காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்
சிறை - திரை விமர்சனம் (3 / 5)
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான சிறை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சிறைக்குள் 5 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் அப்துல் ரௌஃப்பை (எல்கே அக்ஷய் குமார்) வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்குச் அழைத்துச் செல்லும் பொறுப்பு, எஸ்கார்ட் காவலரான விக்ரம் பிரவுக்கு வழங்கப்படுகிறது. செல்லும் வழியில் அப்துல் தப்பிச் செல்வதற்கான தருணங்கள் காட்டப்படுகின்றன. அந்த இரவு நேரப் பயணத்தில் அப்துல் தப்பித்தாரா? அவர் யார்? ஏன் கொலை நடந்தது? என்கிற கேள்விகள் பரபரப்பான திரைக்கதையில் மெல்ல அவிழ்கின்றன.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தன் முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான கதையுடனே வந்திருக்கிறார். ஒரு சிறைக்கைதிக்குப் பின் இருக்கும் மனப்போராட்டங்களும், வாழ்க்கைக்கான ஏக்கங்களுக்கும் சிறப்பாக காட்டப்பட்டதுடன் கைதிகளின் நிலையைக் கற்பனை செய்ய ஏதுவான உணர்வுகளைப் பின்னணியாக வைத்திருந்தது இப்படத்தினைத் தனித்துவமாகக் காட்டுகிறது. ஜாலியும் கறாருமான காவலர் விக்ரம் பிரபுவின் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை ஏதோ நடக்கப்போகிறது என பரபரப்பான பதற்ற பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது நன்று.
இடைவேளை மற்றும் காதல் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றன. வசனங்களிலும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டதால் சில வசனங்களும் தனித்தனியான கதைகளைச் சொல்கின்றன. முக்கியமாக, நடிகர் மூணார் ரமேஷ் கதாபாத்திரம். ஒரு குற்றவாளி இஸ்லாமியராக இருந்தால் அதிகார அமைப்பு அவரை எப்படி கையாள்கிறது என்பதை அழுத்தமாக ஒரே காட்சியில் சொல்லப்பட்டது மனதை தொந்தரவு செய்ய வைக்கிறது.
இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குநர் தமிழ் எழுதியிருக்கிறார். இவர் காவல்துறையில் பணியாற்றியதால் அதில் கிடைத்த அனுபவங்கள், கடைநிலை காவலர்களின் பணிச்சூழல், அதிகார அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பதால் தமிழ் எழுதும் காவல்துறை சார்ந்த காட்சிகள் சில புதுமையான அனுபவங்களைத் தருகின்றன. முக்கியமாக, இந்தப் படத்தில் எஸ்கார்ட் காவலர்களின் பணிச்சூழல் எப்படி என பதிவாகியிருக்கிறது.
மலையாளத்தில் இலவீழ பூஞ்சிறா, ரோந்து ஆகிய காவல்துறை திரைப்படங்களை இயக்கி கவனம்பெற்ற சாகி கபிர் காவல்துறையில் பணியாற்றியவர்தான். தன் துறையின் அதிகார வரம்புகளை சார்ந்தும் காவலர்களின் பணிச்சூழல் அவர்களின் மனநிலையை எப்படி மாற்றுகிறது என்பதையும் நன்றாக எழுதி வருகிறார். இயக்குநர் தமிழ், நம்மூர் சினிமாவுக்கு அப்படியான பங்களிப்பைச் செலுத்துவதற்குத் தகுதியானவர். தன் முதல் திரைப்படமான டாணாக்கரானில் அழுத்தமான கதையொன்றைச் சொன்னவர், தற்போது சிறையிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதேநேரம், சிறை தனித்துவமான கதையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இருந்தாலும் பாதியில் ஆரம்பித்தது போல் முதல் காட்சிகள் இருந்தது சிறிய குறை. விக்ரம் பிரபுவுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வழங்கியிருந்தால் சிறைத்துறை சார்ந்த சில விஷயங்களைப் பதிவு செய்திருக்கலாம்.
விக்ரம் பிரபு காவலராகவே மாறிவிட்டாரா? என ஆச்சரியப்படுத்தும் உடல்மொழி. வசனங்களைப் பேசும் விதத்திலும் இறுதிவரை தான் இப்படியான ஆள்தான் என்பதை உடைக்காத தோற்றத்தையும் நன்றாகக் கையாண்டுள்ளார். ஆரம்ப காலத் திரைப்படங்களில் மூலம் மிக முக்கியமான நடிகராக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் பிரபு கதை தேர்வுகளில் கவனம் செலுத்ததால் பின்னடைவைச் சந்தித்தார். பின், நீண்ட இடைவேளைக்குப் பின் டாணாக்காரனில் அவருக்கு வெற்றி கிடைத்தது. தற்போது, ’சிறை’ மூலம் தேர்ந்த நடிகராகவும் மிளிர்கிறார்.
தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமார் இப்படத்தின் இரண்டாவது நாயகனாக நடித்திருக்கிறார். சொல்லப்போனால், இவர்தான் நாயகன். அறிமுக திரைப்படத்தில் நடிப்பில் சில குறைகள் தென்படும். ஆனால், அக்ஷய்க்கு அப்படி எதுவும் நிகழவில்லை. கதைக்கு ஏற்ப சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எதார்த்தமான கிராமவாசியாக கோபத்தையும் இயலாமையையும் சரியாகக் கையாண்டிருக்கிறார். கிளைமேக்ஸில் இவர் அழும் காட்சியில் திரையரங்கமே அமைதியடைகிறது. முதல் படத்திலேயே அழுத்தமாக வந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகியாக நடித்த அனிஷ்மா அனில்குமார் அட்டகாசமான தேர்வு. காதலனுக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்பதை தன் உடல்மொழியிலேயே சொல்கிறார். கிளைமேக்ஸில் அவருக்காக கைதட்டியவர்களே அதிகம்.
தொழில்நுட்ப ரீதியாகவும் அனைவரும் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். இரவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. முக்கியமாக, அப்துலுக்கும் கலையரசிக்குமான காதல் பாடலை எடுத்த விதம் அழகு.
எடிட்டர் பிலோமின் ராஜ் தேர்ந்த கலைஞர் என்பதால் கதையை எவ்வளவு பரபரப்பாக்க வேண்டுமோ அவ்வளவு கட்ஸை வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் நெருங்க, நெருங்க ஒருவித பதற்றம் ஆட்கொள்கிறது. இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு சிறப்பான ஜஸ்டிஸ் வழங்கியிருக்கிறார். பின்னணி இசைகள் ஒவ்வொன்றும் கதைச்சூழலுக்கு ஏற்ப அமைக்கபட்டிருந்தது.
சிறையை இந்தாண்டின் சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்றெனச் சொல்லலாம். எளிய மக்கள் அதிகாரங்களால் அடக்கப்படும்போது, கிடைக்கும் சிறிய அதிகாரத்தைக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை பேசியிருப்பது பாராட்டத்தக்கது. காவலர்கள் என்றாலே பொதுமக்களுக்கு எதிரானவர்களாகவே இருப்பார்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அதனை, இப்படம் கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது. உண்மையான சம்பவம் என்பதால் படம் முடிவடையும்போது விக்ரம் பிரபு போன்ற காவலர்கள் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ண வைத்துவிடுவதே சிறையின் வெற்றி.
vikram prabhu's sirai movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
