் குணங்கள் ஆகியவற்றை கட்டுங்கடங்காத ஆக்‌ஷன் காட்சிகள் வழியாகவே பதிவு செய்திருந்தாலும் இதனை முற்றிலுமான கண்மூடித்தமான திரைப்படமாகக் குறுக்கவும் முடியவில்லை. காரணம், படத்தில் இடம்பெற்ற வன்முறைக்கான தருணங்களை கதாபாத்திரங்களின் குண உந்துதல்களுடன் கச்சிதமாக எழுதியிருந்தது ஓர் காரணம். 3.30 மணிநேர சினிமா அனைத்து கிராஃப்ட்களிலும் கச்சிதமாக அமர்ந்திருந்தது. இதனால், சில உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்பதால் மதரீதியான விமர்சனங்களைத் தடுக்கும் கேடயத்தை இயக்குநர் பயன்படுத்திக்கொண்டார்.

எதார்த்த சினிமா என்றில்லாமல் ஹாரர் வழியாகவும் இந்த சுதந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம், இயக்குநர் ராகுல் சதாசிவன் - நடிகர் பிரணவ் மோகன்லால் கூட்டணியில் வெளியான டீயஸ் ஈரே (dies irae) திரைப்படத்தில் இடைவேளைக் காட்சி ஒன்று உண்டு. நாயகியின் தம்பிக்கு அசம்பாவிதம் ஒன்று நிகழ்கிறது. அக்காட்சியைத் திரையரங்களில் கண்டவர்களில் பாதி பேர் கண்களை மூடியிருப்பார்கள். உக்கிரமான அந்த ரத்தப்போக்கு காட்சி அப்படத்தின் மனநிலைக்குச் சரியாகப் பொருந்தியது. இயக்குநர் அக்கதையின் மூலம் ஒரு குரூர நிகழ்வைக் கலைச் சாதகமாக மாற்றிக்கொண்டார். இதன் மேல் யாருக்கும் எந்த குற்றச்சாட்டும் எழவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அப்பையனுக்கு நிகழந்தது ஒரு வன்முறைதான் என்றாலும் செய்தது யார்? என்கிற கேள்விக்கு அமானுஷ்ய பின்னணி அதிலிருந்து வெளியேற உதவியது. இயக்குநர் அந்த ஜாக்பாட் சுதந்திரத்தைப் பயன்படுத்தினார்.

வலுவான நாயகன் என்றாலே தாக்க வருவோரையெல்லாம் தூக்கி போட்டு ரத்தம் சிதற அடித்து நொறுக்கிக் கொண்டே இருக்க வேண்டுமென அவசியமில்லை. நல்ல காட்சிகளுடன் வசனங்கள் இருந்தாலே ரசிகர்கள் அந்தக் கதாபாத்திரத்தை உள்ளிழுத்துக் கொள்கின்றனர். கைதி திரைப்படத்தில் கார்த்தி (தில்லி) தன்னைக் குறித்து சொல்லும்போது, ‘10 வருசமா ஜெயில்ல இருந்ததுதான தெரியும்? அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன்னு தெரியாதுல்ல’ என்கிறார். இந்த ஒரு வசனமே தில்லி யாராக இருக்கும் என்பதை கற்பனையில் விரித்துப் பார்க்க போதுமானதாக இருக்கிறது.

ஆனால், இன்று பெரும்பாலும் வன்முறையை நம்பி வேண்டுமென்றே அபத்தமான உலகம் உருவாக்கப்படுகிறது. வலுவில்லாத கதாபாத்திரங்கள், நேர்மையில்லாத எழுத்து என அவை ரசிகர்களின் வன்முறை டோபமைனை மட்டும் நம்பி மந்தைத்தனமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்காக ஆக்சன்களை மையமாக வைத்து உருவாக்குவதே தவறு எனச் சொல்லவில்லை. எந்த முகாந்திரமும் இல்லாத வெற்று ரத்தக்களறிகள்தான் ஆபத்தானவை. கூலியில் சௌபின் சாகர் மண்டையில் நாகர்ஜூனா சுத்தியலை அடிப்பது, ஹிட் - 3 படத்தில் நானி கோடாரியால் எதிரிகளின் உடல் பாகங்களை வெட்டியே அகற்றுவது என கண்களை மூடச்செய்யும் வன்முறைகள் அதற்கான வலுவான பின்னணிகளை வைத்திருக்கின்றனவா?

இது, அர்த்தமில்லாத வன்முறை ஒரு ஏமாற்று வேலை என்பதையும் அது வன்முறையை இயல்பாக்கும் என்பதையுமே சுட்டுகிறது. மனிதன் அடிப்படையில் வன்முறைக்கான தருணத்தை அன்றாடம் கற்பனை செய்துகொண்டிருப்பன்தான். ஆழ்மன குழப்பங்கள், குற்றவுணர்வுகள், பழியுணர்ச்சி ஆகியவை முன்னிருத்தி உருவாக்கப்படும் திரைப்படங்களில் வெளிப்படும் வன்முறையே கலையாகக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், கில் பில் போன்ற ஸ்டைலான படங்களாக இருக்க வேண்டும்.

தல்லுமலா, ஆழாப்புழா ஜிம்கானா படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் கலித் ரஹ்மான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார். ஆனால், இதில் எந்த வகைக்குள்ளும் அடங்காமல் வெறும் ஆயுதக் கையாடல்களையும் ரத்தச் சொட்டுகளை மட்டுமே நம்பி உருவாக்கப்படும் திரைப்படங்கள் வன்முறையின் எல்லை தெரியாதவர்களுக்கு, அதனை மடியில் அமர்ந்து ஊட்டிவிடும் அபத்தங்களாகவே வெளிப்படும்.

அடுத்தாண்டும் பல ஆக்சன் அதிரடியான திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. உண்மையில், இதுவரை காட்டிய வன்முறையிலிருந்து இன்னும் மேலேழுவார்கள். இதற்கு மேல், என்ன காட்டப்போகிறார்கள் என்பதில் ஒருவித பதற்றம்தான் எழுகிறது. துரந்தர் - 2, பாரடைஸ், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி என ஊகிக்க முடியாத வன்முறைகள் கண்முன் எழுகின்றன. இதுபோக, விஜய் தேவரகொண்டா உடல் முழுக்க ரத்தத்துடன் அருவாளை ஏந்திக்கொண்டு ரௌடி ஜனார்த்தன் திரைப்படம் மூலம் வருகிறார். நம்மூரில் வடசென்னை அரசனும் வருகிறார். டீசரில், டிரைலரில் காட்டப்பட்ட ரத்தகறையெல்லாம் இன்று சாதாரணமாக அறிமுக போஸ்டர்களிலேயே இடம்பெறுகின்றன. இந்த போக்கு படத்திற்கான வணிகத்தையும் நிர்ணயிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. இதனால், எதிர்காலத்தில் யார், யார் எதை எடுத்து வரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

actors nani, rajinikanth, ranveer singh
2025-ன் ஹாரர் திரைப்படங்கள் ஓர் பார்வை!

இன்று உலகம் முழுவதும் வெளியாகும் ஆக்சன் திரைப்படங்களையும் இணையத் தொடர்களையும் பார்க்கும் ரசிகக் கூட்டம் உருவாகிவிட்டது. எளிதில் அவர்களை திருப்திப்படுத்த முடியாத சூழல்தான் என்றாலும் வன்முறைக்கு பின் இருக்கிற உணர்வுப்பூர்வ தருணங்களையோ அல்லது அழகியலையோ முன்வைக்கத் தெரியாதவர்கள் விதவிதமான கூர் ஆயுதங்களையோ ராணுவ உபகரணங்களையோ கொண்டு எடுக்காத ஒன்றை எடுத்துவிட்டதாக விதந்தோதப்படுகின்றனர்.

ஆனால், இன்று கிடைத்திருக்கிற கலைச் சுதந்திரத்தை வெறும் வணிக நோக்கமாக மட்டும் குறுக்கிக்கொண்டு போலித்தனங்களைப் படைப்பாக முன்னிருத்தினால் அது அபாயமான போக்காகவே மாறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Summary

coolie, dhurundhar, OG - violence movies in 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com